அலிபாபாவின் அண்ணன் காசிமின் பேராசையும் அவன் மரணமும்
காசிமின் மனைவி வீட்டிற்குள் "படி"யை எடுத்துச் சென்று அதனுள் பார்க்கவும் ஒரு தங்க நாணயம் அதில் ஒட்டிக் கிடந்தது. அதனை எடுத்துப் பார்த்த அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.
"பொன் நாணயங்களை அளக்கும் அளவுக்கு அலிபாபா பணக்காரன் ஆகி விட்டானா? அவனுக்கு அவ்வளவு பொற்காசுகள் எங்கு இருந்து வந்திருக்கும். இத்துடன் இதனை விடக் கூடாது" என்று தனது மனதுக்குள் கூறிக் கொண்டவளாக தனது அன்புக் கணவர் காசிம், வீட்டை அடைந்த மாத்திரத்தில் அவரிடமும் இதுபற்றிக் கூறி ஆச்சர்யம் அடைந்தாள். காசிமும் அதைக் கேட்டு வியந்தான். பிறகு காசிமின் மனைவி அவனிடம், "தங்கள் தம்பியான அலிபாபாவிடம் எப்படி அவ்வளவு பொற்காசுகள் வந்தது எப்படியாவது சென்று தெரிந்து விட்டு வாருங்கள்" என்று கூறி அனுப்பினாள். அதன் அடிப்படையில் காசிமும் அலிபாபாவைத் தேடி அந்த ரகசியத்தைப் பற்றி எப்படியாவது அறிந்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பினான். சிறிது நேரத்திற்கெல்லாம் அலிபாபாவின் வீட்டை அடைந்தான் காசிம்.
காசிம் அலிபாபாவின் வீட்டை அடைந்த நேரத்தில் அலிபாபாவின் மனைவி அந்தக் கொள்ளையர்களின் குகை இருக்கும் சரியான இடத்தைக் கேட்டுக் கொண்டு இருக்க அலிபாபா அதனைத் தனது மனைவியிடம் விளக்கிக் கொண்டு இருந்தான். அதனைக் காசிம் முழுவதுமாக ஒட்டுக் கேட்டு முடித்தான்.
பின்னர் முகத்தில் புன்னகையை வர வழைத்துக் கொண்டு "தம்பி அலிபாபா" என்று அன்புடன் கூறிய படி காசிம் அலிபாபாவின் வீட்டினுள் நுழைந்தான். வீடு தேடி வந்தத் தனது அண்ணனை அலிபாபா அன்புடன் வரவேற்றான்.
வந்ததும் வராததுமாக காசிம் அலிபாபாவிடம், "தம்பி, என்னிடமும் நீ சொல்லக் கூடாதா, நானும் வந்திருப்பேனே உனக்கு உண்மையில் எப்படித் தங்க நாணயங்கள் கொட்டிக் கிடந்த அந்தப் பொக்கிஷ குகையைப் பற்றித் தெரிந்தது" என்று கேட்டான்.
மேற்கண்ட இந்த வார்த்தையை காசிம் சொன்ன மாத்திரத்தில் அலிபாபாவுக்கு புரிந்து விட்டது. "அண்ணனுக்கு முக்கால் வாசி உண்மை தெரிந்து விட்டது. இனியும் மறைத்துப் பிரயோஜனம் இல்லை" என்று தனது மனதினுள் சிந்தித்தவனாய் காசிமிடம் அனைத்து உண்மைகளையும் கூறி முடித்தான். தனது தம்பி கூறிய அனைத்தையும் நன்றாகக் கேட்டுக் கொண்டான் காசிம். பிறகு வந்த வேலை நல்லபடியாக முடிந்தவுடன் "அலிபாபா போன்ற ஏழைப் பிச்சைக் காரனின் வீட்டில் கை நினைப்பது கூட தரித்திரம் தான்" என்று மனதினில் நினைத்தவனாய் அலிபாபாவிடம் விடைகூட பெறாமல் வேகமாகக் கிளம்பினான் காசிம். தனது மாளிகையை அடைந்தான்.
அன்றைய இரவு முழுவதும் காசிம் தூங்கக் கூட இல்லை. "அலிபாபா எடுத்து வந்ததை விட அதிக செல்வங்களை எடுத்து வர வேண்டும். அவன் இரண்டு கழுதைகளில் செல்வத்தை கொண்டு வந்தான். நாம் பன்னிரண்டு கழுதைகளில் செல்வங்களைக் கொண்டு வர வேண்டும். அந்த செல்வங்களைக் கொண்டு இதை விடப் பெரிய மாளிகையை கட்ட வேண்டும். இந்த ஊருக்கே ராஜாவாக வேண்டும்" என்றெல்லாம் மனக் கோட்டை கட்டிக் கொண்டு இருந்தான் காசிம்.
தனது தம்பி கூறியதை மனத்தில் கொண்டவனாய் மறுநாள் காசிம் பன்னிரண்டு கழுதைகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றான். அலிபாபா இரண்டு கழுதைகள் நிறையத் தானே செல்வத்தை கொண்டு வந்தான், நாம் பன்னிரண்டு கழுதைகள் நிறைய செல்வங்களை வாரிக் கொண்டு வந்து விடலாம் என்ற பேராசையில் தான் பன்னிரண்டு கழுதைகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருப்பத்தி நான்கு கோணிப் பைகளையும் உடன் எடுத்துக் கொண்டு சென்றான்.
அலிபாபா தன்னிடம் சொன்ன படி அவன் தனக்குக் கூறிய அதே பாதை வழியாகச் சென்றான். செல்லும் சமயத்தில் "திறவாய் சிம் சிம்" என்றும் "மூடுக சிம் சிம்" என்றும் மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லியபடி சென்றான் காசிம். ஆனால், ஏனோ அந்த வார்த்தைகளை அவன் ஒரு குறிப்பில் குறித்துக் கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அது அவனது விதி என்று தான் சொல்ல வேண்டும்.
கள்வர் குகையின் வாயிலை அடைந்த காசிம் தான் கொண்டு வந்த பன்னிரண்டு கழுதைகளையும் சற்றும் யோசிக்காமல் குகையின் வாயிலில் கட்டி வைத்தான். பிறகு அலிபாபா தன்னிடம் சொன்ன படி "திறவாய் சிம் சிம்" என்று கூறக் குகையின் வாயில் திறந்தது. அதற்குள் காசிம் உள்ளே சென்றான் அந்தக் குகையின் கதவு தானாக மூடிக் கொண்டது.
குகைக்குள் சென்ற காசிம் அங்கு மலை போல காணப்பட்ட ரத்தினங்களைக் கண்டு மலைத்துப் போனான். விலை உயர்ந்து ஆடைகள் அனைத்தும் அங்கு பல தலைமுறைகளுக்குக் கொட்டிக் கிடந்தன. கணக்கில்லா மூட்டைகளில் பொற்காசுகள் காணப்பட்டன. அதனை வாரி, வாரி கொடுத்தாலும் ஒரு நாட்டுக்கே பல வருடங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். இதைத் தவிர வெள்ளிச் சாமான்கள் கணக்கில்லாமல் அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அதைப் பார்த்த காசிம் தான் எதற்காக வந்தோம் என்பதையே சில மணி நேரங்களுக்கு மறந்து ஆனந்தத் தாண்டம் ஆடினான்.
பிறகு ஓடிச் சென்று பொற்காசுகளை எடுத்து எடுத்து மழை போல தன் மேல் வாரி இறைத்து விளையாடினான். அதனால் பொற்காசுகள் எங்கும் சிதறியது. அங்கு காணப்பட்ட நகைகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டான். அப்போது காசிமின் வாயெல்லாம் பல்லாக இருந்தது. பிறகு தான் கொண்டு வந்த இருபத்தி நான்கு கோணிப் பைகளிலும் தங்கக் காசுகளையும், வெள்ளிச் சாமான்களையும், வைரக் கற்களையும், உயர் ரக ஆடைகளையும் இன்னும் பலப் பல விலை உயர்ந்த பொருட்களையும் அடைத்தான். அத்தனையையும் அவன் ஒரு ஆள் தூக்கிக் கொண்டு போக முடியுமா என்று கூட அவன் அப்போது யோசிக்க வில்லை. பேராசை காசிம்மின் கண்களை மட்டும் அல்ல அவனது புத்தியையும் மறைத்தது.
இப்படியாக கஷ்டப்பட்டு தான் கோணியில் அடைத்த செல்வங்களை எல்லாம் பல மணி நேரம் பாடுபட்டுத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சென்று ஒவ்வொன்றாக குகையின் வாயில் கதவின் அருகில் வைத்தான் காசிம். அந்தக் களைப்பில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்து விட்டான். பிறகு களைப்பு நீங்கி "திற குகையே" என்று கத்தினான் குகை திறக்கவில்லை. காரணம் காசிம் அந்தக் குகை துறக்க உண்மையில் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான். பிறகு வாய்க்கு வந்த அத்தனை வார்த்தைகளையும் சொன்னான் குகை திறக்கவே இல்லை. சரியாகச் சொல்ல வேண்டியதை உச்சரித்தால் தானே குகை திறக்கும்!
காசிம் அலறித் துடித்தான். இனி என்ன ஆகப் போகிறதோ என்று அழுதான், கத்தினான். ஆனால் அவனைக் காக்க யாரும் அந்தக் குகைக்குள் இல்லை. இப்படி இருக்கும் சமயத்தில், எண்ணற்ற குதிரைகளின் காலடி ஓசையைக் கேட்டான்.
கொள்ளையர்கள் வந்து விட்டதை அவன் உணர்ந்தான். உடனே தான் மூட்டை, மூட்டையாகக் கட்டிய செல்வங்களை எல்லாம் குகையின் வாயிலிலேயே போட்டு விட்டு குகைக்குள் ஓடிச் சென்று ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டான். இது இப்படி இருக்க குகையின் வாயிலை அடைந்த கொள்ளையர்கள், தங்கள் குகையின் பக்கத்தில் மேய்ந்து கொண்டு இருந்த கழுதைகளைப் பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்தனர். எவனோ ஒருவன் உள்ளே எப்படியோ நுழைந்து விட்டான் போல இருக்கிறதே என்ற எண்ணியவர்களாய் "திறவாய் சிம் சிம்" என்ற அந்த மந்திரச் சொல்லைக் கூறினர். உடனே அந்தக் குகையின் வாயில் திறந்தது. நாற்பது கொள்ளையர்களும் விரைந்து அந்தக் குகைக்குள் சென்றனர். உள்ளே பொற்காசுகள் அனைத்தும் ஆங்காங்கே இறைந்து கிடப்பதைக் கண்டான் அந்தக் கொள்ளையர்களின் தலைவன். உடனே தனது சகாக்ககளை அந்த குகை முழுவதும் சல்லடை போட்டுத் தேடச் சொன்னான். அவர்களும் தேடினர் இறுதியில் காசிம் அகப்பட்டுக் கொண்டான். அவனைத் தர தரவென்று இழுத்து வந்து தங்கள் தலைவர் முன்னாள் நிறுத்தினார்கள் கொள்ளையர்கள்.
கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் காசிமை வெறி கொண்டு பார்த்தான். அந்தப் பார்வையிலேயே காசிம் கதி கலங்கிப் போனான். தான் தெரியாமல் குகைக்குள் வந்து விட்டதாகவும், தனக்கு எந்த செல்வங்களும் வேண்டாம் என்றும், உயிருடன் விட்டால் அது ஒன்றே போதும் என்றும் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனின் கால்களில் விழுந்து கெஞ்சினான் காசிம். ஆனால், அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் காசிமை விடுவதாக இல்லை. தனது சகாக்களிடம் அவனை நான்கு துண்டுகளாக வெட்டி எறியுமாறு கூற, அவர்களும் வாழைக் காயை வெட்டுவது போல காசிமின் உடலை நான்கு துண்டுகளாக வெட்டி எறிந்தனர். அத்துடன் நிற்காமல், இனிமேல் யாராவது இந்தக் குகைக்குள் வந்தால் அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான்கு துண்டுகள் ஆக்கப்பட்ட காசிமின் உடலை நான்கு மூலைகளில் கட்டித் தொங்கவிட்டனர். அதன் பின்னர் தான் அவர்கள் அமைதி அடைந்து தாங்கள் கொண்டு வந்த கொள்ளைப் பொருட்களை பத்திரமாக குகைக்குள் வைத்து விட்டு குகையின் வாயிலை நாற்பது பேரும் அடைந்தனர். பிறகு மீண்டும் "மூடுக சிம் சிம்" என்று சொல்ல அந்தக் குகை மூடிக் கொண்டது. மற்றபடி அலிபாபா அதற்கு முன் கொண்டு சென்ற இரண்டு மூட்டைகள் பற்றி எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. காசிம் தான் அங்குக் கொஞ்சம் இங்குக் கொஞ்சமாகப் பேராசை பிடித்து வாரிக் கொட்டிச் சிதறியது தான் நிறைய அளவில் எடுத்தது போன்று இருந்தது.
இது ஒரு புறம் இருக்க காசிமின் வருகையை அவனுடைய மனைவி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள். போன கணவன் தங்க வேட்டை நடத்தி பொன்னையும், பொருளையும் எடுத்து வருவான் என்று ஆசை ஆசையாக இங்கும், அங்குமாக உலாவிக் கொண்டு இருந்தாள். அவளது கால்கள் தரையில் நிற்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும், நேரம் தான் போய்க் கொண்டே இருந்ததே தவிர காசிம் வந்த பாடு இல்லை. அதிகாலையே கள்வர் குகையைத் தேடிச் செற்ற காசிம் வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் அவனது மனைவி மிகவும் கவலை கொண்டாள். கண் கலங்கித் தவித்தாள். இறுதியில் அலிபாபாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
அலிபாபாவோ, "இந்த நேரத்தில் யார் வந்து இருப்பார்கள்?" என்ற கேள்வியுடன் கதவைத் திறந்தான். கலங்கிய கண்களுடன் அவனது அண்ணியார் நின்று கொண்டு இருந்தார்கள். எந்த அண்ணியார் அவனை ஒரு காலத்தில் ஏளனப் படுத்தினார்களோ அதே அண்ணியார் இப்போது உதவி கேட்டு அலிபாபாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள்.
வீடு தேடி வந்த தனது அண்ணியாரை அன்புடன் வரவேற்றான் அலிபாபா. அவனிடம் அழுதுகொண்டே, "அலிபாபா, கள்வர் குகைக்கு சென்ற உனது அண்ணன் இதுவரையில் வரவில்லை. அது எனக்கு மிகுந்த கவலையாக உள்ளது. அத்துடன் அவருக்கு என்ன நேர்ந்ததோ என்ற அந்தக் கவலை இப்போது என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டு இருக்கிறது. எனக்கு தயவு செய்து உதவி செய்" என்றாள்.
அண்ணியின் வார்த்தையைக் கேட்ட அலிபாபா, "அண்ணனுக்கு ஏதும் ஆகாது. அவர் வந்து விடுவார். கவலைப் படாதீர்கள். அவர் நிறைய செல்வங்களை அள்ளிக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து இருப்பார் அதனால் சுமக்க முடியாமல் கழுதைகள் மெதுவாக வந்து கொண்டு இருக்கும். அவ்வளவு தான்" என்று அறுதல் கூறி அனுப்பி வைத்தான். அலிபாபா அவ்வாறு சொல்லிய மாத்திரத்தில் அவனது அண்ணியார் சிறிதே தைரியம் கொண்டாள். பிறகு இருள் சூழ்ந்து இருந்ததால் அலிபாபாவே தனது அண்ணியாரை அவளது வீடு வரையில் கொண்டு போய் விட்டான்.
பிறகு தனது வீட்டுக்குத் திரும்பிய அலிபாபா அண்ணனை நினைத்துக் கவலை கொண்டான். அந்த இரவு வேளையில் அவனால் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு நேரம் ஆகியும் தனது அண்ணன் வர வில்லை என்றால் அவருக்கு ஏதோ ஒரு ஆபத்து நேர்ந்திருக்கும் என்று அவனது உள் மனம் அவனிடம் சொல்லியது. அத்துடன் ஒருவேளை தனது அண்ணனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து இருந்தால் அவனது பிணத்தைப் பகலில் கொண்டு வர முடியாது; நிச்சயமாக அனைவருக்கும் தெரிந்து போய் விடும் என்று எண்ணிய அலிபாபா ஒரு முடிவுக்கு வந்தான். தனது மனைவி நூர்ஜஹானை அழைத்து அவளிடம் சொல்லி விட்டு அந்த இரவு வேளையில் தனது இரு கழுதைகளுடன் புறப்பட்டுச் சென்றான். அன்றைய தினம் அமாவாசையாக இருந்தாலுமே வானம் தெளிவாக இருந்ததால் அவன் இருட்டைப் பற்றிக் கவலை கொள்ள வில்லை. குகையினுள் இரவு, பகலாக பெரிய எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததைப் பார்த்தவன் ஆனதினால் அலிபாபா குகையினுள் செல்வதற்கும் அஞ்சவில்லை. எனினும், அவனது கவலை எல்லாம் அவனது அண்ணனைப் பற்றியே இருந்தது. நிச்சயம் தனது அண்ணன் உயிருடன் இல்லை என்பதை மட்டும் அவனது மனம் திரும்பத் திரும்ப அவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தது.
அந்த மன நிலையில் தான் அலிபாபா கள்வர் குகையின் வாயிலை அடைந்தான் "திறவாய் சிம் சிம்" என்று அவன் சொல்ல, அந்தக் குகையின் வாயில் வழக்கம் போலத் திறந்து கொண்டது. தனது அருமை அண்ணனின் பெயரைச் சொல்லி அழைத்த வண்ணம் உள்ளே சென்றான் அலிபாபா. ஒரு இடத்தில் ரத்தம் ஆறு போலப் பாய்ந்து உறைந்து கிடந்தததைக் கண்டான். அது வந்த வழியைப் பின் பற்றி சென்ற அலிபாபா தனது அண்ணனின் நான்கு துண்டுகளான உடலைக் கண்டான். அந்தக் கோரக் காட்சியை கண்ட மட்டில் அழுது துடித்தான். பிறகு முதல் வேலையாக அந்த நான்கு துண்டான உடலை ஒன்றாக சேர்த்து வைத்துக் கட்டினான். அதனை ஒரு மூட்டைக்குள் அடைத்தான். குகையின் வாயிலை அடைந்தான். பின்னர் அந்தக் குகையின் வாயிலை மூடும் மந்திரத்தை அலிபாபா உச்சரிக்கவும் அந்தக் குகையின் வாயில் கதவு மூடிக் கொண்டது.
வருத்தத்துடன் தனது உடன் பிறந்தவனின் துண்டாடப் பட்ட உடலை கழுதையின் மீது மூட்டையில் வைத்து ஏற்றியவண்ணம் அண்ணனின் வீட்டை அடைந்தான் அலிபாபா. அங்கு வெளித் திண்ணையில் படுத்து இருந்த அண்ணன் வீட்டுப் பணிப் பெண்ணான "மெர்ஜியானாவை" மெல்ல அழைத்து வெளியே கூட்டி வந்து விஷயத்தை சொல்லிக் கொண்டு இருந்த போது பேசும் குரல் கேட்டுக் காசிமின் மனைவி எழுந்து வந்து விட்டாள். தனது கணவர் கொள்ளைக் காரர்களால் கொல்லப்பட்டதை அறிந்தாள். அதனால் அதிர்ந்தாள். கண்ணீர் அவள் கண்களை முட்டிக் கொண்டு வந்தது. வாய் உலர்ந்து போனது. அதைக் கண்ட அலிபாபா அண்ணனின் உடல் துண்டாடப் பட்டு இருப்பதால் அழுது புலம்பி ஊரைக் கூட்டி விடக் கூடாது என்றும், பின்னர் பெரிய வழக்காகி விடும் என்றும் கூறினான். எனவே அவள் தனது அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
