அலாவுதீன் சம்சுதீனை சந்தித்தல்

bookmark

~para
மந்திரவாதி குகையை மூடி விட்டுச் செல்ல, அதைக் கண்ட அலாவுதீன் அலறித் துடித்தான். "அய்யோ அம்மா!" என்று கத்தினான்.

அலாவுதீனின் நிலை இப்படி இருக்க எங்கோ உறங்கிக் கொண்டு இருந்த அவனது தாய், தனது மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்ததாக உணர்ந்து கொண்டவளாய் துடி, துடித்து எழுந்தாள். அப்போது அவளுக்குத் துணையாக படுத்துக் கொண்டு இருந்த ஆயிஷா என்ற பக்கத்து வீட்டுப் பெண், அலாவுதீனின் அன்னையிடம் அவள் அலறி எழுந்த காரணத்தைக் கேட்டவளாய் அண்ணன் அலாவுதீனுக்கு ஏதும் ஆகாது என்று ஆறுதல் கூறினாள்.

ஆனால், அலாவுதீனின் தாய் பயந்தது போலவே அலாவுதீன் இப்போது அந்த ஆபத்தான குகைக்குள் இருந்தபடி அன்னையை நினைத்து அழுது கொண்டே இருந்தான். 'தன்னை விட்டால் தனது விதவைத் தாய்க்கு யார் துணை?' என்று தான் அலாவுதீன் அந்த நிலையிலும் தனது தாயை நினைத்துக் கலங்கித் தவித்தான். பிறகு அந்தக் குகைக்குள் அழுது, அழுதே ஓர் இரவைக் கழித்தான் அலாவுதீன்.

மிகவும் சோர்வு அடைந்தவனாய் அவன் காணப்பட்டான். அந்தக் குகைக்குள் இங்கும், அங்குமாக நடந்தான். செய்வதறியாது தவித்தான். அந்தக் குகைக்குள் இருந்த புழுதியால் அவனது உடல் எல்லாம் ஆங்காங்கே அரிக்கத் தொடங்கியது. அவனை அறியாமால் சொரியத் தொடங்கினான். அப்போது சம்சுதீனின் மோதிரம் அவனது தோளில் பட்டு உராயத் தொடங்கியது. சில கணங்களில் அதில் இருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது. ஆம்! சம்சுதீன் அதில் இருந்து வெளி வந்தான். அலாவுதீனின் முன்னாள் ஒரு பெரிய தூண் போல நின்றான்.

அதைக் கண்ட அலாவுதீன் மேலும் அலறித் துடித்தான். தனக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டது என்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தைக் கூறினான். அதைக் கண்ட அந்த பூதம் வெகுவாக சிரித்தபடி தனது உருவத்தை சுருக்கிக் கொண்டு, "உசூர்! நான் சம்சுதீன் என்ற பூதம். நான் தங்களது அடிமை. தங்களுக்கு சேவை செய்யத் தான் நான் இங்கு வந்து உள்ளேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்? நான் நிறைவேற்றித் தருகிறேன்" என்று கேட்டது.

அதைக் கண்ட அலாவுதீன் பிரமித்து நின்றான். அந்த பூதம் உண்மையில் உசூர் என்று தன்னைத் தான் அழைத்ததா? என்று கூட சிந்தித்தான். ஒரு கட்டத்தில் அந்த பூதத்திடமே கேட்டும் விட்டான் அலாவுதீன்.

உடனே சம்சுதீன் என்ற அந்த பூதம் அலாவுதீனிடம், "இந்த மோதிரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு நான் அடிமை அவர்கள் என்ன சொன்னாலும் நான் அதன் படிச் செய்வேன். அதன் படி இப்போது தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டது.

உடனே அலாவுதீன் தன்னை இந்தக் குகைக்குள் இருந்து விடுவித்துத் தனது தாயிடம் பத்திரமாக சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அதன் படியே சம்சுதீன் என்ற அந்தப் பூதம் பேர் உருவம் கொண்டு அலாவுதீனை பத்திரமாகத் தனது கைகளில் ஏந்திய படி வான் வழியே பறந்து சென்று பாக்தாத் நகரத்தில் அவனது வீட்டு மாடியில் விட்டு விட்டது.

அதனால் மனம் மகிழ்ந்தான் அலாவுதீன். அத்துடன் சம்சுதீன் மீது அவனுக்கு இருந்த பயமும் நீங்கியது. அதனால் சம்சுதீனிடம் நன்றி கூறி அவனை அனுப்பி வைத்தான். சம்சுதீனும் அலாவுதீனிடம் விடை பெற்று மீண்டும் தனது பூத லோகத்தை சென்று அடைந்தான்.

மறுபுறம் அலாவுதீன் தனது தாயைக் காண விரைந்து வீட்டினுள் ஓடினான். அவனைக் கண்ட அவனது தாய் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

தாயாரைக் கண்டதும் தன்னுடைய துயரத்தை எல்லாம் அடக்கிக் கொண்டவனாய், "அம்மா, எனக்குப் பசி எடுக்கிறது. முதலில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருந்தால் கொஞ்சம் கொண்டு வந்து கொடு, அதன் பின்னர் நான் உன்னிடம் விரிவாகப் பேசுகிறேன்" என்று கூறியபடி தனக்கு இருந்த களைப்பினால் அப்படியே படுத்துவிட்டான்.

அலாவுதீனின் தாயும் அவனுக்கு ஆசை, ஆசையாக உணவு வகைகளை சமைத்தாள். தூங்கிக் கொண்டு இருந்த அலாவுதீனை எழுப்பி அத்தனை உணவு வகைகளையும் அவனுக்குப் பரிமாறினாள். அவனும் கூட அதனை உண்டு மகிழ்ந்தான். பிறகு அன்றைய தினம் தனது தாயிடம் அவன் எதுவும் கூற விரும்பாமல் அமைதியாக அன்றைய பொழுதைக் கழித்தான். அலாவுதீனின் தாயும் தனது மகனாக எதுவானாலும் சொல்லட்டும் என்று அமைதியாக ஒன்றும் கேட்காமல் இருந்தாள். இப்படியே அன்றைய பொழுது கழிந்து மறு நாள் காலையும் விடிந்தது.

மறு நாள் காலையில் கண் விழித்த அலாவுதீன் தனது தாயிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். அனைத்து உண்மைகளையும் அறிந்து கொண்ட அலாவுதீனின் தாய் மிகவும் வருந்தினாள். அத்துடன் தனது மகனை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ந்த இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்தாள்.

பிறகு அன்றைய தினம் அவளிடம் சமைக்கக் கூட எந்த உணவும் இல்லாத காரணத்தால் தனது மகனிடம், "மகனே, நான் நூற்று வைத்திருக்கும் இந்த நூலைக் கொண்டு போய்க் கொடுத்து அதற்குக் கிடைக்கும் காசிற்கு ஏதாவது சாமான்கள் வாங்கி வருகிறேன்" என்று கூறிப் புறப்பட்டாள்.

"தாயே தாங்கள் கஷ்டப் படத் தேவை இல்லை. என்னிடம் ஒரு விளக்கு இருக்கிறது; அது சின்ன விளக்குதான். அதன் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க அழுத்தித் துடைத்தால் போதும், அது பார்ப்பதற்கு வெண்கலத்தாலான விளக்கு போலத் தான் தெரிகிறது. அதனை சுத்தப்படுத்தி நாம் கொண்டு போய் விற்றால் கொஞ்சம் காசு கிடைக்கும். அதனைக் கொண்டு இன்றைய பொழுதை நாம் ஓட்டலாம். இதோ அந்த விளக்கு" என்று கூறியபடி அந்த அதிசய விளக்கைத் தனது தாயிடம் கொடுத்தான்.