ஆறு செல் படலம் - 2388
இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்
(2388-2389)
2388.
மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.
மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்; மூரி
ஞாலமும் - பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து -
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் - இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் - (பரதன்)
தானும்; வைகினான் - (அன்று) தங்கினான்.
பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் -
அன்பு கலந்துறவு கொண்டநெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற
பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும்ஆதலின்
இராமன் தங்கிய சோலை பரதனுக்குத் துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி -
உவமையாகுபெயர். 57
