அமெரிக்கப் பெரும் பணக்காரரான ராக்பெல்லரை நல்வழிப் படுத்திய விவேகானந்தர்

அமெரிக்கப் பெரும் பணக்காரரான ராக்பெல்லரை நல்வழிப் படுத்திய விவேகானந்தர்

bookmark


ஜான் டி. ராக்பெல்லர் அமெரிக்காவின் அந்நாளில் புகழ் பெற்ற பெரும் பணக்காரர். அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த வரியில் ஐந்தில் ஒரு பகுதியை செலுத்தக் கூடிய அளவுக்கு பெரும் பணம் படைத்தவர்.

ஒரு நாள் ஜான் டி. ராக்பெல்லர் அவர்களின் நண்பர்கள் விவேகானந்தரின் பிரசங்கத்தை கேட்க அவரை அழைத்தார்கள். ஆனால் அவரோ அதனை மறுத்து விட்டார்.

ஒரு நாள் ராக்பெல்லர் தாமே வேகமாக சுவாமிஜி இருந்த இல்லத்துக்கு வந்தார். சுவாமிஜி பணக்காரர் ஏழை என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காதவர் ஆயிற்றே. வந்து இருப்பது அமெரிக்காவின் பெரும் செல்வந்தரான ராக்பெல்லர் என்று அறிந்தும் கூட அமைதியாக இருந்தார். பின்பு தனது பேச்சை அவரிடத்தில் தொடங்கினார்.

அப்போது ராக்பெல்லர் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி உலகிற்குத் தெரியாத பல விஷயங்களை தனது ஞானத்தால் கண்டு அவரிடம் கூறினார். விவேகானந்தர் சொல்ல தனது மறைக்கப்பட்ட கடந்த காலத்தை அவர் மூலம் காதால் கேட்ட ராக்பெல்லர் திகைத்து நின்றார். "இவருக்கு எப்படி நம்மைப் பற்றி அனைத்து விஷயங்களும் தெரிந்தது?" என்று ராக்பெல்லர் தமது மனதிற்குள் கூறிக் கொண்டு ஆச்சர்யம் அடைந்தார். இருந்தாலும் அதனை அவர் விவேகானந்தரிடம் காட்டிக் கொள்ளவில்லை.

பிறகு சுவாமிஜி ராக்பெல்லர் அவர்களிடம் அறிவுரை கூறத் தொடங்கினார். "நீங்கள் பெரும் பணக்காரர் என்று அறிவேன். ஆனால் அவை எல்லாம் உங்களுடையது என்று எண்ணாதீர்கள். நீங்கள் செல்வத்தை பிறருக்கு அளிக்க வேண்டும் என்றே ஆண்டவன் அவற்றை உங்களுக்கு அளித்து இருக்கிறான்" என்று உரைத்ததும் ராக்பெல்லர் இந்த அறிவுரையை ஏற்கப் பிடிக்காமல் அங்கு இருந்து கோபத்துடன் சென்றார்.

சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் ராக்பெல்லர் சுவாமிஜியைத் தேடி வந்தார். சுவாமிஜியின் முன்பாக சில காகிதங்களைப் போட்டார்.

பிறகு அவர் சுவாமிஜியிடம்," நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இவையெல்லாம் நான் செய்யப் போகும் தருமங்களுக்கான திட்டங்கள்" என்று பெருமையுடன் (ராக்பெல்லர்) சுவாமிஜியிடம் கூறினார். ஆனால் சுவாமிஜி அதனைக் கேட்டு அயர்ந்து விடவில்லை. அவரவருக்கு ஏற்ப அழகாகவும் நறுக்குத் தெரித்தாற் போலவும் பதில் அளிப்பதில் சுவாமிஜிக்கு நிகர் சுவாமிஜியே.

அப்படிப்பட்ட இயல்புடைய நமது சுவாமிஜி ராக்பெல்லர் அவர்களிடம்," நீங்கள் தான் எனக்கு நன்றி கூற வேண்டும்" என்று இனிமை ததும்ப கூறினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட ராக்பெல்லர் மறு பேச்சு இன்றி அங்கிருந்து சென்றார்.

சுவாமிஜியின் அறிவுரைகள் ரக்பெல்லரை சித்திக்க வைத்தன. அதன் பிறகு அவர் பல அறக் கட்டளைகளை நிறுவி அதற்கு கொடைகளை வாரி வழங்கினார். எண்ணற்ற சமூதாயப் பணிகளை எடுத்துச் செய்தார்.

விவேகானந்தரை சந்தித்த நாள் முதல் கொண்டு ராக்பெல்லர் புதிய மனிதனாக உருவகம் பெற்று இருந்தார். அவருக்குள் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. பணம் மட்டுமே சம்பாதித்து பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு, பிறருக்காக வாழ்வது தான் உண்மையான வாழ்வு என்பதை அவர் உணர்ந்தார். பிற்காலத்தில் அப்படித் தான் ராக்பெல்லர் வாழவும் செய்தார்.

நமது சுவாமிஜி ராக்பெல்லர் அவர்களின் மனதை மட்டும் அல்ல மனநோயாளியாக மாற இருந்த "எம்மா கால்வி" என்ற நடிகைக்கும் புது வாழ்வு அளித்தார். அதையும் பார்ப்போம் வாருங்கள்.