உலாவியற் படலம் - 1178
கவிக் கூற்று
1178.
ஆம்பல் ஒத்த அமுது ஊறு செவ் வாய்ச்சியர்.
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்.
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல். சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே?
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ்வாய்ச்சியர்- செவ்வாம்பல்
மலரைப் போன்று. அமுதம் போன்ற இனிமையூறுதற்கு இடமான
சிவந்த வாயினையுடைய மகளிர் பலரும்; தாம் பதைத்து உள்உயிர்
தடுமாறுவார் - (இராம வேட்கையால் மனமும் உடம்பும்) துடித்து.
உடலினுள் உள்ள உயிர் நிலை கலங்கினர்; தேம்பு சிற்றிடைச்
சீதையைப் போல் - வருந்தும் மெல்லிய இடையுடையாள் ஆகிய
சீதையினைப் போல; ஏம்பல் சிறிது பெற்றிலர் - மகிழ்தற்கான
காரணத்தைச் சிறிதும் பெறாதவர்களாகிய இவர்கள்; எங்ஙனம்
உய்வரே? - எவ்வாறு பிழைப்பார்? மகிழ்தற்குக் காரணம் சிறிதே
இருப்பினும் மகளிர் பிழைத்துக் கொள்வர்; இன்றேல் பிழைத்தல்
இயலாது எனக் கவிஞர் பெண்மையின் மென்மை நினைந்து ஏங்கியவாறு.
அமுது ஊறியும் பயன் கொள்ளப்படாமல் உள்ளது என்பார். “அமுது
ஊறு வாய்ச்சியர்” என்றார். 31
