அரசியற் படலம் - 174

bookmark

உலகம் முழுவதையும் தசரதன் எளிதில் ஆளுதல்

உலகுடையான்
 
174.

நேமி மால் வரை மதில் ஆக. நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக. பல் பணி
வாம மாளிகை மலை ஆக. மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே.
 
நேமி மால்வரை மதில் ஆக- சக்கரவாளம்  என்னும் பெயருடைய
உலகைச்  சூழ்ந்திருக்கும்  பெருமலையே  மதிலாகவும்; நீள்புறப் பாம
மாபுறக்கடல் கிடங்காத-நீண்ட. பரப்புடைய பெரும்புறக்கடல்  என்னும்
பெயருடைய  கடலே  அகழியாகவும்; மலைபல் மணிவாமம் மாளிகை
ஆக-  மலைகள்  யாவும்.  பலவகை  மணிகள்   நிறைந்த  அழாகான
மாளிகைகள்  ஆகவும்  இருந்தது; பூமியும்  அயோத்தி  மா  நகரம்
போலும்-   நிலம்   முழுவதுமே   அப்பேரரசனது   தலைநகரமாகிய
அயோத்தி போன்றிருக்கிறது.

உலகம்    முழுவதும் அவ்வேந்தனது செங்கோல் செல்லும் என்பது
கருத்து.  ‘சக்கரவாளகிரி’ என்பது உலகைச்  சூழ்ந்திருக்கும் பெருமலை.
அப்பெருமலையைச்  சூழ்ந்திருக்கும்   பெருங்கடல்.   பெரும்புறக்கடல்
என்னும் பெயருடையது என்பது புராண  நூல்  கருத்து. மால்: மயக்கம்.
மால்வரை:  பார்ப்பவரை  வியப்பால்   மயங்கச் செய்யும்  மலையாகும்.
பாமம்:  பரப்பு.  வாமம்:  அழகு.  ஏ:   அசை.   அயோத்தி  என்பது
ஒருவராலும்   வெல்ல   இயலாதது   என்னும்    பொருள்   உடைய
வடமொழிப் பெயர்.                                         7