உலாவியற் படலம் - 1162

bookmark

ஒருத்தி இராமனைக் காணும் பிறரைச் சினத்தல்

1162.    

தாக்கு அணங்கு அனைய மேனி.
   தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும்
   வேறு வேறு ஆனது ஓராள்;-
ஆக்கிய பாவை அன்னாள்
   ஒருத்தி - ஆண்டு. அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம்
   எரி எழ நோக்குகின்றாள்.
 
ஆக்கிய  பாவை யன்னாள் ஒருத்தி - (கைவல்லான் ஒருவனால்)
ஆக்கப்பட்ட  பதுமை போன்றாள் ஒருத்தி;தாக்கு  அணங்கு  அனைய
மேனி; தைத்த வேள் சரங்கள்  பாராள் - தாக்கி  வருத்தும் தெய்வ
நங்கை  போன்ற  தனது  மேனியில்  பாய்ந்த   மன்மத   அம்புகளை
மதியாதவளாய்;  வீக்கிய கலையும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள்
- தான்   இடையில்   கட்டியிருந்த    மேகலையும்     ஆடையையும்
வேறுவேறாகப்  பிரித்துள்ளதையும் உணராதவளாய்; ஆண்டு  அமலன்
மேனி நோக்குவாரை எல்லாம்  -  அங்கே. தூயவனான  இராமனின்
திருமேனியை    (அன்போடு)    பார்ப்பவரையெல்லாம்;   எரி   எழ
நோக்குகின்றாள் - (கண்களிலிருந்து) தீப்பொறி எழுமாறு  (சினத்துடன்)
நோக்குவாள் ஆனாள்.

எரி     எழ  நோக்கியதற்கு  ஏது  பெருமானின்   திருமேனிக்குக்
கண்ணேறு   படக்கூடும்   என்பது.   தன்   காதற்குரியவனைப்  பிறர்
பார்ப்பது பொறாமையினாலும் எரி எழ  நோக்கினாள்  ஆதல்வேண்டும்.
தாக்கணங்கு - தீண்டி வருந்துகின்றமோகினி என்னும் அழகுத் தெய்வம்
“தாக்கணங்கு  தானைக் கொண்டன்ன துடைத்து”   (திருக்.1082)     15