அரசியற் படலம் - 175

bookmark

தசரதன் வேலின் சிறப்பு

175.

யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்
 
யாவரும்  வன்மை நேர் எறிந்து  - எதிர்த்து வரும் எவருடைய
வலிமைக்கும்  ஈடுகொடுத்து  நேருக்கு நேர்  நின்று வெல்லும் போரை;
தீட்டலால்  -  அடிக்கடி  செய்வதால்  ஓரமும்.  முனையும்  மழுங்கி
அவற்றை   அடிக்கடி  நீட்டுவதாலே;  மேவரும்  கையடை  வேலும்
தேயும்- விரும்புகின்ற கைவிடாப்படைகளான வேலும்  வாளும் தேயும்;
கோ  உடை நெடு மணி  மகுட  கோடியால்-  தன்னை  வணங்கும்
அரசர்களது  நீண்டமணி  மகுடவரிசையால்;  சேவடி அடைந்தபொன்
கழலும்   தேயும்-   தயரது  மன்னனது  கால்களில்  பொருந்தியுள்ள
பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.

தயரத     மன்னனது   போரற்றலும்.  மன்னர்   பலரும் பணிந்து
வணங்கும்  பெருமையும்  கூறப்பட்டது.  கையடை -  கைவிடாப்படை.
அடிக்கடி  போர் செய்வதால். மழுங்குகிறது. மீண்டும்  கூர்மை ஆக்கத்
தீட்டுவதால்  தேய்கிறது என்பது கருத்து. சிற்றரசர்கள்  பலரும் சேவடி
தொழுதலால். அவர்களது மணிமுடிகள் உராய்ந்து பொற் கழல்தேய்கிறது
என்கிறார். இனிப் பகைவரின்மையால்    துருவேறி. கறை பிடிப்பதால் -
அடிக்கடி தீட்டுதலால்  தேயும்  எனவும்  கூறுவர். மகுட கோடி:  மகுட
வரிசை  வேலும்   என்பது   உபலட்சணத்தால்  பிற   கருவிகளையும்
குறிக்கும். சேவடி: சிவந்த பாதங்கள்.  வேலும்.   கழலும்    உம்மைகள்
எண்ணுப்பொருள் உடையவை.                                8