அரசியற் படலம் - 176

bookmark

தசரதனின் வெண்கொற்றக் குடை

176.

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து. தேய்வு இன்றி.
தண் நிழல் பரப்பவும். இருளைத் தள்ளவும்.
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்.
விண்ணிடை மதியினை. ‘மிகை இது’ என்பவே.
 
வளர்ந்து   தேய்வு   இன்றி  -   நாளுக்கு   நாள்    வளர்ந்து.
தேய்தலில்லாமல்;  மண்  இடை  உயிர்தொறும்-  உலகிடை  வாழும்
உயிர்கள்  தோறும்; தண் நிழல் பரப்பவும்- குளிர்ந்த நிழலை  எங்கும்
பரப்பவும்;   இருளைத்தள்ளவும்-   இருளே   இல்லாமல்   நீக்கவும்;
அண்ணல்  தன் குடைமதி- பெருமைமிக்க தயரதனது  வெண்கொற்றக்
குடையாகிய  மதியே;  அமையும்  ஆதலால்-  போதும்  (பொருந்தும்)
ஆதலாலே;   விண்  இடைமதியினை-  வானில்  உள்ள  வளர்தலும்
தேய்தலுமுடைய  சந்திரனை;  இதுமிகை  என்ப-  இந்த  மதி கோசல
நாட்டினுக்கு வேண்டாத ஒன்று என்பர்.

என்ப:     என்று  கூறுவர்  மேலோர்.  தசரத மன்னனது  ஆட்சிச்
சிறப்பால்   உயிரினங்கள்   அகத்துன்பமும்.   புறத்துன்பமும்    தீரும்
என்பது அகவிருள். புறவிருள் இரண்டும் நீங்கும் என்பது கருத்து.

விண்மதி     விண்ணில் நின்று. தேய்தலும் வளர்தலும்  உடையதாக
உலகின்  புற  விருள்போக்கி. தண்  ஒளி  பரப்பும் தகைமை உடையது.
இடை    மதியோ.   தேய்தலும்     வளர்தலுமின்றி.   மண்ணிடையும்.
விண்ணிடையும்    வாழும்   உயிர்கள்  எல்லாவற்றினுடய   அக.  புற
இருள்களை      நீக்கி.     தண்ணிழலைப்பரப்புகின்றது    என்கிறார்.
மாமன்னனின் வெண்கொற்றக்குடைச்சிறப்பு கூறியதாயிற்று.          9