உலாவியற் படலம் - 1181
வான நாடியரும் இராமனைக் காதலித்தல்
1181.
நான வார் குழல் நாரியரோடு அலால்.
வேனில் வேளொடு. மேல் உறைவார்களோடு.
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே.
நான வார் குழல் நாரியரோடு அலால் - புனுகு (முதலிய
மணப்பொருள்கள்) நிறைந்த நீண்ட கூந்தலுடைய மிதிலைப்
பெண்களோடு மன்மதனுக்கு நடந்த போரினை அல்லாமல்; வேனில்
வேளொடு மேல் உறைவார்களோடு ஆன பூசல் அறிந்திலம் -
இளவேனில் பருவத்துக்குரிய மன்மதனுக்கும் வானக மங்கையர்க்கும்
இடையே என்ன போர் என்று நாம் அறியக் கூடவில்லை; அம்பு
போய் வான நாடியர் மார்பினும் தைத்த - (ஏன் எனில்) மன்மத
அம்புகள் போய் (இராமன் உலாவைப் பார்க்க வந்திருந்து) வான
நாட்டுப் பெண்களின் மார்பகங்களிலும் போய்த் தைத்தன.
இராமன் திருமேனியழகை மேல் நின்று பார்த்துக் கொண்டிருக்க
வான் உலக மங்கையரும் மையல் வயப்பட்டனர் என்பதனைக்
கவித்துவ அழகோடு இவ்வாறு கூறினார். “மண்ணையும்” விண்ணையும்
ஒரு சேரப் பாதித்தது இராமனின் பேரழகு ஆயினும் அவன் யாராலும்
பாதிக்கப்படவில்லை என்பது கருத்து. இராமனின் பேராண்மையைப்
போகும் போக்கில் கவி உணர்த்திச் செல்லும் அழகு இது. 34
