ஆறு செல் படலம் - 2387
2387.
‘ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம்’ என்று கொண்டு, அரிதின் போயினான்.
‘கோதுஇலா அருமறை குலவும் நூல்வலாய்! - குற்றம் இல்லாத
அரிய மறை பொருள்களைத்தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில்
தேர்ச்சி பெற்றவனே!; அந்தம் இல் வேதனைக் கூனியை-முடிவில்லாத
வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை; வெகுண்டும்
என்னினும்-மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்; ஐயன்
முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்;
என்று - என்று கருதி; நாம்போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்;
என்று அரிதின் கொண்டு - என்று சொல்லிச்சிரமப்பட்டு(அவனைத்
தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான்- சென்றான்.
வெகுண்டும் - கோபித்தோம்; தன்மைப் பன்மை வினைமுற்று. வேதம்
வல்ல நீ ஓர்அடிச்சியின் பொருட்டுச் சினம் கோடல் தகுதி அன்று என்று
குறிப்பித்தானாம்; என்றது பரதன்தாயைச் சீறாது விட்டதற்கு மேற்குறித்த
காரணத்தைச் சுட்டியது எனலும் ஆம். 56
