அரசியற் படலம் - 177
உலகின் உயிர்களுக்குத் தசரதன் ஓர் உடம்பு
177.
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.
வயிர வான் பூண் அணி - வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட
அழகிய அணிகலன்களை அணிந்துள்ள; மடங்கல் போல்
மொய்ம்பினான்- சிங்கம் போன்று வலிமை உள்ள தயரத மன்னன்;
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் - மன்னுயிர்
அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்துவருவதால்; செயிர்
இலா உலகினில்- குற்றமில்லாத இப்பேருலகத்திலே; சென்று. நின்று
வாழ்உயிரெலாம்-இயங்கியற்பொருள். நிலையிற் பொருள்களாக இருந்து
வாழும் உயிரெல்லாம்; உறைவது ஓர் உடம்பு ஆயினன்- தங்கி
வாழ்வதற்குத்தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.
தயரதன் அன்பாலும் அருளாலும் உயிர்கள் அனைத்தின்
விருப்பம் நிறைவேற்றுகின்ற உடலாக மட்டுமே இருந்தான் என்னும்
புதுக்கருத்தை கவிச்சக்கரவர்த்தி வெளியிடுகிறார். கம்பர் காலம் வரை
இலக்கியங்கள் மன்னனை உயிர் எனவே கூற. கம்பன் மறுதலையான.
புரட்சிகரமான இக்கருத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.
மடங்கல்: சிங்கம். “வயிரவான் பூண்” என்பதற்குத் தோளணியாகிய
‘வாகுவலயம்’ என்றும் கூறுவர். சென்று வாழ்உயிர். நின்றுவாழ் உயிர்
எனக் கொண்டு சாம். அசாம் என்றிரண்டு வகை உயிர்களாகக்கொள்க.
இது முதல் ஒன்று பாடல்களால் தயரதன் அரசு செய்யும் திறம்
கூறப்படுகின்றது. 10
