உலாவியற் படலம் - 1174
ஒருத்தி இராமன் மிதிலை வருதல் சனகன் தவம் எனல்
1174.
கனக நூபுரம் கை வளையோடு உக.
மனம் நெகும்படி வாடி. ஒர் வாணுதல்.
‘அனகன் இந் நகர் எய்தியது. ஆதியில்.
சனகன் செய்த தவப் பயனால்’ என்றாள்.
ஒர்வாள் நுதல்- ஒளி பொருந்திய நெற்றியினாள் ஒரு மங்கை;
கனக நூபுரம் கைவளையோடு உக - பொன்னாலான கால்சிலம்பு.
கைவளையோடு சேர்ந்து (உடல் மெலிவால்) கழன்று விழவும்; மனம்
நெகும்படி வாடி - நெஞ்சு நெகிழ்ந்து உருகுமாறு வாட்டமுறவும்;
அனகன் இந்நகர் எய்தியது - குற்றமற்றவனான இராமபிரான் (நம்)
மிதிலை நகருக்கு வந்தடைந்தது; ஆதியில் சனகன் செய்த தவப்
பயனால் என்றாள் - (நம் மன்னன்) சனகன் முன்பு செய்த தவத்தின்
விளைவினால் என்று கூறினாள்.
உயர்ந்தோர் வருகை தவப்பயனால் தான் கூடும் என்பதனை. “நகர்
நீ வலஞ்செய்து வணங்க எளிவந்த இது முந்து என் குலம் செய்தவம்”
(கம்ப. 320) எனத் தசரதன் கூற்றாய் முன்பும் குறித்தார். சனகன்
தவஞ்செய்தான். சீதைக்கு இராமன் கிடைத்தான்; என் தந்தை
இவ்வாறு தவம் செய்யவில்லையே என ஏங்கினாள். மன வாட்டத்தால்
உடல் வாடும் என்பதனை “மனம் நெகும்படி வாடி கனக நூபுரம்
கைவளையோடு உக” என்றார். பிரிவில் வருந்துவாரின் உடல்
மெலிவால் கைவளை முதலிய அணிகள் நெகிழ்ந்து வீழ்வதாக
உரைத்தல் கவி மரபு. “துறைவன் துறந்தமை தூற்றா கொல்; முன் கை.
இறை இறவா நின்றவளை” (திருக். 1157) என்பதும் காண்க. 27
