சுவாமிஜிக்காக தண்டவாளத்தில் படுத்த நம் தமிழ் மக்கள் கூட்டம்
சுவாமிஜி மீது பாரதத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அதிக மரியாதை கொண்டு இருந்தார்கள். அதிலும் தமிழ் மக்கள் அவருக்காக உயிரைக் கூட கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.
இப்படித் தான் ஒருமுறை, மதுரையில் இருந்து ரயிலில் பயணம் செய்து சென்னையை நோக்கி சுவாமிஜி வந்து கொண்டு இருக்கும் செய்தியைக் கேட்டுப் பொதுமக்கள் அவரைத் தரிசிக்க அலை மோதினார்கள். திருச்சி, கும்பகோணம், மாயவரம் போன்ற ஊர்களில் சுவாமிஜி ஒரு சில நாட்கள் தமிழ் மக்களின் வேண்டுகோளை ஏற்றுத் தங்கினார். அவருக்கு உபசாரப் பத்திரங்கள் வாசித்து அளிக்கப்பட்டன. அப்பொழுது சுவாமிஜியின் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
சென்னையை நோக்கி விரைந்து வந்தது எக்ஸ்பிரஸ்.
நடுவில் ஒரு சிற்றூர். அவ்வூரில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி நிற்காது. ஆனால் அந்தச் சிற்றூரில் வசித்து வந்த மக்களுக்கோ சுவாமிஜியை எவ்வாறேனும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
அனைவரும் ஒன்று திரண்டு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள். தங்களுடைய மரியாதைக்குரிய சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட ரயிலில் வருவதாகவும், அவரைத் தரிசிக்க விரும்புவதாகவும், ரயிலை ஸ்டேஷனில் நிறுத்தும் படியும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஸ்டேஷன் மாஸ்டர் அதற்கு சம்மதிக்கவில்லை. தம்மால் அவ்வாறு செய்ய இயலாது என்று ஸ்டேஷன் மாஸ்டர் மறுத்துவிட்டார்.
ரயில் வண்டி வரும் நேரம் நெருங்கியதை மக்கள் அறிந்ததும் அனைவரும் பாய்ந்து சென்று தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து படுத்துக் கொண்டதும் ஸ்டேஷன் மாஸ்டருக்குப் பதற்றம் ஏற்பட்டது. வேறு வழி இன்றி ஸ்டேஷன் மாஸ்டர் விரைந்து வரும் ரயில் வண்டியை நிறுத்தினார். ரயில் நின்றதும் தண்டவாளத்தில் படுத்திருந்த அனைவரும் எழுந்து ஓடிச் சென்று சுவாமிஜியை தரிசிக்க விரைந்தார்கள்.
சுவாமிஜி மக்களின் செய்கையை அறிந்து, அவர்களது அன்பினை உணர்ந்து மனம் கசிந்தார். அந்த எளிய மக்களுக்கு மனதார ஆசி வழங்கினார். தண்டவாளத்தில் தலை வைத்தாவது தரிசனம் காண நினைந்தத தமிழ் மக்களின் அன்பைக் கண்டு சுவாமிஜி நெகிழ்ந்து மனம் உருகிப்போனார்.
