ஆற்றுப் படலம் - 18

bookmark

வெள்ளம் வணிகரை ஒத்தமை

வணிகர்: வெள்ளம்
 
18.

மணியும் பொன்னும், மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தன்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.
 
மணியும்    பொன்னும் மயில்தழைப் பீலியும்-முத்துக்கள் பொன்,
மயில்   இறகுகள்;  அணியும்   ஆனை  வெண்கோடும்-அழகுடைய
யானைத்   தந்தங்கள்;  தன்  இணை  இல்  ஆரமும்-தனக்கு  ஒப்பு
இல்லாத    சந்தன   மரம்;   இன்ன   கொண்டு   ஏகலான்-ஆகிய
இத்தகையவற்றை  வாரிச்  செல்லுதலால்;  அவ்வாரி-சரயுவின்   அந்த
வெள்ளம்; வணிக மாக்களை ஒத்தது-வர்த்தகர்களை ஒத்திருந்தது.

தழைப்     பீலி - இருபெயரொட்டுப் பண்புத்   தொகை. ‘மணி’யை
முத்து  எனப்  பொருள்  கொண்டதால்,  ஆரம்    சந்தன மெரமெனப்
பொருள்  கொள்ளப்பட்டது.  ஆரம் - முத்து,   சந்தனம், மாலை எனப்
பல பொருள் கொண்டது.                                     7