உலாவியற் படலம் - 1177
ஒருத்தி பூவணையில் நெட்டுயிர்த்தல்
1177.
இணை நெடுங் கண் ஒர் இந்து முகத்தி பூ
அணை அடைந்து. இடியுண்ட அரா என.
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட.
உணர்வு அழுங்க. உயிர்த்தனள் ஆவியே.
இணை நெடுங்கண் ஒர் இந்து முகத்தி- (ஒன்றோடொன்று ஒத்த)
இரண்டு கண்களையுடைய சந்திரன் போன்ற முகமுடையாள் ஒருத்தி;
பூ அணை யடைந்து - (இராமன் மேல் கொண்ட வேட்கையால்
நிற்கவும் இயலாமல்) மலர்கள் பரப்பப்பட்ட மஞ்சத்தையடைந்து;
இடியுண்ட அரா என - இடியோசை கேட்ட பாம்பினைப் போல;
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட - நெருங்கிய அழகுமிக்க
மார்பகங்கள் வியர்த்துப் போக;உணர்வு அழுங்க ஆவி உயிர்த்தனள்
- அறிவு மழுங்கிடப் பெருமூச்செறிந்து கொண்டிருந்தாள்.
அணையா வேட்கை அடைவிக்கும் சில மெய்ப்பாடுகள் சுட்டியபடி.
இராமன் போய் விட்டான் என்ற தோழி கூற்று. அவளுக்கு
இடியோசை கேட்ட நாகம் வளைகளில் ஓடி ஒளிந்து கொள்வது போல.
தன் அறை அடைந்து பூ அணைக்குள் புகுந்தாள் என்பதாம். நிலா.
பாம்புக்கு அஞ்சும்ஆதலால். இவளை “இந்து முகத்தி” எனப்
பொருந்தக் கூறினாள். இந்து: சந்திரன் - உவமையணி. 30
