இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகள்
இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகள் இதுவரை பிதுர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகளை பற்றி உமக்கு யான் கூறினேன். இனி இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகளை பற்றி கூறுகிறேன் என்று கூறத் துவங்குகின்றார் அவுர்வ முனிவர். இறந்தவருடைய தேகத்தை நல்ல தண்ணீரைக் கொண்டு நீராட்டி மாலைகளால் அலங்கரித்து விதிப்படி தகனம் செய்ய வேண்டும். தகனம் செய்யும் இடத்திற்கு வந்திருக்கும் அனைத்து உறவினர்களும் உடுத்திருக்கும் ஆடைகளுடனேயே நீராடி தெற்குமுகமாக இருந்து இரு இன்னானுக்கு என்று தன் இருகைகளாலும் தண்ணீரை எடுத்து தர்ப்பணமாக விட வேண்டும். அப்படி செய்த பிறகு மாடுகள் பிரவேசிக்கும் போதாகிலும், நட்சத்திரங்கள் காணும் போதாகிலும் கிருகத்தினுள் பிரவேசித்து தரையில் புல் முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மீது படுத்துக் கொள்ள வேண்டும். இப்படியேயிருந்து தீட்டு காரியங்களை செய்ய வேண்டும். அதாவது காலையில் மட்டும் ஒருமுறை புசித்துக் கொண்டு தினந்தோறும் இறந்தவனுக்குத் தரையில் பிண்டம் போட வேண்டும். உறவினர்கள் புசிப்பதனால் இறந்தவனுக்குத் திருப்தி ஏற்படும். ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது, ஒன்பதாவது நாட்களில் வஸ்திரத் தானமும், ஊருக்கு வெளியே ஸ்நானமும் செய்து எள்ளும், தண்ணீரும் விட வேண்டும். நான்காவது நாளில் அஸ்தி சஞ்சயனம் (அஸ்தியை நதியில் கரைக்கும் சடங்கு சஞ்சயனம் எனப்படுகிறது) செய்ய வேண்டும். சஞ்சயனமான பிறகு ஏழு தலைமுறைக்கு உட்பட்டவரைத் தீண்டினாலும் குற்றமில்லை. சபிண்டரும் (இறந்தவருக்கு பனிரெண்டாம் நாள் செய்ய வேண்டிய கர்மாவிற்கு உண்டான கர்த்தா) சஞ்சயனம் கழித்த பிறகு படுக்கையில் படுக்கவும், ஆசனத்தில் அமரவும் செய்யலாம். ஆனால் ஸ்திரீ போகம் (ஆண் பெண் இணைவு) மட்டும் கூடாது. சிறுவனும், மகாநதி, மலைகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் பொழுது மற்றும் பிறந்த தேசத்தை விட்டு மற்றொரு தேசத்திற்கு போனவனும் அவரவரின் குலாச்சாரங்களை விட்டவனும் சந்நியாசியாக இருந்து மரணமடைந்தால் அப்போது ஸ்நானம் (ஸ்நானம் : குளம் ஆறுகளில் குளிக்கும் செயல்) செய்வதாலேயே தீட்டுப் போகும். இப்படியே மனப்பூர்வமாக ஜலம், விஷம், உறிப்போட்டு கொள்ளுதல் முதலானவைகள் இறந்தவர்களுக்கு எவ்விதமான தீட்டுக் கொண்டாட வேண்டியதில்லை. இப்படியெல்லாம் இறந்தவர்களைப் பற்றி ஞாதிகளுக்குப் பத்து நாட்கள் மட்டும் தீட்டு உண்டு. மெய்யான பிரம்மம் உணர்ந்த அந்தணனுக்கு பத்துநாட்களும், மக்களையும், நாட்டையும் பாதுகாக்கக்கூடிய உண்மையான வீரனுக்கு பன்னிரண்டு நாட்களும், பல தேசங்களுக்கு சென்று கலப்படம் இல்லாத நல்ல பொருட்களை வணிகம் செய்கின்ற வணிகனுக்கு அரைமாதம், மற்றவர்கள் தேவைகளை நிறைவேற்ற கூடியவர்களுக்கு ஒரு மாதம் தீட்டு காலம் ஆகும். இப்படியாகத் தீட்டிலிருந்து அது அழியும் கடைசி நாளில் ஒற்றைப்படை மெய்யான பிரம்மம் உணர்ந்த அந்தணனை வைத்து அவரவர்களின் விதிப்படிப் போஜனாதிகள் செய்வித்து பாத்திரத்தின் சமீபத்தில் தருப்பைகளைப் பரப்பி, இறந்தவனுக்குப் பிண்டம் போட்டு, ஆதி ஏகோத்திஷ்ட சிரார்த்தத்தை நிறைவேற்ற வேண்டும். சிரார்த்த செயல்களை நல்முறையில் செய்து முடித்த பின்பு அவரவர்களின் தினசரியான தொழில்களை செய்யலாம். கர்த்தாவானவன் மாதந்தோறும் இறந்த திதிகளில் ஏகோத்திஷ்ட விதியினால் மாசிமகம் செய்து வரவேண்டும். அந்த ஏகோத்திஷ்டங்களில் ஆஹ்வானம் (ஆஹ்வானம் என்றால் அழைப்பது), அக்கிநவுகரணம், வைசுவ தேவிகவிப்பிர நிமந்திரணம் ஆகிய இவற்றை செய்யலாகாது. மேலும் அதில் ஒரு பவித்திரத்தோடு ஒரு அர்க்கியம் கொடுக்க வேண்டும். மெய்யான பிரம்மம் உணர்ந்த அந்தணன் புசித்த பிறகு பிரேதனுக்கு ஒரே பிண்டம் போட வேண்டும். எஜமானன், அபிரம்யதாம் என்று கேட்க மெய்யான பிரம்மம் உணர்ந்த அந்தணன் அபிரதாஸ்ம என்று பதில் சொல்ல வேண்டும். கடைசியாக இன்னாருக்கு இது அக்ஷயம் என்று சொல்ல வேண்டும். இப்படியே வருஷம் முடிவு வரையில் ஏகோத்திஷ்ட விதியால் சிரார்த்தம் செய்து பிறகு சபிண்டீகரணம் (சபிண்டீகரணம் என்பது பிதுர்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற்பொருட்டு பெரும்பாலும் இறந்த பனிரெண்டாம் நாள் செய்யப்படும் சிராத்தம்) செய்ய வேண்டும். அதுவும் ஆண்டின் இறுதியிலாவது, ஆறு மாதத்திலாவது, பனிரெண்டாம் நாளிலாவது ஏகோத்திஷ்ட விதியினாலேயே செய்ய வேண்டும். அதில் எள்ளும், வாசனைத் திரவியமும் கலந்த ஜலத்தினால் நிறைக்கப்பட்டவைகளாய், பிதுர்களுக்காக மூன்று அர்க்கிய பாத்திரங்களும், பிரேதனுக்காக ஒரு அர்க்கிய பாத்திரமும் வைத்து, அந்தப் பிரேத பாத்திர ஜலத்தை பிதுர்ப் பாத்திரம் மூன்றிலும் கலக்க வேண்டும். இப்படியாக அர்க்கிய சம்யோஜனஞ் செய்வதால் அந்தப் பிரேதன் பிதுருத்துவத்தை அடைய அவன் முதலான பிதுர்களைப் பார்வணம் முதலான சிரார்த்த விதிகளால் அர்ச்சிக்க வேண்டும். இறந்தோனுக்குக் கருமம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் புத்திரன், பவுத்திரன் (பிள்ளை வயிற்றுப் பேரன்), புத்திரனுடைய பவுத்திரன், சகோதரன் அவனுடைய சந்ததி சபிண்டருடைய சந்ததி ஆகிய இவர்களில் முந்தினவரில்லாதபோது பிந்திவர் முறையே கர்த்தாக்களாகிறார்கள். இவர்கள், யாருமே இல்லாதபோது சமானோதகருடைய சந்ததியும் அதன் பிறகு தாயின் பக்ஷத்துச் சபிண்டருடைய சந்ததியும் அதன்பின் அந்தப் பக்ஷத்துச் சமானோதக சந்ததியும் முறையே கிரியை செய்ய வேண்டும். இந்த இரண்டு குலங்களும் நசித்துப் போனால் பெண்கள் இந்தக் கிரியைகளை செய்யலாம். பிறகு பிதாவின் சார்பிலும், மாதாவின் சார்பிலும் உள்ள சபிண்ட சமானோதர்களாகிலும் அல்லது சஹாத்தியாயி சீடன் முதலானவர்களாகிலும், ஒரு கூட்டத்தில் சேர்ந்தவர்களாகிலும் கர்மம் செய்யலாம். இந்தக் கிரியைகளில் பூர்வங்கள் என்றும், மத்திமங்கள் என்றும், உத்தரங்கள் என்றும் மூன்று விதங்கள் உண்டு. தகனந் தொடங்கி தண்ணீரைத் தீண்டுமளவில் உள்ளவைகள் பூர்வக்கிரியைகளாகும். மாதந்தோறும் செய்யத்தக்க மாசிகங்கள் மத்திமக் கிரியைகள், பிரேதன், பிதுர்களில் கலக்கத்தக்கதான சபிண்டீகரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய பிதுர்க்கிரியைகள் எல்லாம் உத்தரக் கிரியைகளாகும். தந்தை தாய்களுடைய சபீண்ட சமானோதர்களினாலேயும், சகாத்தியாயி முதலானவர்களினாலேயும், பொருள் எடுத்துக் கொள்கிற ராஜாவினாலேயும், பூர்வக் கிரியைகள் செய்யப்படலாம். உத்தரக் கிரியைகளோ புத்திரன் முதலானவர்களினாலேயே செய்யப்பட வேண்டும் அல்லது புத்திரியின் புத்திரர்களாலும் செய்யலாம். பெண்களுக்கும் ஆண்டுதோறும் இறந்த திதிகளிலே ஏகோத்திஷ்ட விதியினால் உத்தரக் கிரியை செய்ய வேண்டும் என்று முனிவர் கூறினார். முனிவர் இவ்விதம் கூறியதும் அரசனுக்கு மேலும் சந்தேககங்கள் ஏற்பட துவங்கின. அதாவது உத்தரக் கிரியைகளை எப்போது எப்படி செய்ய வேண்டும்? என்ற ஐயங்களே. தன்னுடைய மனதில் தோன்றிய ஐயங்களை முனிவரிடம் வினவினார். முனிவரும் வேந்தனின் ஐயங்களை போக்கும் பொருட்டு உத்தரக் கிரியைகளை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி கூறத்துவங்கினார். ஒருவன் முழுமனதோடு அதாவது இவை எல்லாம் பொருள் விரயம் மற்றும் கால விரயம் என்று எண்ணாமல், சிரத்தையோடும் அவரவர்களின் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு சிரார்த்தம் செய்வதனால், பிரம்மா, இந்திரன், ருத்திரன், அசுவினி, தேவர், சூரியன், அக்னி வசுக்கள், வாயு, விசுவதேவர், பிதுர்கள், முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், சர்ப்பங்கள் முதலிய ஜந்துக்களும் மற்றுமுண்டான பூதங்கள் போன்ற யாவற்றையும் மகிழவைக்கிறான். மாதந்தோறும் அபர பக்ஷத்திலும், அமாவாசையிலும், அஷ்டகைகளிலும் சிரார்த்தம் செய்ய வேண்டும். சிரார்த்தம் எப்பொழுது செய்ய வேண்டும்? அதற்கு உண்டான காலத்தையும் கூறுகிறேன். சிரார்த்தத்துக்குத் தகுதியான பொருட்கள் கிடைத்தபோதும், தகுதியான அதாவது பிரம்மத்தின் பொருள் உணர்ந்த எதிலும் நேர்மையாக இருக்கக்கூடிய மற்றவர்கள் கொடுக்கும் பொருட்களின் மீது எந்த விதமான பற்றுகளும் இருக்கின்ற மெய்யான அந்தணன் கிடைத்த போதும், வியாதீ பாதத்திலும், அயனத்திலும், வி{வத்திலும், சந்திர, சூரிய கிரகணங்களிலும், சூரியன் பனிரெண்டு ராசிகளில் பிரவேசிக்கும் காலங்களிலும், நட்சத்திர பீடையும், கிரக பீடையும் உண்டாகும் காலங்களிலும், கெட்ட கனவுகளைக் கண்டபோதும், தானியத்தைப் புதிதாகக் கொண்டு வந்தபோதும், காமிய சிரார்த்தங்களை செய்யலாம். அமாவாசை தினமானது அனுஷம், விசாகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களுடன் இணைந்து ஏற்படும் பொழுது செய்கிற சிரார்த்தம் பிதுர்க்களுக்கு ஒரு வருஷத்துக்கு திருப்தியை உண்டாக்கும். அமாவாசை தினமானது திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த நட்சத்திரங்களுடன் இணைந்து ஏற்படும் பொழுது செய்கிற சிரார்த்தத்தினால் பிதுர்க்கள் பனிரெண்டு ஆண்டுகள் திருப்தியடைவார்கள். அமாவாசை தினமானது அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏற்படும் காலமானது தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலமாகும். இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் அமாவாசை கூடியபோது சிரார்த்தம் செய்யலாம். இதனால் பிதுர்க்களுக்கு விசேஷ திருப்தி உண்டாகும். வேந்தனே! இன்னும் பிதுர்க்களை பற்றி கூறுகிறேன் கேட்பாயாக... என்று உரைத்து விட்டு பிதுர்க்களிடத்தில் அதிக பக்தியுடையவனான புரூரவ சக்கரவர்த்தி கேட்க, அதற்கு ஜனககுமாரர் கூறிய பாடலின் பொருளை இவ்விடத்தில் கூறத் துவங்கினார். வைகாசி மாதத்தில் சுக்கில பட்ச திரிதியை, கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்ச நவமி, புரட்டாசி மாதத்தின் கிருஷ்ண பட்ச திரயோதசி, மாசி மாதத்தின் அமாவாசை திதி மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு திதிகளும் யுகாதிகள் என்றும், மிகவும் புண்ணிய காலம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிலும் சந்திர, சூரிய கிரகணங்களில் மூன்று அஷ்டகைகளிலும், இரண்டு அயனங்களிலும், எள்ளுடன் கூடிய தண்ணீரையாவது பிதுர்க்களை மனதில் உத்தேசித்து அவர்களிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் வருஷ சிரார்த்தம் செய்த பயனை அடைவான். இது ரகசியமான விஷயம் என்று பிதுர்க்கள் கூறுகின்றனர். மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது அவிட்ட நட்சத்திரத்துடன் சேருமானால், அப்போது அன்னம் அல்லது தண்ணீரை பிதுர்க்களை குறித்து கொடுத்தவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்க்களை திருப்தி செய்த பயன் கிடைக்கும். மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அற்ப புண்ணியமுள்ள மனிதர்களுக்கு அது கிடையாது. மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது பூரட்டாதியுடன் சேருமானால் அதில் செய்யும் சிரார்த்தத்தால் பிதுர்க்கள் திருப்தியடைந்து ஆயிரம் யுகங்கள் வரை சுகமாக தூங்குவார்கள். கங்கை, யமுனை, விபாஸ், சரஸ்வதி, கோமதி என்ற நதிகளுக்கும், நைமிசம் என்ற சேக்ஷத்திரத்துக்கும் ஒருவன் சென்று குளித்து அன்போடு, நம்பிக்கையோடு, கடமை என்று எண்ணாமல் பிதுர்ப்பூஜை செய்தால் அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். பிதுர்க்கள் நாம் எப்போது புரட்டாசி மாதத்தில் புத்திராதிகள் செய்த அபர பட்ச திரயோதசி சிரார்த்தத்தினால் திருப்தியடைந்து, மாசி அமாவாசையிலும் புத்திரர்கள் செய்த புண்ணிய தீர்த்த ஜல தர்ப்பணங்களால் திருப்தியடைவோம் என்று பாடுகிறார்கள். மனிதருக்கு நயவஞ்சக சிந்தனை இல்லாமல் தூய்மையான அறிவும், பரிசுத்தமான பொருளும், மேன்மையான காலமும், சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதிகளும், சற்குணமுள்ள பாத்திரமும், சிறந்த அன்பும் சேருமானால் சகல இஷ்டங்களும் சித்தியாகும். மன்னனே, இது விஷயமாக பிதுர்க்கள் கீதமிசைப்பதைக் கேட்பாயாக. பிதுர்க் கீதங்களாவன, எவன் ஒருவன் பொருள், விரயம் ஆகின்றதே என்று கருதாமல் நமக்குப் பிண்டங்களை போடத்தக்கவனோ... விபவமுண்டானால் எந்தவித சுயநலமான சிந்தனைகள் இல்லாமல் ரத்தினம், ஆடைகள், தனம் முதலிய சகல போகங்களையும் நமக்காகப் பிரம்மத்தின் பொருள் உணர்ந்த மற்றவர்கள் பொருள் மீது எந்தவிதமான ஆசைகள் இல்லாதவனுக்கு தானம் செய்பவனோ, அன்னமிடுவதற்கு மட்டுமே தகுதியான விபவமுடையவனாகில் இத்தகைய காலங்களில் மிக்க அன்போடு நல்ல பிரம்மத்தின் பொருள் உணர்ந்தவனுக்கு அன்னமிடுவானோ, அதற்கு சக்தியில்லாமற் போனால் இயன்ற அளவு தானியத்தையாவது பிரம்மத்தின் பொருள் உணர்ந்தவனுக்கு தரவல்லவனோ அல்லது சிறு தட்சணையையாவது கொடுப்பவனோ, அதற்கும் சக்தியில்லையெனில் நுனிக்கையினால் சிற்சில எள்ளுகளையாவது நல்லதொரு பிரம்மத்தின் பொருள் உணர்ந்தவனுக்கு வணங்கி நமஸ்கரித்துக் கொடுப்பவனோ, அதற்கும் வழியில்லையெனில் ஏழெட்டு எள்ளுடன் நமக்கு ஒரு கை தண்ணீராவது விட வல்லவனோ, இதுவும் முடியாதபோது, எங்கிருந்தாவது பசுக்களுக்கு தக்க உணவை சம்பாதித்து, நம்முடைய மகிழ்ச்சிக்காக சிரத்தையுடன் பசுக்களுக்கு கொடுக்கிறானோ, ஒன்றுமேயில்லாதபோது, காட்டுக்கு சென்று கைகளை உயரத்தூக்கி, உரத்த குரலுடன் சூரியன் முதலான லோக பாலகரை நோக்கி எனக்கு பிதுர்ச் சிரார்த்தம் செய்யத்தக்க தனம் பொருள் எதுவும் இல்லை. எனது பிதுர்க்கள் திருப்தியடைய வேண்டும். எனக்கு ஒன்றுமில்லை என்று இதோ என்னிரண்டு கைகளையும் வாயுவின் மார்க்கமான ஆகாயத்தில் தூக்கிவிட்டேன்! என்று இந்த வசனங்களை படிப்பானோ, அத்தகைய புண்ணியவானும், புத்திமானுமான ஒருவன் நமது குலத்தில் பிறக்க வேண்டும் என்று பிதுர்க்கள் பாடியுள்ளார்கள் என்று ஜனககுமாரர் புரூரவ மன்னனிடம் கூறினார். அதை நான் உனக்கு கூறுகிறேன். இவ்விதமாகப் பிதுர்க்கள் பொருள் இருக்கின்ற போதும், இல்லாத போதும் நடக்கவேண்டிய முறைகளை சொன்ன வண்ணம் செய்பவன், பூரணமாக சிரார்த்தம் செய்த நற்பயனை அடைவான்.
