அகலிகைப் படலம் - 545

bookmark

நீரோடைகளின் சிறப்பு

545.

இழைக்கும் நுண் இடை இடைதர.
   முகடு உயர் கொங்கை.
மழைக் கண். மங்கையர் அரங்கினில்.
   வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய
   மோட்டு இள மூரி
உழக்க. வாளைகள் பாளையில்
   குதிப்பன - ஓடை.
 
ஓடை   -  (அந்த  நாட்டிலுள்ள) நீரோடைகள்; இழைக்கும்  நுண்
இடை -  (பஞ்சின்)   நூலைக்  காட்டிலும்  நுட்பமான   இடையானது;
இடைதர     -    (சுமையைப்    பொறுக்கமாட்டாமல்     மெலிந்து)
பின்வாங்குமாறு;  முகடு  உயர்   கொங்கை  -   மலைச்சிகரம்போல்
ஓங்கியுள்ள தனங்களையும்;  மழைக்கண் - மழைத்துளிபோல்  குளிர்ந்த
கண்பார்வையையும்   உடைய;   மங்கையர்   -   இளம்   பெண்கள்;
அரங்கினில்  -  (நடனம்  ஆடுகின்ற)  நாடக  சாலையிலே; வயிரியர்
முழவம்  முழக்கும் -   தம்மோடு இருக்கும் பாடகர்கள்  மத்தளத்தை
முழக்குவதனால்  உண்டாகிய;  இன்  இசை வெருவிய - இனிமையான
ஓசையைக்  கேட்டு  அஞ்சி  ஓடுகிற;  மோடு  இள  மூரி  -  பெரிய
இளமையான எருமைகள்;  உழக்க - (படிந்து) கலக்குவதால்; வாளைகள்
பாளையில்  குதிப்பன    -   (அதற்கு   அஞ்சி)  வாளை  மீன்கள்
பக்கங்களிலுள்ள  (தென்னை. கமுகுகளின்)  பாளைகளில்  மேல்  தாவிப்
பாயப் பெறுவன.  

நடன   அரங்கில்  மங்கையர்  ஆடும்போது வயிரியர்    மத்தளம்
கொட்டு்கிறார்கள்;  அதைக் கேட்டு  அஞ்சிய  எருமைகள்  ஓடிச்சென்று
ஓடைகளில் பாய்ந்து  நீரைக்   கலக்குகின்றன.   அதனால்  அங்குள்ள
வாளைகள்    பாளைகளில்    பாய்கின்றன.    வயிரியர்:     மத்தளம்
கொட்டுபவர்.                                               11