அலாவுதீன் அபூர்வ விளக்கை கைப்பற்றிய கதை

bookmark

அலாவுதீனும், அவனது சிற்றப்பா ரூபத்தில் இருந்த அந்தத் தீய மந்திரவாதியும் புறப்பட்டு, காடு, மலை மற்றும் கரடு முரடான பாதைகளை எல்லாம் கடந்து வெகு தூரம் சென்றனர். 'அல்- கலாஸ்' என்னும் பகுதியின் எல்லையை அடைந்தனர். அது தான் முன்பு சம்சுதீன் என்கிற அந்தப் பூதம் சொன்ன இடம். அதாவது சபிக்கப்பட்ட நகரம். அதன் அடியில் தான் ஒரு குகை புதைந்து உள்ளது. அந்தக் குகைக்குள் தான் அந்த மந்திரவாதி தேடிவந்த அந்த விளக்கு இருக்கிறது.

அலாவுதீனும், அந்தப் பொல்லாத மந்திரவாதியும் அந்த இடத்தை சென்று அடைந்த சமயத்தில் இரவு நேரம் நெருங்கி இருந்தது. அப்போது அந்த மந்திரவாதி அலாவுதீனிடம்," மகனே இனிமேல் நாம் நடக்க வேண்டாம். இங்கேயே தங்கலாம். அத்துடன் நீ இங்கு நடப்பதைப் பார் கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கும்" என்று கூறியபடி அலாவுதீனை ஒரு மரத்தின் அடியில் அமரச் செய்தான்.

பிறகு மீண்டும் அலாவுதீனிடம்," மகனே அலாவுதீன், கொஞ்சம் காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கு; அவற்றில் நாம் தீ மூட்டுவோம், அதன் பின்னர் நீ இதுவரையில் காணாத அதிசயங்களை எல்லாம் நான் உனக்கு செய்து காட்டுகிறேன்" என்றான்.

அலாவுதீனும் சிறிய தந்தை ஏதோ சொல்கிறார் என்ற மரியாதைக்காக சில சுள்ளிகளை பொறுக்கி எடுத்து வந்து அந்த மந்திரவாதியிடம் அவன் யார் என்று தெரியாமல் கொடுத்தான்.

அலாவுதீன் கொடுத்த சுள்ளிகளை கையில் வாங்கிக் கொண்ட மந்திரவாதி பூமியில் வைத்து நெருப்பைப் பற்ற வைத்தான். அத்துடன் ஒரு சிமிழை எடுத்தான். சில மந்திரங்களை உச்சரித்தபடி அதில் இருந்து அவன் எடுத்துப் போட்ட நறுமணப் பொடி நெருப்பில் விழுந்ததும் புகைய ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்ட நறுமணப் புகை எங்கும் பரவியது.

சில மணி நேரத்தில் இடியைக் காட்டிலும் மிகப் பெரிய ஓசை ஒன்று எங்கும் எழுந்தது. மின்னலைக் காட்டிலும் ஒரு பெரிய வெளிச்சம் எங்கும் பரவியது. அதைக் கண்டு பயந்து போன அலாவுதீன் ஒரு கணம் ஓட முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய அந்த மந்திரவாதி ஓங்கி அலாவுதீனின் கன்னத்தில் ஒரு அடி அடித்தான். அந்த ஒரே அடியில் அலாவுதீன் நிலை குலைந்து போனான். அதனால் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

மறுபுறம் அந்த மந்திரவாதி தான் வந்த காரியத்தில் கண்ணாக இருந்தான். அத்துடன் மீண்டும் ஒரு முறை அவன் தனது கண்களை மூடிய படி மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினான். அந்த மந்திரத்தின் பலனாய் வானத்தில் மேகங்களே இல்லாமல் இடி ஓசை எழுந்தது. அவ்வாறு ஓசை எழுந்த சில நிமிடங்களில் பூமி இரண்டாகப் பிளந்தது. அப்போது அதனைக் கண்ட அலாவுதீன் மேலும் அலறினான்.

அப்துல்லாவின் ரூபத்தில் இருந்த மந்திரவாதி அலாவுதீனிடம்," மகனே அலாவுதீன் கவலை கொள்ளாதே. நமது கனவுகள் எல்லாம் பலிதம் ஆகப் போகிறது. இன்றோடு நல்ல காலம் பிறக்கப் போகிறது. அதோ பிளக்கப்பட்ட பூமிகளில் படிகள் இறங்குவதைப் பார். அதன் வழியாக இறங்கி நடந்தால் நீ ஒரு குகையைக் காண்பாய். அந்தக் குகையிலும் நீ இறங்கி அதன் கடைசி வரையில் சென்றால் ஒரு அழகான விளக்கைக் காண்பாய். அதனை நீ பத்திரமாக என்னிடம் எடுத்து வந்து கொடுக்க வேண்டும். அப்படி நீ கொடுத்தால் வாழ்வில் சகல விதமான நன்மைகளையும் பெறுவாய்" என்றான்.

அலாவுதீன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, "தனது சிற்றப்பா தான் தன்னுடன் இருக்கிறாரே தனக்கு வேறு என்ன கவலை?" என்று சற்றே ஆறுதல் அடைந்தான். இருந்தும் கூட அவனுக்குள் ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. அதனை அறிந்த அந்த மந்திரவாதி அலாவுதீனின் பயத்தைப் போக்குவதற்காக தனது கையில் இருந்த மந்திர மோதிரத்தை அவனிடம் கொடுத்து அவனது விரல்களில் அணியச் சொன்னான். அந்த மந்திர மோதிரம் முன்பு சம்சுதீன் என்ற பூதத்தால் மந்திரவாதிக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலாவுதீனும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்து கொண்டான். அப்போது மாறு வேடத்தில் இருந்த அந்த மந்திரவாதி அலாவுதீனிடம், "நீ பயப்படாதே இந்த மோதிரம் சாதாரண மோதிரம் அல்ல. ஆபத்துக் காலத்தில் உன்னைக் காக்கக் கூடிய மோதிரம் இது. இதன் மகிமையை நீ போகப் போக புரிந்து கொள்வாய். இதனை நம்பி நீ அந்தக் குகைக்குள் சென்று வா" என்றான்.

ஆனால், அப்போதும் கூட அலாவுதீனின் பயம் தெளியவில்லை. பிறகு அந்த மந்திரவாதி ஒரு அற்புதமான திட்டத்தை தீட்டினான். அதன் அடிப்படையில் அலாவதீனிடம், "அலாவுதீன்! நான் படி இறங்கி அந்தக் குகை வரையில் உன்னை அழைத்துச் செல்கிறேன். நீ தைரியமாக வா. இவ்வளவு தூரம் வந்ததற்கு நீ அந்தக் குகைக்குள் எட்டிப் பார் அது போதும். நாம் திரும்பிவிடலாம்" என்றான்.

அதைக் கேட்ட அலாவுதீன் மிகவும் மகிழ்ந்தபடி, "சிற்றப்பா! மிக்க நன்றி. எனில் தாங்கள் என்னை அந்தக் குகைக்குள் இறங்குமாறு கட்டாயப் படுத்த மாட்டீர்கள் அல்லவா? நான் அந்தக் குகையை எட்டிப் பார்த்தால் போதும் தானே!" என்றான்.

"ஆம்! நீ எட்டிப் பார்த்தால் போதும்" என்றான் அந்த மந்திரவாதி.

உடனே மந்திரவாதியுடன் படியில் இறங்கி அந்தக் குகையின் வாயிலை அடைந்தான் அலாவுதீன். மந்திரவாதி ஒரு மந்திரத்தை சொல்ல அந்தக் குகையின் வாயில் தானாகத் திறந்தது. அதற்குள் அலாவுதீனை நன்றாக விளக்கு தெரியும் வரையில் எட்டிப் பார்க்கச் சொன்னான் அந்த மந்திரவாதி.

"சிற்றப்பா தானே எட்டிப் பார்க்கச் சொல்கிறார். அதில் என்ன வந்து விட்டது?" என்று சிந்தித்தபடி அலாவுதீனும் அந்தக் குகைக்குள் எட்டிப் பார்த்தான். அவன் நன்றாக கழுத்தை உள்ளே விட்டு அங்கு ஏதேனும் விளக்கு காணப்படுகிறதா? என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

இந்த சமயத்திற்காகத் தான் அந்த மந்திரவாதியும் காத்துக் கொண்டு இருந்தான். அவன் சற்றும் தாமதிக்காமல் குகையின் வாயிலில் தலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்த அலாவுதீனை அந்தக் குகைக்குள் ஒரே தள்ளு தள்ளிவிட்டான். அவ்வளவு தான் அலாவுதீன் அந்தக் குகைக்குள் விழுந்து விட்டான்.

ஒரு முறை அந்தக் குகைக்குள் விழுந்து விட்டால் இன்னொருவர் உதவி இல்லாமல் அந்தக் குகையை விட்டு வெளியே வர இயலாது. அவ்வளவு பள்ளமான குகை அது. இந்த நிலையில் அந்தக் குகைக்குள் இருந்தபடி, "சிற்றப்பா என்னை ஏன் குகைக்குள் தள்ளி விட்டீர்கள்? தயவு கூர்ந்து நான் வெளியில் வர உதவுங்கள்" என்று கத்தினான் அலாவுதீன்.

அலாவுதீனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மந்திரவாதி, "அலாவுதீன் நீ சென்று அந்த விளக்கை உடனடியாக எடுத்து வா. நீ போய் எடுத்து வந்தால் தான் நான் உன்னை இந்தக் குகைக்குள் இருந்து தூக்கி விடுவேன். ஒருவேளை நீ விளக்குடன் வராவிட்டால் உள்ளே கிடந்து மடிய வேண்டியது தான்" என்று கூறினான்.

அலாவுதீனுக்கு இப்போது வேறு வழி இல்லை. வாழ்வா, சாவா என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டான். அதனால் அவன் அந்த விளக்கை எடுத்து வர தீர்மானித்தவனாய் அந்தக் குகைக்குள் தனது பயணத்தை துவக்கினான். அந்தக் குகை முழுவதும் பாம்பும், தேளுமாக விஷ ஜந்துக்கள் நிறைந்து காணப்பட்டது. பயம் அவனது மனதைக் கவ்வ மெல்ல ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான் அலாவுதீன்.

குகைக்குள் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் பேய்களும், பிசாசுகளும் அலாவுதீனை பயமுறுத்தின. இருந்தாலும் அவனது கைகளில் இருந்த சம்சுதீனின் மோதிரத்திற்கு பயந்து அவனை அவைகள் பயமுறுத்துவதுடன் நிறுத்திக் கொண்டன. இப்படியாக குகைக்குள் இன்னும் சில தூரம் கடந்த அலாவுதீனை கொடிய விலங்குகள் துரத்தின. அலாவுதீன் அந்த விலங்குகளிடம் இருந்தும் ஒரு வகையாகத் தப்பித்தான்.

பிறகு மேற்கொண்டு சிறிது தூரம் சென்றான் அலாவுதீன். அங்கு ஒரு அழகான விளக்கு இருந்தது. அது தான் தனது சிற்றப்பா சொன்ன விளக்கு என்பதை யூகித்துக் கொண்டவனாய் அதனை பத்திரமாக எடுத்துக் கொண்டு மெல்ல குகையின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான் அலாவுதீன். இப்போது அவனை முன்பு பயமுறுத்திய வன விலங்குகளோ, பேய்களோ, பிசாசுகளோ அலாவுதீனின் வழியில் குறுக்கிடவில்லை. எந்தத் தடையுமே இல்லாமல் அலாவுதீன் அந்தக் குகையின் வாயிலை அடைந்தான்.

குகையின் வாயிலில் அந்த விளக்கிற்காகவே காத்துக் கொண்டு இருந்தான் அப்துல்லா வடிவில் இருந்த மந்திரவாதியான இல்துமிஷ். அவன் அலாவுதீனைக் கண்ட மாத்திரத்தில் காரியம் நல்ல படியாக முடிந்து விட்டதை யூகித்துக் கொண்டான். அத்துடன் அலாவுதீனிடம் அவன் கொண்டு வந்த அந்த அற்புத விளக்கைத் தன்னிடம் தருமாறு கேட்டான். அப்போது அலாவுதீன் தன்னைக் குகையில் இருந்து முதலில் தூக்கி விடுமாறு கோரிக்கை விடுத்தான். ஆனால், மாறு வேடத்தில் இருந்த அந்த மந்திரவாதியோ அலாவுதீனின் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் விளக்கை வாங்குவதிலேயே குறியாக இருந்தான். இதனால் அலாவுதீன் சற்றே சூதாரித்துக் கொண்டவனாய், தன்னை குகைக்குள் இருந்து தூக்கி விட்டால் தான் விளக்கைத் தருவதாகக் கூறினான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த மந்திரவாதி அலாவுதீனை பல விதங்களில் எச்சரிக்கை செய்தான். ஆனால், அலாவுதீன் அந்த மந்திரவாதி எவ்வளவு எச்சரிக்கை செய்தும் கூட அந்த விளக்கைத் தரவே இல்லை.

ஆத்திரத்தின் உச்சிக்கே போன மந்திரவாதி தனது உண்மையான ரூபத்தை எடுத்துக் கொண்டு அலாவுதீனை மிரட்டினான். வந்தது தனது சிறிய தந்தை இல்லை என்பதை அறிந்த அலாவுதீன் மேலும் சூதாரித்துக் கொண்டான். தான் கையில் வைத்திருந்த அந்த விளக்கை பத்திரமாக பற்றிக் கொண்டான். இதைக் கண்ட மந்திரவாதி அலாவுதீனை அந்த குகைக்குள் வைத்தே மூடிவிடப் போவதாக பயமுறுத்தினான். அப்போதும் அசராமல் நின்று கொண்டு இருந்தான் அலாவுதீன். அவனது உள் மனம், "இந்த விளக்கில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது. இந்த மந்திரவாதியிடம் இதனைத் தந்து விடாதே!" என்று மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டே இருந்தது. அதனால் கடைசி வரையில் அலாவுதீன் அந்த விளக்கை அந்த மந்திரவாதியிடம் அவன் எவ்வளவு மிரட்டியும் கூடத் தரவே வில்லை.

ஒரு கட்டத்தில் வெறுப்பையும், கோபத்தையும் ஒருங்கே பெற்ற அந்த மந்திரவாதி குகையை மூடிவிட்டுச் சென்றான்.