அமெரிக்கர்களின் உணர்வை மதித்த சுவாமிஜி

அமெரிக்கர்களின் உணர்வை மதித்த சுவாமிஜி

bookmark


அது 1898 ஜூலை மாதம் மூன்றாம் தேதி. ஸ்ரீ நகரில் தமது சீடர்களுடன் பயணம் செய்து வந்தார் சுவாமிஜி. அன்று காலையில் ஒரே ஒரு சீடரை மட்டும் அழைத்துக் கொண்டு சுவாமிஜி வெளியில் சென்றார். எங்கே சென்றார் என்பது எவருக்குமே தெரியாது.

அவர்கள் இருவரும் ஒரு தையல் கடைக்குச் சென்றார்கள். சுவாமிஜி தமது சீடரைக் கொண்டு தையற்காரரிடம் அமெரிக்க நாட்டின் கொடி எவ்வாறு இருக்கும் என்று விவரித்துக் கூறச் சொன்னார்.

சீடரும் அமெரிக்க நாட்டுக் கொடியின் அமைப்பைக் கூறினார். அவர் கூறியவண்ணம் துணியில் தைத்துத் தரும்படி சுவாமிஜி தையற்காரரிடம் மொழிந்தார்.

ஒரு சில மணி நேரங்களுக்குப் பிறகு தையற்காரர் பட்டைகளும் நட்சத்திரங்களும் தைத்து அமெரிக்க நாட்டுக் கொடியை தயார் செய்து தந்தார்.

சுவாமிஜியும் அவருடைய அந்தச் சீடரும் அதை எவரும் அறியாத வண்ணம் கொண்டு வந்தார்கள்.

மறுநாள் காலையில் 'டுங்கா' எனப்படும் படகில் சுவாமிஜி தம்முடைய அமெரிக்க நாட்டுச் சீடர்களையும் அன்பர்களையும் ஏற்றிக் கொண்டார்.

படகில் அமெரிக்க நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது தான் அமெரிக்கச் சீடர்களுக்குத் தெரிய வந்தது, இன்று அமெரிக்க நாட்டின் சுதந்திரத் திருநாள் என்று. அளவற்ற ஆனந்தம் அவர்களது முகங்களிலே ஒளிர்ந்தது.

சுவாமிஜி அவர்களுடைய தேசியத் திருநாளைக் கொண்டாடுவதற்காக தேநீர் விருந்து அளித்தார்.

சுதந்திரமும் தாய்நாட்டு உணர்வும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் சுவாமிஜி. எல்லா நாட்டாருக்கும் 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' என்ற உணர்வு இருப்பதில் சுவாமிஜி ஒருமித்த கருத்து உடையவர்.