அழகுக்கு மருந்து

bookmark

நாட்டிய நாயகி கலைச் செல்வி மாதவி, தன் காதல் தலைவன் கோவலனுடன் உலாவி வர–தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில், "பத்துவகைப் பட்ட துவர்", "ஐந்து வகைப்பட்ட விரை", "முப்பத்திரண்டு வகை ஓமாலிகை" ஆகிய நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு. இவை" அழகுப் பொருள்களின் கூட்டு போலும். அப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடிய மாதவி "நிறம் பெற்றாள்" என்று குறிப்பிடுகிறது. மருந்து, நோய்க்கு மட்டும் அல்லாமல் உடல் வனப்பிற்கும் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் மருத்துவத்திற்குப் பயன்படுகின்ற ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு குணப் பண்பினைக் கொண்டது. அதேபோல், அம் மருந்துகள் ஒன்றோடொன்று கூடி வினையாற்றும் போது, நேர்வினை, எதிர்வினை ஆகியவற்றைத் தோற்றுவிக்கக் கூடியன. இந்த இரு வகைகளையும் மருத்துவ நூலார்" நட்பு, பகை என்னும் இரண்டு பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர். மருந்துப் பொருள்கள் பற்றிய தேர்ந்த பயிற்சியும் புலமையும் இருந்தால் மட்டுமே இவற்றை அறிய முடியும். அவ்வாறு அறிய நேர்ந்தால் மட்டுமே மருந்துகளைக் கூட்ட முடியும்.

நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஒரே வகையான பண்புகள் உடையவை என்பதை அறிந்தே மருத்துவப் புலமையாளர்களால் இக்கூட்டு மருந்து உருவாகியிருக்க முடியும் என்பதால்" அக்காலத்து மருத்துவர்களின் புலமை பெறப்படுகிறது.