அகலிகைப் படலம் - 544
யாறுகளின் சிறப்பு
544.
முறையினின் முது மேதியின்
முலை வழி பாலும்.
துறையின் நின்று உயர்மாங்கனி
தூங்கிய சாறும்.
அறையும் மென் கரும்பு ஆட்டிய
அமுதமும். அழி தேம்
நறையும் அல்லது. நளிர் புனல்
பெருகலா - நதிகள்.
நதிகள் - (மிதிலை நாட்டு) ஆறுகளில்; முறையினில் - ஒன்றைத்
தொடர்ந்து ஒன்றாக; முது மேதியின் முலைவழி பாலும் - முதிய
எருமைகளின் மடிகளில் இருந்து பெருகின்ற பாலும்; துறையிலே
நின்று - கரைகளிலே நிறைபெற்று; உயர் மாங்கனி - ஓங்கி
வளர்ந்துள்ள மாமரங்களின் பழங்களிலிருந்து; தூங்கிய சாறும் -
வழியும் சாறும்; அறையும் மென் கரும்பு - வெட்டப்பட்ட இனிய
சுவையான கரும்புகளை; ஆட்டிய அமுதமும் - (ஆலையில்
வைத்து) ஆட்டுவதால் பெருகும் அமுதம் போன்ற இனிய பாலும்
(கரும்புப் பால்); அழிதேன் நறையும் - தேன் கூடுகள் சிதைவதால்
சிந்திப் பெருகும் மணமுள்ள தேனும்; அல்லது - (என்னும் இவை
மாறி மாறிப் பெருகுவதேயல்லாமல்) இவையல்லாமல்; நளிர்புனல்
பெருகலா - குளி்ர்ந்த நீர் பெருக இடம் பெறாதன.
நதி வளம்: நதிகளை வருணிக்குங்கால் தாமாகப் பால் சுரக்கின்ற
எருமை வளம். மாமரச் சோலை வளம் கரும்புக் குவியல். தேன்
பெருக்கம் ஆகியவற்றைக் கூறி நாட்டு வளத்தையும் புலப்படுத்தினார்.
முதுமேதி: பருவம் நிரம்பிக் கன்றை ஈன்ற எருமை. மேற்கோள்
‘கனைத்திளங் கற்றெருமைகன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே
நின்று பால் சோர’ - திருப்பாவை-12 10
