அரசியற் படலம் - 173

bookmark

அயோத்தி அரசன் பெயர் தசரதன்

173.

வெள்ளமும். பறவையும். விலங்கும். வேசையர்
உள்ளமும். ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அருப் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள உறை அயில் மன்னர் மன்னனே.
 
வள்உறை    அயில்- தோலால் ஆன உறையை உடைய வேலைத்
தாங்கிய;  மன்னர்  மன்னன்-  அரசர்களுக்  கெல்லாம் அரசனாகிய;
தள்ள  அரும்  பெரும்புகழ்-  நீக்க  முடியாத பெரும்புகழ் படைத்த;
தயரதப்பெயர்  வள்ளல்-  தயரதன்  என்னும்  பெயருடைய வள்ளல்
ஆட்சியில்;   வெள்ளமும்.   பறவையும்   விலங்கும்   வேசையர்
உள்ளமும் - வெள்ளப்   பெருக்கும்.   பறவைகளும்.   விலங்குகளும்.
விலைமாதர் உள்ளமும்; ஒருவழி  ஓட நின்றவன் - ஒரேவழியில் தம்
எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.

செங்கோலாட்சியால்.    அறம் தவறாது ஆண்டு வருபவன் தயரதச்
சக்கரவர்த்தி  என்பது கருத்து. வெள்ளம் ஒரு வழி  ஓடுதலாவது மழை
மிகுதியாகவும்   பெய்யாது.    குறைவாகவும்   பெய்யாது  அளவோடு
பெய்வதால்  வெள்ளமும்   கரைகடவாது  செல்லுதலாம்;  பறவைகளும்
விலங்குகளும்  பகைமையின்றித்தமக்குரிய  வாழ்விலே  நின்றன. பலரை
நாடிச்   செல்லும்  விலைமாதர்  மனமும்   ஒருவனையே   அடைந்து
விரும்பி  இருக்கும்.  தயரதனது  அறம் கடவாத  ஆட்சியினால் இந்த
அதிசயம் நிகழ்ந்தது என்கிறார்.                               6