அகலிகைப் படலம் - 560
இராமன் அகலிகையை வணங்கிச் செல்லுதல்
560.
தீது இலா உதவிசெய்த
சேவடிக் கரிய செம்மல்.
‘கோது இலாக் குணத்தான் சொன்ன
பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக
வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன.
பொன் அடி வணங்கிப் போனாள்.
தீது இலா உதவி - தீமையில்லாத பேருதவியை; செய்த -
அகலிகைக்குச் செய்தருளிய; சே அடிக் கரிய செம்மல் -
செம்மையான திருவடிகளையுடைய கரிய இராமன்; கோது இலா -
குற்றமற்ற; குணத்தான் சொன்ன - நற்குணங்களையுடைய
விசுவாமித்திரன் சொல்லிய; பொருள் எலாம் - செய்தி
முழுவதையும்; மனத்தில் கொண்டு - தன் உள்ளத்தில்
கொண்டு; அன்னை - (அகலிகையை நோக்கி) தாய் போன்றவளே!;
மாதவன் அருள் - மிக்க தவத்தால் மேம்பட்ட கௌதமனது
கருணை; உண்டாக - (உன் பக்கம்) உண்டாகும்படி; நீ வழிபடு -
நீ அவனுக்குப் பணிவிடை செய்வாயாக; படர் உறாதே -
(இடையிலே உனக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைந்து) வருந்தாதே!;
போது என்ன - செல்க என்று கூற; பொன்அடி - (அகலிகை)
இராமனுடைய அழகிய திருவடிகளை; வணங்கிப் போனாள் -
வணங்கி அப்பால் சென்றாள்.
தீதிலா உதவி: பிறருக்குத் தீமை பயவாதது; கைம்மாறு கருதாதது;
முன் செய்த உதவியை நோக்காதது. சேவடிக் கரிய செம்மல்: முரண்
தொடை. ஒப்புமை: ‘திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவன்’
- (சிலம்பு: ஆய்ச். குரவை. படர்க்கை. பரவல் 2) 25
