உலாவியற் படலம் - 1166
இராமனது முழு வடிவை எவரும் கண்டிலர் என்றல்
இராமனின் மேனி அழகு
1166.
தோள் கண்டார். தோளே கண்டார்.
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.
தோள் கண்டார் தோளே கண்டார்- (அங்குள்ள மகளிருள்)
இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும்
கண்டுகளித்து முடியாமையால் அதனால் பிற உறுப்புக்களின் அழகைப்
பார்க்க இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்ட வண்ணம்
இருந்தார்கள்; தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே
கண்டார் - வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற
(இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு பார்க்காது)
அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்; தடக்கை கண்டாரும்
அஃதே - (அவனது) பெரிய திருக்கரங்களின் அழகைப்
பார்த்தவர்களும் அவ்வாறே (பிற நோக்காது) அவற்றையே
பார்த்துக்கொண்டிருந்தார்கள்; வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார் - ஆகவே. வாள் போன்ற
கண்களையுடைய பெண்டிருள் இராமனது திருமேனியழகினை
முழுவதும் பார்த்தவர்கள் யாவர் உள்ளனர் (ஒருவருமில்லை) ; ஊழ்
கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்- (தமக்குத்
தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள். பிறசமயங்கள்
கூறும் இறை வடிவங்களை நோக்காது. தம் வடிவங்களையே
நோக்கியவாறு இருப்பது போல இராமனைக் காண வந்த மகளிர்
(அப்பெருமானின்) உறுப்புக்கள் பலவும் நோக்காது ஓர் உறுப்பின்
அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.
சமயங்கள் ஒரு பரம் பொருளின் பல கூறுகள் என்றவாறு
“வணங்கும் துறைகள் பலப் பலவாக்கி மதிவிகற்பால் பிணங்கும்
சமயம் பலப்பலவாக்கி அவை அவை தோறும் அணங்கும் பலப்பல
ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்” (திருவிருத். 69) எனும்
நம்மாழ்வார் பாசுரத்தின் கருத்துப் பதிவு “ஊழ்கொண்ட சமயத்து
அன்னாள் உருவு கொண்டாரை ஒத்தார்” எனும் உவமையில் பதிந்
துள்ளமை காண்க. முழுமுதற் பரம்பொருளின் பல்வேறு
வடிவங்களும் ஒரு வடிவத்தையோ அல்லது ஒரு பகுதியினையோ
கண்ட ஒவ்வொரு சமயத்தவரும் அந்தந்த ஒரு வடிவினையே அல்லது
பகுதியினையே முடிவாகக் கொண்டு விட்டது போலிருந்தது
இப்பெண்களின் நிலை என்றவாறு. கவிஞர் பிரானின் கடவுட்
கொள்கை துல்லியமாக விளங்கும் இடங்களுள் இதுவும் ஒன்று
எனலாம். அந்தந்த அங்கங்களைக் கண்டவர்கள் அங்கங்கேயே நின்று
கொண்டு. அடுத்த அங்கங்களின் அழகைக் காண விழிகளைப்
பெயர்க்க முடியாமற் போனமை. அவர்கள் குறையில்லை என்று
உணர்த்தும். 19
