மெர்ஜியானாவின் அறிவுக் கூர்மை

bookmark

அலிபாபாவின் அண்ணன் இறந்து விட்ட சோகம் ஒரு புறம் இருக்க அண்ணனின் பணிப்பெண் "மெர்ஜியானா" அறிவும், திறமையும், அழகும் ஒருங்கே கொண்டவள். அதனால் எப்படிப்பட்ட பிரச்சனையையும் அவள் எளிதில் சமாளித்து விடுவாள். இது அலிபாபாவிற்கும் தெரியும். அதனால் அவளை அணுகி, "மெர்ஜியானா! நீ எனக்கு ஒரு பெரும் உதவியை செய்ய வேண்டும். அது யாதெனில், வெட்டப்பட்ட எனது அருமை அண்ணனின் உடலை அப்படியே அடக்கம் செய்ய முடியாது. அதனால் நீ என் பொருட்டு அதனைத் தைத்து விட யாரையாவது அழைத்து வர வேண்டும். அதாவது இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் ஓட்டுப் போட்டு துண்டாடப்படாத உடல் போன்று நீ செய்ய வேண்டும். அது உனது கையில் தான் உள்ளது, இதோ இந்தத் தங்க காசுகளை வைத்துக் கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பார்" என்று கூறியபடி மெர்ஜியானாவிடம் கொஞ்சம் பொற்காசுகளைக் கொடுத்தான் அலிபாபா.

எனினும் மெர்ஜியானா கொஞ்சம் தயங்கினாள். அவள் எங்கே போக மறுத்து விடுவாளோ என்று நினைத்துக் கவலை கொண்ட காசிமின் மனைவி அவளிடம்," மெர்ஜியானா! எனது பேராசையாலும் விதி வசத்தாலும் எனது கணவருக்கு இப்படி ஆகி விட்டது. எனது கணவர் இப்படி வெட்டப் பட்டு இறந்து விட்டார் என்ற செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. அது அவருக்கு இழுக்கைத் தரும். அதனால் இதனை மிகவும் ரகசியமாக வைத்துக் கொண்டே ஆக வேண்டும். அதனால் தயவு செய்து என்னை உனது சகோதரியாக பாவித்து எனக்காக அலிபாபா சொன்னபடி இந்த உடலை தைக்க யாரையாவது அழைத்து வா" என்றாள்.

எப்போதுமே ஆணவத்துடன் காணப்படும் காசிமின் மனைவி ரசியா மிகவும் பணிந்து கேட்பதைப் பார்த்த மெர்ஜியானா ஆச்சர்யம் அடைந்தாள். ஆம்! அன்றைய தினம் இறந்தது காசிம் மட்டும் அல்ல, காசிமின் மனைவி ரசியா வின் ஆணவமும் தான். தனது கணவர் காசிம் இறந்ததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ரசியா நன்கு உணர்ந்து இருந்தாள். இதனை அவளது பேச்சில் இருந்தே அறிந்து கொண்டாள் மெர்ஜியானா. இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த மெர்ஜியானா அலிபாபா சொன்னபடி அந்த இரவில் தனது முகத்தை முக்காடு இட்டு மறைத்தபடி பாபா முஸ்தபா என்ற தையற்காரர் வீட்டிற்குச் சென்றாள்.

பாபா முஸ்தபா சவ சேலையைத் தைத்துக் கொடுக்கும் பழக்கம் உள்ளவர். அவரிடம் ஒரு பொற்காசைக் கொடுத்த மெர்ஜியானா காசிமின் உயரம் பற்றி எண்ணியவளாய், அவரிடம் "பெரியவரே! கிட்டத்தட்ட ஆறடிக்கு ஒரு சவச் சேலையைத் தைத்துக் கொடுக்க வேண்டும்" என்றாள். அவரும் உடனே தைத்துத் தருவதாக வாக்களித்தார். பிறகு தான் சற்று நேரத்தில் வெளியில் சென்று வருவதாகக் கூறிய மெர்ஜியானா மீண்டும் அந்தத் தையல் காரரின் வீட்டை அடைந்தாள். அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள்.

"இந்த இரவு வேளையில் நான் கேட்டுக் கொண்டதும் உடனே இரவு வேளை என்று கூட பார்க்காமல் எனக்காக சவச் சேலையை செய்து தர முனைப்புடன் தயார் ஆனதற்கு மிக்க நன்றி" என்றாள்.

அதற்கு முஸ்தபா," அடப் போமா! சாவு என்ன இரவு, பகல் என்றெல்லாம் சொல்லிவிட்டுத் தான் வருகிறதா என்ன? மேலும் நான் உனக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேள். இந்த இரவு வேளையில் சவச் சேலையை தைக்க நான் ஒப்புக் கொண்டது உண்மையில் உனக்காக அல்ல நீ கொடுத்த பொற் காசுக்காக. இன்னும் இரண்டு பொற்காசுகளைக் கொடுத்தால் இதை விடப் பெரிய வேலையைக் கூட இந்த முஸ்தபா கண நேரத்தில் செய்து விடுவான்" என்று தனது பெருமையைக் கூறினான்.

அதைக் கேட்ட மெர்ஜியானா,"அப்படியா! ஒரு பொற்காசுக்கே இப்படி எனில் நான் நான்கு பொற்காசுகளை உங்களுக்குக் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா?" என்றாள்.

"நான்கு பொற்காசுகள் என்றால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேனே! உயிரைத் தவிர நீ எதைக் கேட்டாலும் கொடுப்பேனே" என்றான் முஸ்தபா.

"உங்கள் உயிர் எல்லாம் எனக்கு வேண்டாம். ஒரு பேச்சுக்கு கிழிந்த சதையைக் கூட தைத்துத் தருவீர்களா?" என்று கேட்டாள் மெர்ஜியானா.

"ஐந்து பொற்காசுகளாகக் கொடுத்தீர்கள் என்றால் கிழிந்த சதை என்ன வெட்டுப் பட்ட உடலைக் கூட இந்த முஸ்தபா நேர்த்தியாகத் தைத்து ஒட்டித் தருவான்" என்றான் அந்தத் தையல்காரன் முஸ்தபா.

"ம்ம்... அது தான் எனக்கும் வேண்டும். தங்களுக்கு நான் ஐந்தல்ல பத்து பொற்காசுகளைத் தருகிறேன். ஏன்? எதற்கு என்றெல்லாம் கேட்காமல் தாங்கள் கண்களை கட்டியபடி இதோ தாங்கள் தைத்து வைத்துள்ள இந்த சவச் சேலையையும், ஊசி, நூலையும் மேலும் தைக்கத் தேவையான உங்கள் இதர பொருட்களையும் உடன் எடுத்துக் கொண்டு என்னுடன் வாருங்கள்" என்று பாபா முஸ்தபாவிடம் கூறினாள் மெர்ஜியானா.

"பத்து பொற்காசு தருவியா?" என்றார் முஸ்தபா.

பத்து பொற்காசுகளை எடுத்து முஸ்தபா பார்க்கும் படியாக மேஜை மீது வைத்தாள் மெர்ஜியானா. அதைப் பார்த்த முஸ்தபா ஆவலுடன் அதனை எடுக்கப் பாய்ந்த சமயத்தில் மெர்ஜியானா மீண்டும் அந்தக் காசை எடுத்து பத்திரமாக சுருக்குப் பையில் பூட்டி முடிந்து கொண்டு," வேலை முடிந்த பிறகு தான் இந்தப் பத்து தங்கக் காசுகளும் உமக்கு சொந்தம்" என்றாள்.

"அதான் காசை காட்டிட்டியே! வா போகலாம். எனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் நான் பத்திரமாக எடுத்துக் கொண்டேன். இப்போது நீ எனது கண்ணைக் கட்டலாம்" என்றான் முஸ்தபா.

அதன்படியே முஸ்தபாவின் கண்களை ஒரு கறுப்புத் துணியால் கட்டி அந்த நள்ளிரவு வேளையில் யாருமே அறியாதபடி முஸ்தபாவை காசிமின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள் மெர்ஜியானா. செல்லும் வழியில் முஸ்தபா ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்து கொண்டு இருந்தார். இதைப் பார்த்த மெர்ஜியானாவுக்கு பெரிய வியப்பாக இருந்தது. காரணம் முஸ்தபா எப்போது பார்த்தாலும் சதா பேசிக் கொண்டே இருக்கும் இயல்பு உடையவர். ஆனால், இப்போதோ அவர் அமைதியாக வந்து கொண்டு இருந்தார். "இதுவும் நன்மைக்கே" என்று நினைத்த மெர்ஜியானா காசிமின் வீட்டுப் படியை அடைந்தாள். வீட்டினுள் உள்ளே சென்றாள். பாபா முஸ்தபாவின் கண்களைக் கட்டிய அந்தக் கறுப்புத் துணியை நீக்கினாள். அது மந்தமான வெளிச்சத்தைக் கொண்ட அறையாக இருந்தது. அங்கு இருப்பவர்களின் முகங்களில் முக முடி காணப்பட்டது. இவ்வளவு ஏன்? இறந்து கிடந்த காசிமின் முகத்திற்கு கூட முக முடி போடப்பட்டு இருந்தது. எனினும், அதைப் பற்றி எல்லாம் கேட்க விரும்பாத பாபா முஸ்தபா தனக்குப் பொற்காசுகள் வந்தால் போதும் என்ற நோக்கில் துண்டு, துண்டுகளாகக் கிடந்த காசிமின் உடலை ஓட்ட வைத்து மிகவும் நேர்த்தியாக தைத்துக் கொடுத்தார். இப்படியாக அந்தத் தைய்யல் காரரின் வேலை முடிந்த மாத்திரத்தில் மீண்டும் அவரது கண்கள் கட்டப்பட்டன. பிறகு மீண்டும் மெர்ஜியானா அந்த நள்ளிரவில் அந்தத் தைய்யல் காரரை அவரது கண்கள் மூடிய நிலையில் அவரது வீடு வரை கொண்டு போய் விட்டாள். அப்போதும் கூட பாபா முஸ்தபா வந்த வழி நெடுகும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்தார். சரி, பெரியவர் பயத்தின் காரணமாக ஏதும் பேசவில்லை போலும் என்று நினைத்தாள் மெர்ஜியானா. ஆனால், உண்மை அது அல்ல பாபா முஸ்தபா தனது வீட்டிற்கும், காசிமின் வீட்டிற்கும் இடையே  ஒவ்வொரு அடியையும் எண்ணிக் கொண்டே வந்தார். முஸ்தபாவின் வீடு வந்ததும் அவரது கைகளில் பொற் காசுகளை கொடுத்து விட்டு மெல்ல நகர்ந்து ஓடினாள் மெர்ஜியானா.

பாபா முஸ்தபா தனது கண்களைத் திறந்து பார்த்த சமயத்தில் அங்கு யாருமே இல்லை. அவரது கையில் மட்டும் பத்து பொற்காசுகள் இருந்தது.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக காசிமின் உடலை சுத்தம் செய்து வாசனைத் திரவியங்களை தெளித்து அதனை அடக்கம் செய்யத் தயார் செய்தாள் மெர்ஜியானா. அக்கம், பக்கத்தினர் பலர் காசிம் இறந்து விட்டதை கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்க அவரது மாளிகை போன்ற அந்த வீட்டிற்கு வந்தார்கள். வந்தவர்களிடம் காசிம் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று அவர்கள் நம்பும் விதமாகக் கூறினான் அலிபாபா. இதற்கு இடையில் ஈமச் சடங்குகளை முறைப்படி செய்ய இமாமை அழைத்து வந்தாள் மெர்ஜியானா. அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட்டு காசிமின் உடல் சவப்பெட்டியில் வைத்து சகல மரியாதைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டு ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டது.

காசிமின் வீட்டில் விதவையான காசிமின் மனைவிக்கு அக்கம் பக்கத்துப் பெண்கள் அனைவரும் ஆறுதல் சொல்லிவிட்டுக் கலைந்து போயினர். பணிப்பெண் மெர்ஜியானாவின் அறிவு கூர்மையால் காசிம் வெட்டப்பட்டு இறந்தான் என்ற செய்தி மூடி மறைக்கப்பட்டது. இதனால் காசிமின் மனைவியும் அவனது தம்பியான அலிபாபாவும் அந்தத் துயரத்திலும் கூட நிம்மதி அடைந்தார்கள். அன்றைய தினம் முதல் அலிபாபாவை அவனது மனைவியுடன் சில காலம் தனது வீட்டிலேயே தங்கும் படியாகக் கேட்டாள் காசிமின் மனைவி. அண்ணியின் சொல் படி அலிபாபாவும் அவ்விடத்திலேயே தங்கினான்.