அலாவுதீன் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளுதல்
அலாவுதீனால் அனுப்பப்பட்ட நவ இரத்தினங்களின் அழகைக் கண்ட இளவரசி பிரமித்துப் போனாள். தனக்கு ஊழியம் செய்வதற்காக வந்திருந்த அழகிய பெண்களைப் பார்த்து அகம் மகிழ்ந்தாள். தனது அருமை மகளின் முகத்தில் அதுவரையில் காணாத மகிழ்ச்சியைக் கண்ட அவளது பெற்றோர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்கள். அவர்களும் அதனால் மகிழ்ந்து களி கூறினார்கள். சுல்தான் மனதினில் ஆரம்பத்திலேயே தனது மகளை அலாவுதீனுக்கே மணம் முடித்து வைத்து இருந்திருக்கலாம் என்ற அந்த எண்ணமும் அப்போது தோன்றி மறைந்தது.
இதற்கிடையே தனது வீட்டை அடைந்த அலாவுதீனின் தாயார் விஷயத்தை அலாவுதீனிடம் கூறி மகிழ்ந்தாள். அதைக் கேட்ட அலாவுதீன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தனது ஆசைப்படி எல்லாமே தனது வாழ்வில் நடந்து கொண்டு இருப்பதை நினைத்து அல்லாவை பிரார்த்தனை செய்தான். பிறகு அரசவைக்கு செல்லத் தீர்மானித்தான். ஆனால், மன்னரே ஆச்சர்யப்படும் வகையில் தான் மன்னரை சந்திக்க வேண்டுமே என்று யோசித்தவனாய் முதல் வேலையாக விளக்கை தேய்த்து பூதத்தை வர வழைத்தான். பூதமும்,"சொல்லுங்கள் உசூர். அடியேன் கணப் பொழுதில் செய்து முடிக்கிறேன்" என்றபடி வந்து நின்றது.
உடனே அலாவுதீன் பூதத்திடம், "அன்பு பூதமே! எந்த மன்னரும் இதுவரையில் அணியாத சிறந்த உடை ஒன்று வேண்டும். பின்னர் நான் குளிப்பதற்கு ஒரு நல்ல ஹம்மாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அத்துடன் நான் குளிக்கும் வரையில் அவ்விடத்திலே இருந்து எனக்கு நீ உதவ வேண்டும். பின்னர் குளித்து முடித்ததும் பத்திரமாக என்னைக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட வேண்டும். இதுவே இப்போதைக்கு உனக்கான எனது கட்டளை" என்று கூறி முடித்தான்.
பூதமும் உடனுக்குடன் அலாவுதீனின் மேற்கண்ட கட்டளையை நிறைவேற்றியது. அதன் படி அலாவுதீனை ஒரு நல்ல ஹம்மாவிற்கு அழைத்துச் சென்றது. தனது உருவத்தை சாதாரண மனிதன் போல மாற்றிக் கொண்டு அலாவுதீனுக்கு உதவி செய்தது. பிறகு அலாவுதீன் குளித்து முடித்த மாத்திரத்தில் அவனை மீண்டும் கொண்டு வந்து வீட்டில் விட்டது.
இப்படியாக அலாவுதீனின் முதல் கட்டளையை நிறைவேற்றிய அந்தப் பூதம் அலாவுதீனிடம் பணிந்த படி, "பிரபு தங்களுக்கு வேறு ஏதேனும் வேண்டுமா?" என்று கேட்டது.
"ஆமாம் வேண்டும். உடனுக்குடன் நாற்பத்தெட்டு வீரர்களைக் கொண்டு வர வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே விதமான சீருடையை அணிந்து இருக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரிடமும் போருக்கு உரிய ஆயுதங்கள் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் அத்தனை பேரும் குதிரைகளில் தான் வர வேண்டும். அந்தக் குதிரைகள் கூட எந்த மன்னரிடம் இல்லாத பலமான குதிரைகளாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு நடுவில் நான் ராஜ குமாரன் போலச் செல்ல ஏதுவாக எனக்கு ஒரு தனி குதிரை வேண்டும். மேலும், நான் ஏறிச் செல்லும் அந்தக் குதிரையின் இருக்கையும் பிறவும் பொன்னாலும் நவரத்தினகள் போன்றவைகளாலும் பொதிந்து இருக்க வேண்டும். அத்துடன் எனக்கு நாற்பத்தி எட்டாயிரம் பொற்காசுகளும் வேண்டும். ஆயிரம் பொற்காசை ஒருவர் வைத்துக் கொண்டு போவோர் வருவோருக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் நாற்பத்தெட்டு வெள்ளை நிற அடிமைகளும் வேண்டும். மேலும் எனது தாயாருக்கு உடுத்துவதற்கு மிகவும் வேலைப்பாடு உடைய ஆடைகள் வேண்டும். அத்துடன் எனது அம்மாவுடன் செல்வதற்கு பன்னிரண்டு அழகிகள் வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்கத்தாலான தட்டில் கற்கண்டு, மற்றும் பழ வகைகள் இருக்க வேண்டும்" இப்படியாக ஒரு பட்டியலையே தயார் செய்து பூதத்திடம் கூறி முடித்தான் அலாவுதீன். அலாவுதீனின் ஆணைப்படி அந்த பூதம் கணப் பொழுதில் எல்லாவற்றையும் தயார் செய்து அவனுக்காக அளித்தது.
அலாவுதீன் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அந்த அழகிய குதிரையின் மீது ஏறிக் கொண்டான் இவ்விதமாக ஊர்வலம் புறப்பட்டுப் போனது. அவனுக்கு முன்னாலும் பின்னாலும் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்து இருந்தனர். மறுபுறம், பொற்காசுகளை வாரி வாரி இறைப்பவர்கள் அலாவுதீனுக்கு முன்னால் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அலாவுதீனின் ஈகையை அனைவரும் கண்டு பாராட்டினார்கள். அலாவுதீனை வாழ்த்தவும் செய்தார்கள். அலாவுதீன் அரண்மனையை நோக்கித் தனது பரிவாரங்களுடம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார் மன்னர். அதைக் கேட்ட மாத்திரத்தில் அவரே சென்று அலாவுதீனை வரவேற்க அரண்மனை வாயிலுக்கு வந்து நின்றார்.
அரண்மனை வாயிலை அடைந்த அலாவுதீன் குதிரையை விட்டு இறங்குவதற்கு உதவியாக இரண்டு பக்கங்களிலும் இருவர் நின்றவண்ணம் கடிவாளங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டனர். சிலர் அவனுக்குக் கைலாகு கொடுத்து இறங்குவதற்கு உதவினர். இவ்விதம் அவன் இறங்கவும் அவனை அங்கிருந்து அரசரிடம் அழைத்துச் சென்றனர்.
சுல்தான் சகல மரியாதையுடன் அலாவுதீனை அழைத்துச் சென்றார். ராஜ உடையில் இருந்த அலாவுதீனைக் கண்டு மெய் சிலிர்த்தார். அலாவுதீனுடன் அவனது தாயாரும் வந்திருப்பதை அறிந்த சுல்தான் அவர்களையும் சகல மரியாதைகளுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அனைவரும் அங்கு ஆனந்தமாகப் பேசி மகிழ்ந்தனர். அலாவுதீன் அனைவரிடமும் பணிவன்புடன் நடந்து கொண்டான்.
பின்னர் அலாவுதீனுக்கு அரண்மனையில் அற்புதமான உணவு வகைகளை பரிமாறினார் சுல்தான். இந்த உலகத்தில் இருந்த அனைத்து வகையான உணவுப் பண்டங்களையும் சுல்தான் உணவு மேஜையில் தயாராக முன்னமே வைக்கச் சொல்லி இருந்தார். அதனை அலாவுதீன் சந்தோஷமாக உண்டு களித்தான். அப்போது முக்கிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க உணவு உட்கொள்ளும் போதே சுல்தான் அலாவுதீனிடம் பேச்சுக் கொடுத்தார். சுல்தான் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அலாவுதீன் மிகச் சுருக்கமாகவும் இனிமையாகவும் பதில் அளித்தான். இப்படியாக திருமண விருந்து அனைவரும் சந்தோஷப் படும் விதமாக இருந்தது.
திருமண விருந்து முடிந்த பிறகு சுல்தான் மதத் தலைவர்களையும், சாட்சிகளையும் அழைத்து வரக் கட்டளை பிறப்பித்தார். அவர்கள் அனைவரும் வந்த மாத்திரத்தில் அலாவுதீனுக்கும் பதர் அல் - புதுருக்கும் இடையில் திருமணம் நடைபெற்று அதற்கான திருமண ஒப்பந்தம் பெரியோர்கள் பலர் முன்னிலையில் கையெழுத்தானது. ஒரு வழியாக அலாவுதீனை முறைப்படி தனது மருமகனாக ஆக்கிக் கொண்டார் சுல்தான்.
பின்னர் திருமணம் முடிந்த கையோடு அலாவுதீன் சுல்தானிடம் தான் இளவரசிக்காக ஒரு அற்புத மாளிகையை கட்டப் போவதாகக் கூறினான். அதனைக் கேட்ட சுல்தான் மிகவும் மகிழ்ந்தார். அத்துடன் சுல்தான் தனது மாளிகையில் முன்னாள் உள்ள காலி இடங்களைக் காட்டி இவ்விடங்களில் எந்த இடம் பிடிக்கிறதோ அந்த இடத்தை மாளிகை கட்டத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார். அலாவுதீனும் உடனே அதற்கு உரிய வேலையைத் தான் ஆரம்பிக்கப் போவதாகக் கூறி சுல்தானின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தனது வீட்டை அடைந்தான்.
அப்படியாகத் தனது வீட்டை அடைந்த அலாவுதீன் நேராகத் தனது அறையை அடைந்தான். அங்கு யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டு இருந்த விளக்கை எடுத்துத் தேய்த்து பூதத்தை வர வழைத்தான். அந்தப் பூதமும் உடனுக்குடன் அலாவுதீனின் முன்னாள் வந்து நின்றது. வழக்கம் போல என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது.
உடனே அலாவுதீன் அந்த பூதத்திடம் தனக்கு ஒரு அற்புதமான மாளிகையை உடனே கட்டித் தர வேண்டும் என்றும் அந்த அரண்மனை அரசரின் அரண்மனையை ஒட்டி உள்ள இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறினான். அத்துடன் அந்த மாளிகை யாருக்கும் சந்தேகம் ஏற்படாத படி சிறந்த வேலையாட்களைக் கொண்டு ஏழு நாளைக்குள் கட்டப்பட்டு விட வேண்டும் என்றும் கூறினான்.
அதன் படியே அந்தப் பூதம் யாருக்கும் சந்தேகம் வராதபடியாக அத்துடன் எல்லோரும் நம்பும் படியாக ஏழு நாட்களுக்குள் ஒரு அற்புதமான மாளிகையை கட்டி முடித்தது. இப்படியாக அந்த அற்புத மாளிகை கட்டப்பட்டு விட்டது. அந்த மாளிகையின் ஒவ்வொரு அறைகளும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறந்த மாளிகையில் என்னென்ன இருக்க வேண்டுமோ அந்த அனைத்து அம்சங்களுமே அலாவுதீனால் கட்டப் பட்ட அந்த மாளிகையில் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அந்த மாளிகையைப் பார்க்கையில் அதைத் தான் அரண்மனை என்று எல்லோரும் கூறும்படி இருந்தது. உண்மையிலேயே சுல்தானின் அரண்மனை அலாவுதீன் கட்டிய மாளிகையின் முன்னாள் ஒரு விருந்தினர் மாளிகை போலத் தான் காட்சி தந்தது. ஒரு வகையில் அதனை நினைத்து சுல்தானே மனதளவில் வெட்கினார்.
இப்படியாக மாளிகை கட்டப்பட்டு முடித்த பின்னர் அலாவுதீன் தனது புது மனைவியுடன் அந்த மாளிகையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தான். அன்றைய தினம் நகரம் எங்கும் அலங்கரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதனை சிறப்பிக்க அனைத்து நாட்டு அரசர்களும், ஆளுநர்களும் அழைக்கப் பட்டு இருந்தனர். அத்துடன் பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மக்கள் அனைவருக்கும் அலாவுதீன் உடன் வந்தவர்கள் பொற்காசுகளை அளித்து கௌரவித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் அலாவுதீனை முக்கிய அதிகாரிகள் சுல்தானின் ஹம்மாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அலாவுதீன் குளித்து முடித்த பின்னர் அவனது உடலில் வாசனைத் திரவியங்கள் அனைத்தும் கொண்டு வந்து பூசப்பட்டது. அற்புதமான ஆடையை அணிந்து கொண்டு ராஜ குமாரன் போலக் காணப்பட்டான் அலாவுதீன். அவனது தாயும் கூட அப்போது தனது மகனைக் கண்டு ஆனந்தம் கொண்டாள்.
பின்னர் அன்றைய தினம் இரவு சகல மரியாதைகளுடன் அலாவுதீன் மீண்டும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டான். அந்த அரண்மனையின் மேற்தட்டில் தான் இளவரசியின் படுக்கை அறை இருந்தது. அதன் அருகில் இருந்த அறையில் தான் இளவரசிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அலாவுதீன் இளவரசியின் படுக்கை அறையில் அவளுக்காக காத்திருந்தான். அப்போது இளவரசி அங்கு தோழிகள் புடை சூழ அழைத்து வரப்பட்டாள். அந்த அறையில் விடப்பட்டாள்.
அப்போது அலாவுதீன் மணமகளின் முகத்திரையை விலக்கினான். அத்துடன் அவனது அன்புக்கு இனிய அவளைக் கட்டி அணைத்து மகிழ்ந்தான். தனது ஆசை நிறைவேறியதை எண்ணி ஆனந்தம் கொண்டு அன்றைய இரவுப் பொழுதை இளவரசியுடன் சந்தோஷமாகக் கழித்தான்.
அடுத்த நாள் காலையும் விடிந்தது. அலாவுதீனும், இளவரசியும் குளித்து முடித்து அலங்காரம் செய்து கொண்டு சுல்தானையும், அவரது மனைவியையும் காணச் சென்றனர். மகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட சுல்தானின் மனைவி ஆனந்தம் கொண்டாள். பிற்பாடு அன்றைய தினம் முழுவதுமே விருந்தும், கேளிக்கையுமாக இருந்தது.
சுல்தான் தனது முக்கிய மந்திரியை அழைத்து அலாவுதீன் கட்டிய மாளிகையை சுற்றிக் காட்டி மகிழ்ந்தார். அலாவுதீன் கட்டிய மாளிகையை பார்த்த அந்த முக்கிய மந்திரி சுல்தானிடம், "அரசே! இது போன்ற அழகிய மாளிகையை மந்திர வித்தைத் தெரிந்தவர்கள் தான் கட்ட முடியும்" என்று கூறினார். அதனைக் கேட்ட அரசர் முக்கிய மந்திரி பொறாமையால் தான் இது போன்ற வார்த்தைகளை பேசுவதாக சிந்தித்தபடி அதனைக் காதில் வாங்கியும் வாங்காதது போல இருந்தார்.
மறுபுறம் அலாவுதீன் அந்த நாட்டுத் தளபதிகளை சந்தித்து அவர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டான். அவர்களுக்குப் பரிசுகள் பல கொடுத்து கௌரவித்தான். அத்துடன் அவர்களிடம் இருந்து எண்ணற்ற போர்க் கலைகளையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.
சில மாதங்கள் கழிந்தது எதிரிகள் பாக்தாத் நகரத்தை முற்றுகையிட்ட சமயம் சுல்தான் உடல் நலக் குறைவால் அவதிப் பட்டுக் கொண்டு இருந்தார். அதனால் தனது மருமகனின் தலைமையில் படைகளை அனுப்பி வைத்தார். அலாவுதீன் அனைத்துப் போர்க் கலைகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்று இருந்ததால் மிக எளிதாக எதிரிகளை வீழ்த்தி அவர்களைக் கொன்று குவித்தான். எதிரிகளை தோற்கடித்து அவர்களின் எல்லை வரையில் ஓட, ஓட விரட்டி அடித்தான். அத்துடன் எதிரிகளின் பொருட்களையும் கவர்ந்தான். அந்தப் பொருட்களில் ஆடு, மாடுகள், பொன் ஆபாரணங்கள் என அனைத்தும் அடங்கும்.
அலாவுதீன் வெற்றியுடன் திரும்பியதை அறிந்த சுல்தான் அவனை முத்தம் இட்டு வரவேற்றார். அத்துடன் அலாவுதீனின் வெற்றியை பறை சாற்றும் விதத்தில் வெற்றி விழாவைக் கொண்டாட உத்தரவு பிறப்பித்தார். அதன் படி நகர வீதிகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு மக்கள் பலர் அலாவுதீனின் வெற்றியை வாயாரப் புகழ்ந்தனர். அனைத்துத் தரப்பு மக்களின் அதாரவும் அலாவுதீனுக்கு இருந்தது. காரணம் தன்னிடம் இருந்த பொன்னையும், பொருளையும் ஏழை மக்களுக்கு கொடுத்து அவர்களின் அன்பை ஏற்கனவே பெற்று இருந்தான் அலாவுதீன். அதனால் பாக்தாத் மக்கள் அலாவுதீனை தங்களுள் ஒருவனாகக் கருதினார்கள். இதன் காரணமாக அலாவுதீனின் வெற்றி விழாவை மக்களே தங்கள் வீட்டு விழாவாகக் கருதி அதனைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படியாக அலாவுதீனின் வாழ்வு சிறந்து விளங்கிக் கொண்டு இருந்தது.
