அலாவுதீன் இளவரசியை கைப்பிடிக்க நடத்திய போராட்டங்கள்

bookmark

தன்னிடம் அதிக அளவு பாசம் கொண்ட தனது அன்புத் தாயை அவன் மேலும் ஏமாற்ற விரும்பவில்லை, மெல்லத் தனது தாயை அழைத்து அவளிடம்  தனது உள்ளத்தில் உள்ளதைக் கூறிவிட்டான் அலாவுதீன். மேலும் தான் மணந்து கொண்டால் இளவரசியைத் தான் மணந்து கொள்வேன் என்று அவன் கூற. அதனைக் கேட்ட அலாவுதீனின் தாயார், "இதெல்லாம் கனவில் கூட நடக்காதே! மன்னர் தனது மகளை அத்து மீறிப் பிறர் பார்த்தாலே தலையை வெட்டி எறிந்து விடுவார். அப்படி இருக்க அலாவுதீன் இப்படிச் சொல்கிறானே!" என்று நினைத்து நினைத்துப் புலம்பினாள்.

பிறகு அலாவுதீனை அழைத்து அவனிடமே பேசிப் பார்த்தாள் அலாவுதீனின் தாயார்.

"மகனே உனக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா? ஏன் கனவிலும் நடக்காத ஒன்றைக் கூறி என்னைக் கலங்கடிக்கிறாய்?" என்றெல்லாம் கேட்டுக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.

ஆனால் அலாவுதீன், "தாயே நான் மணந்தால் சுல்தானின் மகளைத் தான் மணப்பெண். இல்லையேல் இந்த வாழ்க்கையை வாழாமல் நான் மரணிப்பேன். அதனால் நீ உடனே சென்று சுல்தானிடம் பெண் கேட்டு வா!" என்று தனது தாயிடம் கூறினான் அலாவுதீன்.

"சுல்தானின் பெண்ணைப் பெண் கேட்டுப் போவதற்கு நமக்கு ஒரு தகுதி வேண்டாமா அலாவுதீன். நமக்கு என்ன தகுதி உள்ளது? தவிர இந்த நாட்டு மன்னரை சந்திக்கச் சென்றாலே பரிசுப் பொருட்களுடன் போவது தான் மரியாதை. அந்தப் பரிசுப் பொருளைக் கொடுக்கக் கூட நமக்குத் தகுதி இல்லை. காரணம் நமது வீட்டில் சுல்தானுக்குப் பரிசு அளிக்கும் படியாக எந்த ஒரு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களும் இல்லையே!" என்றாள் அலாவுதீனின் தாய்.

உடனே அதனைக் கேட்ட அலாவுதீன்," நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள் தாயே. பரிசுப் பொருட்கள் தானே! இப்போதே பூதத்தின் உதவியால் நான் அதனை வரவழைத்துத் தருகிறேன்" என்று கூறியபடி விளக்கை தேய்த்தான். விளக்கில் இருந்து வெளிவந்த பூதம், "உசூர்! தங்களது தேவையை நிறைவேற்றவே நான் வந்து உள்ளேன். எதுவானாலும் கேளுங்கள் உடனே நிறைவேற்றித் தருகிறேன்" என்றது.

உடனே அலாவுதீன் பூதத்திடம் அனைத்தையும் கூறி சுல்தானுக்கு பரிசளிக்க விலை உயர்ந்த ரத்தினக் கற்களை கொண்டு வந்து தருமாறு வேண்டினான். அதன் படியே பூதமும் மிகப்பெரும் தங்கக் கிண்ணங்கள் பலவற்றில் ரத்தினக் கற்களை கொண்டு வந்து கொடுத்தது. அதனைக் கண்ட அலாவுதீனின் தாய் மிரண்டு போய் அலாவுதீனிடம்," மகனே, இத்தனை ரத்தினக் கற்களையும் நான் தனி ஒரு ஆளாக சபைக்கு எடுத்துச் செல்வது என்பது முடியாத காரியம். அது மட்டும் அல்ல, நான் போட்டு இருக்கும் உடுப்புக்கும் இந்த ரத்தினக் கற்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் உள்ளது. நிச்சயம் இந்த உடுப்பை அணிந்த படி நான் இந்த ரத்தினக் கற்களை எடுத்துக் கொண்டு சென்றால் பார்ப்பவர்கள் 'எங்கிருந்து இதனைத் திருடிக் கொண்டு வந்தாய்?' என்று தான் கேள்வி கேட்பார்கள்" என்று கூறினாள்.

உடனே அலாவுதீன் மீண்டும் அந்த பூதத்திடன், "கிண்ணம், கிண்ணமாக ரத்தினக் கற்களை கொடுத்த நீ. அதனை சுமந்து செல்ல பணிப் பெண்களையும் கொடு. அத்துடன் உடனே எனது தாய் அணிந்து கொள்ள கவுரவமான விலை உயர்ந்த ஆடைகளையும் கொண்டு வந்து கொடு" என்று கட்டளை பிறப்பித்தான். அதன் படியே அந்தப் பூதம் பத்து பணிப்பெண்களை கொடுத்தது. அவர்கள் அழகில் சிறந்து விளங்கினார்கள். மேலும், ஒரே நொடியில் அலாவுதீனின் தாயாரின் உடை ஒரு நாட்டின் மகாராணின் உடையைப் போல மாறியது. அதனைக் கண்டு அவள் வியந்து போனாள். பிறகு அலாவுதீன் அந்த பூதத்திற்கு நன்றி தெரிவித்து அதற்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான். அத்துடன் தனது தாயையும் அரண்மனை தர்பாருக்கு நம்பிக்கை வார்த்தைகள் பல கூறி அனுப்பி வைத்தான்.

பிறகு கைகளில் ரத்தினங்கள் தாங்கிய தங்கக் கிண்ணங்களுடன் பணிப்பெண்கள் பின்தொடர அலாவுதீனின் தாயார் அரண்மனையை அடைந்தாள். அவளது விலை மதிக்க முடியாத ஆடையைக் கண்ட காவலர்கள் யாரோ உயர்குடி பிரபுக்களின் வீட்டில் இருந்து அவள் வந்திருப்பதாக நினைத்தனர். அப்படித் தான் அவளை நடத்தினார்கள். அதனால் அவளை அவர்கள் காக்கக் கூட வைக்க வில்லை. உடனே அரண்மனை தர்பாருக்கு வழி காட்டினார்கள். அவளும் எந்தவித தடைகளும் இல்லாமல் அரண்மனை தர்பாரை அடைந்தாள். அங்கு தான் சுல்தான் வழக்குகளை விசாரித்துக் கொண்டும் உடனுக்குடன் தீர்ப்பளித்துக் கொண்டும் இருந்தார். சுல்தானின் பார்வை அலாவுதீனின் தாயாரின் மீது விழுந்தது. அத்துடன் உடன் வந்த பணிப் பெண்களையும் கண்டார். உடனே தனது முக்கிய அமைச்சரை அழைத்தார். அந்த அமைச்சரும் சுல்தானின் ஆணைக்கு இணங்கி ஓடோடி வந்தார். அந்த அமைச்சரிடம் அலாவுதீனின் தாயாரை சுட்டிக் காட்டிய சுல்தான்,"அதோ நிற்கும் அந்தப் பெண் உயர் குடியில் பிறந்தவள் போல இருக்கிறாள். அதனால் உடனே அவளை தாமதிக்காமல் அழைத்து வாருங்கள். அவள் என்னைப் பார்க்கத் தான் வந்துள்ளாள் போல. அவள் வந்த காரணத்தை அறிய ஏனோ எனது மனம் துடிக்கிறது" என்று கூறினார்.

அமைச்சர் உடனே மன்னரின் ஆணைப்படி அலாவுதீனின் தாயாரை சகல மரியாதைகளுடன் மன்னரின் முன்னாள் கொண்டு போய் நிறுத்தினார். அவளும் மன்னரை முறைப்படி வணங்கி நின்றாள்.

மன்னர் அவளிடம் மிகுந்த பரிவாகப் பேசினார். அத்துடன் அவள் தன்னைத் தேடி வந்த காரணத்தையும் கேட்டார்.

அப்போது அலாவுதீனின் தாயார், "சுல்தான், நான் வந்த காரியம் மிகவும் முக்கியமானது. ஆனால் அதனை நான் இந்தச் சபையில் எல்லோர் முன்னிலையிலும் கூற இயலாது. அத்துடன் நான் தங்களிடம் அதைப் பற்றி தனியாகப் பேச விரும்புகிறேன்" என்றாள்.

அப்போதே அவளுடைய தைரியத்தைப் பாராட்டிய மன்னர் தனது பரிவாரங்களை வெளியில் அனுப்பி விட்டு முக்கிய ராஜ விசுவாசிகளை மட்டும் உடன் வைத்துக் கொண்டார். பின்னர் அலாவுதீனின் தாயாரிடம் அவள் அங்கு வந்த காரணத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டார்.

அப்போதும் கூட அலாவுதீனின் தாயார் சற்றே தயங்கினாள். பின்னர் ஓரளவு தைரியத்தை வர வழைத்தவளாக சுல்தானிடம், "மன்னா முதலில் என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும், நான் இப்போது சொல்லப்போகும் விஷயம் தங்களுக்கு அளவு கடந்த ஆத்திரத்தைக் கூட உண்டாக்கலாம். அதனால் தான் தங்களிடம் முன்பே மன்னிப்புக் கேட்கிறேன்" என்று பீடிகை போட்டாள்.

அதைக் கேட்ட சுல்தான்," நீ ஒன்றும் கவலைப்படாதே நான் உன்னை மன்னித்து விட்டேன். தவிர அப்படியே நீ சொல்லும் விஷயம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் என்னால் உனக்கு எந்த விதத் தீங்கும் வராது. இது நான் உனக்குத் தரும் வாக்குறுதி. இப்போதாவது நீ இங்கு வந்த நோக்கத்தை எனக்குக் கூறு" என்றார்.

மன்னரே இவ்வாறு கூறிய பின்னர் அலாவுதீனின் தாயாரின் மனதினில் இருந்த பயம் நீங்கியது. அவள் மன்னரிடம் அனைத்து விஷயங்களையும் கூறி முடித்தாள். பின்னர் தான் மன்னருக்குக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை பற்றிக் கூட அவள் எடுத்துரைத்தார். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்ட மன்னர் பலமாக சபையே நடுங்கும் படியாக நகைத்தார். 'மன்னர் ஏன் அவ்வாறு நகைத்தார்?' என்று காரணம் புரியாமல் தவித்தாள் அலாவுதீனின் தாயார். பின்னர் அவள் தன்னுடன் வந்த பணிப் பெண்களை பார்க்க அவளது குறிப்பை அறிந்த அந்தப் பெண்கள். ஓடோடி வந்து தாங்கள் தங்கக் கிண்ணத்தில் கொண்டு வந்த பரிசுகளை எல்லாம் அப்படியே மன்னரின் முன்னாள் வைத்து அதில் மூடி இருந்த கைக் குட்டைகளை ஒருசேர அப்புறப்படுத்தினார்கள்.

அப்படி அப்புறப் படுத்தியது தான் தாமதம், அந்த மாளிகை எங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அதனால் அங்கு கூடி இருந்த அனைவரது கண்களும் கூசியது. அந்தத் தங்கக் கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு ரத்தினக் கல்லும் ஒவ்வொரு விதமான ஒளியை வீசியது. அதனால் மந்திரிகள் மட்டும் அல்ல அரசர் கூட அங்கு திகைத்து நின்றார்.

பின்னர் மன்னர் தனது மந்திரிகளிடம், "இது போன்று அற்புதமாக ஒளி வீசும் ரத்தினக் கற்களை நான் இது நாள் வரையில் பார்த்ததே இல்லை. உண்மையில் இவை இந்த பூமியில் கண்டெடுக்கப்பட்ட ரத்தினக் கற்கள் தானா? இது போன்ற விலை உயர்ந்த ரத்தினக் கற்களின் மதிப்பை இங்கு இருக்கும் யாராவது கூற முடியுமா? முதலில் இவை அனைத்தையும் உங்களில் யாராவது பார்த்து உள்ளீர்களா?" என்று கேட்டார்.

"இல்லை அரசே இது போன்ற உயர் ரக நவ ரத்தினக் கற்களை நாங்கள் இது நாள் வரையில் கண்டதே இல்லை. அது மட்டும் அல்ல, இதன் மதிப்பை யாராலும் வரையறுத்துக் கூறவும் முடியாது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒவ்வொரு கற்களுக்கும் இந்த நாட்டையே தரலாம்" என்றனர் மந்திரிகள்.

பெரும் மகிழ்ச்சி அடைந்த சுல்தான் தனது மனதினில் உள்ளதை வெளிப்படையாகவே அலாவுதீனின் தாயாரிடம் இவ்வாறு கூறத் தொடங்கினார்.

"இப்படிப் பட்ட அபூர்வ ஒளி சிந்தும் அற்புதக் கற்களை எனக்குப் பரிசாக வழங்கியவன் தான் எனது மகள் அல்-புதுருக்கு ஏற்ற மணமகன் ஆவான். மேலும் இது போன்ற அற்புதக் கற்களை எனக்குப் பரிசாகத் தந்திருப்பவன் உண்மையில் சர்வ வல்லமை உள்ளவனாகத் தான் இருப்பான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. என்னைப் பொருத்தவரையில் அவனை விடவும் எனது மகளே உண்மையில் பேறு பெற்றவள் ஆவாள்; இதில் சந்தேகமே வேண்டாம்" என்றார்.

இந்த வகையில் மன்னர் பேசவும் முக்கிய மந்திரி ஒருவரின் முகம் ஒரு மாதிரியாகி விட்டது. அவர் நேராக மன்னரிடம் வந்தார். அப்படி வந்தவர் மன்னரிடம்," மன்னா! என்னைத் தாங்கள் மன்னிக்கவும், முன்பு ஒரு முறை எனது மகனுக்குத் தங்களது மகளை மணம் முடித்துத் தருவதாக வாக்களித்தீர்கள். இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; எனது மகன் இந்த அற்புதமான ரத்தினக் கற்களை விட மேலான ரத்தினக் கற்களைத் தேடிப் பிடித்துத் தங்களது காலடியில் கொண்டு வந்து வைப்பான்" என்றார்.

அதைக் கேட்ட சுல்தான் "மூன்று மாதங்கள் என்ன? முப்பது மாதங்கள் ஆனாலும் இந்தக் கற்களைப் போன்ற நவ ரத்தினக் கற்களை கண்டு பிடிக்க முடியாது" என்று தனது மனதினுள் நினைத்து சற்றே புன்னகைத்தபடி அமைச்சரின் கோரிக்கையை ஏற்றார்.

அதன் பிறகு அலாவுதீனின் தாயாரிடம், "அம்மா, நான் சொன்னது, சொன்னது தான்; இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனது மகளுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளை எல்லாம் முறைப்படி செய்து முடிக்க மூன்று மாதங்கள் ஆகும். ஆகவே மூன்று மாதங்கள் வரையில் தங்களது மகனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று கட்டளை பிறப்பித்தார்.

"எப்படியோ அரசர் தனது மகனுக்குத் தமது மகளைத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டார். இது போதும்!" என்ற சந்தோஷத்தில் அலாவுதீனுடைய அம்மா அரசரிடம் இருந்து விடை பெற்றுச் சென்றாள். அத்துடன் வெற்றிக் களிப்பில் அவள் வீர நடை போட்டாள். அவள் வீட்டை அடைந்த மாத்திரத்தில் அவளுடன் அது வரையில் வந்த பணிப் பெண்கள் அனைவரும் மறைந்து போயினர். ஆனால், அவர்களால் மன்னருக்கு அளிக்கப்பட ரத்தினங்கள் மறையவில்லை. அவை மன்னரின் ஆணைப்படி அரச கஜானாவில் பத்திரமாக சேர்க்கப்பட்டது.

இது இப்படி இருக்க தாயின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அலாவுதீனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது. தவிர அலாவுதீன் கேட்காமலேயே அவனது தாய் வந்ததும் வராததுமாக அனைத்து விஷயங்களையும் அவனிடம் கூறி முடித்தாள். அதே சமயத்தில், அரசருக்கும் முக்கிய மந்திரிக்கும் இடையில் ஏதோ, ஒரு ஒப்பந்தம் உள்ளது என்ற உண்மையையும் அவள் சொல்லத் தவறவில்லை. மேலும், மன்னர் அவளிடம் மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று கூறியதையும் கூட அவள் அலாவுதீனிடம் கூறி முடித்தாள்.

இப்படியாகத் தனது தாயார் சொன்னதைக் கேட்ட அலாவுதீன் பெரிதும் மகிழ்ந்தான். முக்கிய மந்திரியின் மகனுக்குத் தனது மகளை தருவதாக அரசர் வாக்குக் கொடுத்து உள்ளதால் ஒருவேளை தனது மகனுக்கு முக்கிய மந்திரியால் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அச்சம் கொண்டு அலாவுதீனிடம் அதனைப் பற்றிக் கூறினாள் அவனது தாய். எனினும், அலாவுதீன் அதனைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப் பட வில்லை. அவன் நினைப்பு எல்லாம் இளவரசியைப் பற்றியது மட்டும் தான். அத்துடன் இளவரசியை அடைய இன்னும் மூன்று மாதங்கள் காத்துக் கொண்டு இருக்க வேண்டுமே என்று அலாவுதீன் மிகவும் வருந்தினான்.

மூன்று மாதங்களில் இரண்டு மாதங்களைப் பொறுமையுடன் கழித்தான் அலாவுதீன். ஒருவழியாக மூன்றாம் மாதமும் பிறந்து விட்டது.

அப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் கடைத் தெருவுக்குச் சென்ற அலாவுதீனின் தாயாரின் கண்களுக்கு வீதி எங்கும் மக்கள் அலங்காரம் செய்து கொண்டு இருக்கும் காட்சி தென்பட்டது. அவள் சென்று அங்கு கூடி இருந்த மக்களிடம் காரணம் கேட்டாள். அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் ஒரு பெரியவர்," அம்மா! ஊரே அறிந்த விஷயத்தை தாங்கள் அறியவில்லையா? இன்றைய தினம் மன்னர் மகளுக்கும், முக்கிய மந்திரியின் மகனுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது" என்று கூறினார்.

அதனைக் கேட்ட அலாவுதீனின் தாயார் மிகவும் பதற்றம் அடைந்தாள். மிகுந்த சோகத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். வந்ததும் வராததுமாக அலாவுதீனிடம் விஷயத்தைக் கூறி வருந்தினாள். அதைக் கேட்ட அலாவுதீன் மிகவும் பதற்றம் அடைந்தான். பின்னர் அவன் நிதானத்திற்கு வந்தான். பிறகு தனது தாயிடம், "அம்மா நீ இதற்கெல்லாம் கவலை கொள்ளாதே! அவர்கள் இருவரது திருமணமும் நடைபெறட்டும் வாக்களித்துத் தவறிய நமது அரசருக்கு நான் சரியான பாடத்தை கற்றுத் தருகிறேன்" என்றான்.

அலாவுதீன் இவ்வாறு சொன்னாலும் அவனது தாய் மனதளவில் மிகுந்த வேதனை அடைந்தாள். எப்படியோ அரசரின் மனதை பாவி மந்திரி பேசிப் பேசி கரைத்து விட்டாரே என்று எண்ணி எண்ணி அழுதாள். பிறகு இரவு நேரம் வந்தது அலாவுதீனுக்கு உணவு படைத்தாள் அவனது தாய். அலாவுதீன் அவனது தாயே ஆச்சர்யப் படும் வகையில் பொறுமையாக உணவை உண்டான். அவன் முகத்தில் எந்த ஒரு பதற்றமும் இல்லை. உணவை நல்லபடியாக முடித்துக் கொண்டு நேராகத் தனது அறைக்குச் சென்றான். அரைக் கதவைத் திறந்தான் அற்புத விளக்கை எடுத்துத் தேய்த்தான். அதில் இருந்து உடனே வெளிப்பட்டது பூதம்.

அது அவ்வாறு வெளிப்பட்ட மாத்திரத்தில்,"உசூர் நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் செய்து முடிக்கிறேன்" என்று வழக்கம் போலக் கேட்டு நின்றது அந்தப் பூதம். அலாவுதீன் அந்த பூதத்திடம்," நான் சொல்வதை சற்று நிதானமாகக் கேள். இந்த நாட்டின் சுல்தான் அவரது மகளை எனக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். அதற்கு மூன்று மாதங்கள் அவகாசமும் கேட்டார். ஆனால் மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் தனது வாக்கை காப்பாற்ற தவறி விட்டார். இன்றைய தினம் இரவு மந்திரி மகனுக்கும், மன்னர் மகளுக்கும் திருமணம். அவர்கள் திருமணம் முடிந்து பள்ளியறைக்குள் சென்றதும் அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும்" என்று கூறினான்.

"சரி அப்படியே செய்கிறேன்" என்று கூறி விட்டு விடை பெற்றுச் சென்றது பூதம்.

அப்படிச் சென்ற பூதம் அரண்மனையில் திருமணம் முடியும் வரையில் காத்துக் கொண்டு இருந்தது. அரச குமாரிக்கும், மந்திரி குமாரனுக்கும் திருமணம் நல்ல படியாக முடிந்தது. அத்துடன் அரண்மனையில் நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தும் நல்ல முறையில் முடிவடைந்தது.  மண மகளை ஆடம்பரமாக மணமகனின் அறைக்கு அழைத்து வந்தனர். மணமகன் தனது அறையில் கனவுகளுடன் காத்திருந்தான். மணமகளின் தோழிகள் அவளை அந்த அறையில் விட்டு விட்டுச் சென்றனர். அப்போது மணமகன் மணமகளை நெருங்குவதற்கு முன்னமே பூதம் அவர்கள் இருவரையும் மயங்கச் செய்து தூக்கிக் கொண்டு அலாவுதீனின் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டது. அத்துடன் அங்கு அலாவுதீனின் அடுத்த ஆணைக்காகக் காத்துக் கொண்டும் இருந்தது. அலாவுதீனும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான்.

அவனிடம் பூதம், "உசூர்! அடுத்து என்ன செய்ய வேண்டும்? உத்தரவுவிடுங்கள்" என்றது.

"மணமகனாக அலங்கரிக்கப் பட்டு இருக்கும் இவனைக் கொண்டு போய் கழிவறைத் தொட்டியில் போடு, அரசகுமாரியை எனது அறைக்கு அழைத்துச் செல்" என்று பூதத்திற்கு ஆணை பிறப்பித்தான் அலாவுதீன். அந்த பூதமும் அதன் படியே செய்தது.

அரண்மனையில் சொகுசு மன்றத்தில் படுத்து இருக்க வேண்டியவள் சாதாரணக் கட்டிலில் படுத்து இருந்தாள். அலாவுதீன் அவள் அருகில் சென்று, "இளவரசி நீ பயந்து விடாதே, மூன்று மாதங்களுக்கு முன்னர் உன்னை எனக்குத் திருமணம் செய்து தருவதாக எனது அன்னையிடம் வாக்குறுதி கொடுத்தார் உனது தந்தை; ஆனால் இப்போதோ அந்த வாக்கை அவர் காப்பாற்றத் தவறி விட்டார். வேண்டும் என்றால் உனது தந்தையிடமே நீ சென்று கேள். நான் சொன்னது உண்மையா? பொய்யா? என்று. மேலும் அதனால் தான் நான் உன் விஷயத்தில் இவ்விதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக நான் வருந்துகிறேன். எனினும், நாளை காலை வரையில் நீ இந்த அறைக்குள் நிம்மதியாகத் தூங்கலாம். உனக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது. விடிவதற்குள் உன்னை பத்திரமாக உனது மாளிகையில் கொண்டு போய் சேர்கிறேன்" என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.

பின்னர் அடுத்த நாள் காலையில் பொழுது விடிவதற்கு சற்று முன்னாள் விளக்கை உரசி பூதத்தை வர வழைத்தான் அலாவுதீன். பூதமும் அலாவுதீனின் முன்னாள் தோன்றி அவனது ஆணையை வேண்டி நின்றது. அப்போது பூதத்திடம் அலாவுதீன், "இந்த இளவரசியையும் அவளை மணந்தவனையும் அரண்மனைக்குக் கொண்டு போய் சேர்த்து விடு. அதாவது எந்த அறையில் இவர்கள் இருவரையும் எடுத்து வந்தாயோ அங்கேயே இவர்களை கொண்டு போய் சேர்த்து விடு" என்று கூறவும். பூதமும் அப்படியே செய்வதாகக் கூறி அரச குமாரியையும், மந்திரி குமாரனையும் எந்த இடத்தில் இருந்து தூக்கி வந்ததோ அதே இடத்திலேயே கொண்டு போய் சேர்த்தது. அரச குமாரிக்கு நடந்தது அனைத்துமே ஆச்சர்யமாக இருந்தது. மந்திரி குமாரன் இரவு முழுவதும் குளிரில் நடுங்கிய படி பேசும் திறன் அற்றவனாக முடங்கிக் கிடந்தான்.

மறுபுறம் அரசனுக்கும், அரசிக்கும் இரவு நடந்தது எதுவுமே தெரியாது. அவர்கள் இருவரும் தங்கள் மகள் சந்தோஷமாக இரவைக் கழித்து இருப்பாள் என்று நினைத்தபடி மகளைக் காண வந்தனர். ஆனால் இளவரசியோ தனது தாயைக் கட்டிப் பிடித்து கதறி அழுதாள். ஆனால், அந்த நிலையில் கூட அவள் ஏனோ அலாவுதீனைப் பற்றி எதையும் தனது தாய், தந்தையிடம் கூற வில்லை. மாறாக தங்கள் மஞ்சத்தை யாரோ எங்கோ கவர்ந்து சென்றதாகக் கூறினாள். அத்துடன் இரவு முழுவதும் எங்கோ தனியான அறையில் தூங்கியதாகவும். தன்னைக் காக்க வேண்டிய தனது கணவனான மந்திரி குமாரன் தன்னைக் காக்கத் தவறியதாகவும் கூறினாள். அதைக் கேட்ட அரசர் உடனே கோபம் கொண்டு மந்திரி குமாரனை அழைத்து விசாரித்தார். அவனோ தனக்கு அதைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. ஒரு வேளை இளவரசி கனவு கண்டு இருக்கலாம் என்றபடி கூறி அனைத்தையும் மறைத்து விட்டான்.

அதைக் கேட்ட சுல்தானும் அவரது மனைவியும் உண்மையில் தங்களது மகள் ஏதோ கனவு கண்டு தான் உளறியிறுக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு அமைதி அடைந்தனர். இதனால் அன்றைய தினமும் திருமணக் கேளிக்கைகள் நடந்தேறியது. ஏனோ மந்திரி குமாரன் குற்ற உணர்வில் அரச குமாரியின் முகத்தைக் கூட பார்க்க நாணியவனாய்த் தனது மாளிகைக்குச் சென்று விட்டான்.

அன்றைய தினமும் இரவு நேரம் நெருங்க நெருங்க இளவரசியின் மனதினில் பயம் அதிகரித்து விட்டது. நேற்றைய இரவு போலவே ஆகிவிடுமோ என்று அவள் நினைத்து, நினைத்து பயந்தாள். மந்திரி குமாரனும் இளவரசியின் நிலையில் தான் இருந்தான். எனினும் துணிச்சலை வர வழைத்துக் கொண்டு தனது படுக்கை அறைக்குள் நுழைந்தான். அங்கு அப்போது அவனுக்காக இளவரசியும் காத்துக் கொண்டு இருந்தாள்.

அந்த நேரத்தில் தனது வீட்டில் இருந்த அலாவுதீன் அதிசய விளக்கை எடுத்துத் தேய்த்துப் பூதத்தை வரவழைத்து முந்திய இரவு போலவே இருவரையும் தூக்கி வரக் கூறினான். அதன் படியே பூதமும் செய்தது. அரச குமாரி முந்திய நாள் இருந்த அதே அறையில் தங்க வைக்கப்பட்டாள். மந்திரி குமாரனை ஒரு தண்ணீர்த் தொட்டியின் பக்கத்தில் கிடத்தியது பூதம். அன்றைய தினம் இரவு அலாவுதீன் இளவரசியைக் காணச் செல்லவில்லை. அடுத்த நாள் காலை விடிவதற்குள் அலாவுதீனின் ஆணைப்படி இளவரசியையும், மந்திரி குமாரனையும் பழையபடி அரண்மனையின் அதே அறையில் கொண்டு போய் கிடத்தியது அந்தப் பூதம்.

இளவரசி அரண்மனை மஞ்சத்தில் கண்ணீர் வடித்த படி அமர்ந்து இருந்தாள். பயத்தின் உச்சகட்டத்தில் இருந்த மந்திரி குமாரன் தள்ளாடியபடி நடந்து சென்று தனது மாளிகையை அடைந்தான். அன்றைய தினமும் விடி காலையில் இளவரசியின் தாயார் அவளது மகளைக் காண அறைக்குச் சென்றாள். மணமகன் அங்கு காணப்படாததை நினைத்து ஆச்சர்யம் அடைந்தாள். தனது மகளிடம் நடந்ததைக் கேட்டு விசாரித்தாள். தாயிடம் அனைத்தையும் கூறி அழுதாள் இளவரசி. அந்த இரண்டு தினங்களில் இளவரசி முழுவதுமாக மெலிந்து போய் விட்டாள். அதனைக் கண்ட அரசிக்கே மகளின் நிலை பரிதாபமாக இருந்தது.

தனது அன்பு மகளின் துயரத்தைக் கண்ட அரசி ஓடிச் சென்று விஷயத்தை அரசரிடம் தெரிவித்தாள். அதைக் கேட்ட அரசர் திகைத்தார். அவருக்கு எதுவுமே புரியவில்லை, உடனே தனது சம்மந்தியை (அதாவது முக்கிய மந்திரியை) அழைத்து வருமாறு சேவகர்களிடம் கூறினார்.

ஆனால் இதற்கு முன்னமே மந்திரி குமாரன் தனது தந்தையிடம், "அப்பா, நான் இனி இளவரசியுடன் வாழப் போவதில்லை, இந்தத் திருமணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளித்து விடுமாறு சுல்தானிடம் கூறுங்கள். நான் இனி அங்கு செல்லவே போவதில்லை; இரண்டு தினங்களில் நான் பட்ட பாடு போதும்" என்று தனது தந்தையிடம் கூறிக் கண்ணீர் விட்டு அழுதான்.

அப்போது மன்னரிடம் இருந்து வந்த சேவகர்கள் மந்திரியை மன்னர் பார்ப்பதாக அழைத்தனர். அதன் படியே மந்திரி தனது குமாரனுடன் அரசரைக் காணப் புறப்பட்டுச் சென்றார். அப்போது மன்னர் தனது மகளின் நிலையைப் பற்றி மந்திரியிடம் கேட்பதற்கு முன்னமே மந்திரியார் முந்திக் கொண்டார். அவர் மன்னரிடம்," இந்தத் திருமணத்தில் இருந்து தயவு செய்து எனது மகனுக்கு விலக்களிக்க வேண்டும். அப்படித் தாங்கள் விலக்கு அளிக்காவிட்டால் எனது மகன் இறந்து போவதாகக் கூறுகிறான்" என்றார்.

அதைக் கேட்ட அரசருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவர் மிகவும் திகைத்து நின்றார். மந்திரிகுமாரனிடம் பேசிப் பார்த்தார். ஆனால் பிரயோஜனம் இல்லை "இளவரசியுடன் வாழ்வது தற்கொலைக்கு சமானம் அதற்கு நான் சாகவே சாகலாம்" என்றான் மந்திரி குமாரன். "தனது மகளின் வாழ்க்கை இப்படியா வீணாக வேண்டும்?" என்று வருந்தினார் சுல்தான். எனினும் தனது மகளுடன் வாழப் பிடிக்காத மண மகனை எப்படி வாழ வைப்பது. அதுவும் அவன் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறும் போது! அதனால் அரசர் வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். மகளிடமும் இதைப் பற்றிப் பேசிப் பார்த்தார். சுல்தானின் மகளும் திருமண முறிவுக்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தாள். அதன் விளைவாக திருமணக் கொண்டாட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் நிறுத்தப்பட்டது. இளவரசிக்கும், மந்திரிகுமாரனுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் மண முறிவு அளிக்கப்பட்டது. இது அலாவுதீனின் காதுகளை வந்து அடைந்த மாத்திரத்தில் அவன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான்.

அன்றைய தினம் இரவு இளவரசி நன்றாக உறங்கினாள். காலையில் உற்சாகத்துடன் விழித்தாள். எந்த ஒரு பூதமும் அவளை துன்புறுத்த வில்லை. இளவரசியின் முகத்தில் இருந்த தெளிவைக் கண்ட அரசியும், அரசரும் நிம்மதி அடைந்தனர். தங்கள் மகளின் திருமணம் முறிந்து விட்டதே என்று வருந்திய அரசரும் அவரது மனைவியும் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வந்தனர். அதனால் சகஜமான சூழ்நிலை திரும்பியது. எல்லோரும் அவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். மந்திரியின் மகனும் கூட, 'நல்லவேளையாக இளவரசியிடம் இருந்து தப்பினோம். அவளை மணந்து இரண்டு நாட்களாக நிம்மதி இல்லாமல் இருந்தோம். இப்போது தப்பித்து விட்டோம்' என்று மனதில் நினைத்து மகிழ்ந்தான். ஆனால் முக்கிய மந்திரிக்கு இந்தத் திருமண முறிவு மிகப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

அன்றைய தினம் மன்னர் அலாவுதீனின் தாயாருக்கு அளித்த அந்த மூன்று மாதத் தவணை முடிவுக்கு வந்தது. அலாவுதீன் தனது தாயை தேற்றி மன்னரின் அரண்மனைக்கு அவளை மீண்டும் பெண் கேட்டு அனுப்பி வைத்தான். அன்றைய தினம் எந்தப் பரிசுப் பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லாமல் சாதாரண உடையுடன் அலாவுதீனின் தாயார் அரண்மனையை அடைந்தாள். மன்னரை வெகு நேரம் காத்திருந்து பிறகு சந்தித்தாள்.

அலாவுதீனின் தாயாரைப் பார்த்த சுல்தானுக்கு அவர் முன்பு அவர்களுக்கு அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. மறுபுறம் சுல்தானைப் பார்த்த அலாவுதீனின் தாய் அவரை மிகவும் பணிந்து வணங்கினாள். அவளது வணக்கத்தை ஏற்றுக் கொண்டார் அரசர். பின்னர் மன்னரின் அனுமதியுடன் தான் வந்த நோக்கத்தை அரசரிடம் தெரியப் படுத்தினாள். அத்துடன் அரசர் மறந்து போனதைப் போல இருந்த வாக்கையும் கூட அவருக்கு நினைவு படுத்தினாள். ஆனால், உண்மையில் மன்னர் எதையுமே மறக்கவில்லை. சென்ற முறை உயர்க் குடிப் பெண் போல வந்திருந்த அலாவுதீனின் தாயார் இந்த முறை சாதாரண உடுப்பை அணிந்த படி வந்திருந்தாள். அதனை கண்ட அரசர் "போயும், போயும் இவளுடனா நான் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சம்மந்தம் நடக்கக் கூடாதே! ஏனெனில் இவளைப் பார்க்கவே ஏழ்மையாக இருப்பதைப் போலத் தெரிகிறது. இவளோ மூன்று மாதத்திற்கு முன்னர் நான் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வந்து நிற்கிறாள். இவளை ஏதாவது கூறி நாம் தவிர்க்க வேண்டுமே?" என்று சிந்தித்த அரசர் அலாவுதீனின் தாயை சற்று நேரம் வெளியில் நிற்கச் சொல்லிவிட்டுத்  தனது முக்கிய மந்திரியை அழைத்துப் பேசினார். அவரிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். மந்திரியோ தனது மகனுக்குக் கிடைக்காத பேறு இந்த மூதாட்டியின் மகனுக்கும் கிடைக்க விடக் கூடாது என்ற எண்ணம் கொண்டு இருந்தார். அவர் மன்னரிடம்," அரசே! தாங்கள் நான் சொல்வதைப் போலச் சொல்லுங்கள். அதன் படி நாற்பது அழகிய பொற் கிண்ணங்களில் நவரத்தினங்களை ஏந்தி நாற்பது அழகிகள் வர வேண்டும். அவர்களைத் தொடர்ந்து நாற்பது கருப்பு நிற அடிமைப் பெண்கள் வர வேண்டும். இவ்விதம் வருவதற்கு இவள் மகன் தயார் என்றால் நமது இளவரசியைத் திருமணம் செய்து கொடுக்கலாம். உண்மையில் இது இயலாத காரியம் என்பதால் தான் நான் இப்படிக் கூறுகிறேன். எனவே நிச்சயம் அந்த ஏழைப் பெண்ணால் இது முடியாது. அதனால் தாங்கள் தைரியமாகக் கூறுங்கள்" என்றார்.

அரசருக்கும் தனது முக்கிய மந்திரியின் ஆலோசனை சரி என்று தான் பட்டது. இதைப் போல செய்ய பேரரசன் ஒருவனைத் தவிர யாராலும் முடியாது என்று சிந்தித்தபடி அலாவுதீனின் தாயாரை அழைத்து அவளிடம் அந்த நிபந்தனையைக் கூறினார்.

அதைக் கேட்ட அலாவுதீனின் தாயார், "அரசே! தாங்கள் சொன்னபடியே நான் செய்கிறேன். ஆனால், அப்படி நான் செய்து விட்டால், தாங்கள் கண்டிப்பாகத் தங்கள் மகளைத் தருவீர்கள் தானே? இதில் எந்த மாற்றமும் இல்லையே? சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள் தானே!" என்று கேட்டாள்.

அலாவுதீனின் தாயார் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசர், "நான் என்றுமே சொன்ன சொல்லைத் தவறியது இல்லை. நான் சொன்னபடி நாற்பது அழகிய பொற் கிண்ணங்களில் நவரத்தினங்களை ஏந்தி நாற்பது அழகிகள் வர வேண்டும். அவர்களைத் தொடர்ந்து நாற்பது கருப்பு நிற அடிமைப் பெண்கள் வர வேண்டும். இவ்விதம் உனது மகனால் செய்ய முடிந்தால் நான் உடனே எனது மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்றார்.

விடை பெற்ற அலாவுதீனின் தாயார் சோர்வு கொண்ட முகத்துடன் தனது வீட்டை அடைந்தாள். அதனால் அலாவுதீன் சற்றே கலவரம் அடைந்தவனாகத் தனது தாயாரிடம் நடந்ததை விசாரித்தான். அவனது தாயாரும் அரசவையில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி முடித்தாள். அவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அலாவுதீன் தனது தாயாருக்கு ஆறுதல் அளித்தான். பிறகு தாயும், மகனும் உணவு உண்டனர். உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? அலாவுதீனின் தாயார் மட்டும் இதில் விதி விலக்கா என்ன? சாப்பிட்டு முடித்த அவனது தாயார் சிறிது நேரம் படுக்கை அறையில் கண் அசந்தாள்.

இந்த வேளையை பயன்படுத்திக் கொண்ட அலாவுதீன் நேராகச் சென்று தான் பத்திரமாக மறைத்து வைத்து இருந்த விளக்கை எடுத்தான். அதனை தேய்த்து பூதத்தை வரவழைத்தான். அந்தப் பூதமும் வந்து அலாவுதீனின் முன்னாள் நின்று," உசூர்! தங்கள் சித்தம் எதுவானாலும் நான் அதனை நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன். சொல்லுங்கள் தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டது.

அதைக் கேட்ட அலாவுதீன் பூதத்திடன் இவ்வாறு தனது கோரிக்கையை சொல்லத் தொடங்கினான்.

"முன்பு நீ தந்த ரத்தினங்களை விட உயர்ந்த ரத்தினங்கள் நிரப்பப்பட்ட தூய பொன்னாலான நாற்பது பெரிய கிண்ணங்கள் வேண்டும்; அவைகளைத் தலையில் சுமந்து செல்வதற்கு நாற்பது வெள்ளை நிற அடிமைப் பெண்கள் நல்ல அழகிகளாக இருக்க வேண்டும். அந்த அழகிகளுக்குப் பணிவிடை செய்ய நாற்பது கருப்பு நிற அடிமைப் பெண்கள் வர வேண்டும்; இவற்றை எல்லாம் நீ உடனே கொண்டு வர வேண்டும்" என்று அலாவுதீன் கூறவும் பூதம் உடனடியாக அலாவுதீன் கேட்ட அனைத்தையும் கொடுத்தது. உடனே பூதத்திற்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான் அலாவுதீன்.

அலாவுதீனின் தாயார் கண் விழித்த மாத்திரத்தில் அலாவுதீன் அழகிய ஆடைகளை தனது தாயாருக்கு வழங்கினான். அத்துடன் மன்னர் கேட்டதை தான் தயார் செய்து விட்டதாகக் கூறி உடனே அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் அவற்றை அளித்து விட்டு," அலாவுதீனால், இதை மட்டும் அல்ல, இதற்கு மேலாகவும் எதையும் செய்ய முடியும்" என்று கூறி விட்டு வருமாறு வேண்டினான்.

அலாவுதீனின் தாயாரும் விலை ஏறப்பட்ட நவ ரத்தினங்களை எடுத்து வந்த படி அடிமைப் பெண்கள் தொடர அரண்மனையை அடைந்தாள். ஏற்கனவே இரு முறை அரண்மனைக்கு வந்து இருந்ததால் பரிட்சயம் அடைந்த காவலர்கள் அலாவுதீனின் தாயாரை உள்ளே அனுமதித்தனர். நேராகச் சென்று மீண்டும் அரசருக்கு நவ ரத்தினங்களை பரிசு அளித்தாள். அலாவுதீனின் தாயாருடன் வந்த அழகிகளைப் பார்த்த அரசர் பிரமித்துப் போனார். அத்துடன் மன்னர் கேட்ட அனைத்தையும் வெறும் மூன்று மணிநேரத்திற்குள் அலாவுதீனின் தாயார் ஏற்பாடு செய்ததை நினைத்து சுல்தான் வியந்து போனார். அவருக்கு நடப்பதெல்லாம் கனவா? இல்லை நினைவா? என்றே தெரியவில்லை. ஆச்சர்யத்தின் எல்லையைக் கடந்து கொண்டு இருந்தார். பொறமைக் கார மந்திரியோ மனதினில் புகைந்து கொண்டார்.

சற்று நேரம் ஆழ்ந்து யோசித்த சுல்தான் மனதினில் அலாவுதீன் போன்றவன் தனக்கு மருமகனாக வந்தால் அதனால் தனக்குத் தான் பெருமை என்று யோசித்து முடிவு எடுத்தார். அவனே தனது மகளை மணம் முடிக்கத் தகுதி உடையவன் என்று தன்னை அறியாமல் வாய் விட்டே அவையில் கூறினார். இதனைத் தனது காதால் கேட்ட முக்கிய மந்திரி மீண்டும் இந்தத் திருமணத்தை எவ்வாறு நடக்க விடாமல் தடுப்பது என்று மனதிற்குள் யோசித்தார். ஆனால் மன்னரோ அலாவுதீனுக்கு தனது மகளை மணம் முடித்து வைக்கத் தான் முழு மனதுடன் சம்மதம் தெரிவிப்பதாக அலாவுதீனின் தாயாரிடம் கூறினார். அத்துடன் அலாவுதீனை உடனே அரண்மனைக்கு அழைத்து வருமாறு வேண்டினார். மேலும் தனது சேவகர்களை அழைத்து அலாவுதீன்-பதர் அல் புதுரின் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கூறினார்.