அகலிகைப் படலம் - 540

bookmark

மிதிலை நாடு சேரல்
 
540.

பள்ளி நீங்கிய. பங்கயப்
   பழன நல் நாரை.
வெள்ள வான் களை களைவுறும்
   கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல்.
   கயல் எனக் கருதா.
அள்ளி. நாணுறும். அகன் பணை
   மிதிலை நாடு அணைந்தார்.
 
பங்கயப்   பழனம்  -  தாமரைகளையுடைய  வயல்களிலே; பள்ளி
நீங்கிய -  அப்போதுதான்  உறக்கம்  நீங்கிய;  நல்  நாரை  - நல்ல
நாரைகள்;  வெள்ள  வான்களை  -  நீ்ர்  பெருக்கிலே தோன்றுகின்ற
நீண்ட  களைகளை;   களைவுறும்   -   பறிக்கின்ற;  கடைசியர்   -
உழத்தியரின்; மிளிர்ந்த  -  பிறழுகின்ற;  கள்ள வாள் நெடுங்கண் -
(ஆண்களின்   உள்ளத்தை    மயக்கும்)    ஒளியுள்ள    கண்களின்; 
நிழல்   -   சாயையை;  கயல்  எனக்  கருதா - கயல் மீன்களென்று
கருதி;  அள்ளி  -  தம் மூக்கால் குத்தியெடுத்து;  நாணுறும் - (அவை
மீன்களாக  இல்லாமையால்)  வெட்கம் அடைவதற்கு  இடமான;  அகல்
பணை  - பரப்புடைய மருதநிலம் சூழ்ந்த; மிதிலை நாடு அணைந்தார்
- மிதிலை நாட்டை மூவரும் சேர்ந்தார்கள்.  

மிதிலை   நாடு:   வயல்களில்   உள்ள    பங்கய    மலர்களிலே
அப்பொழுதான்   உறக்கம்   நீங்கிய   நாரைகள்   இன்னும்  தூக்கக்
கலக்கத்தால்  மயங்கியுள்ளன.  வயலில்  களைபறிக்கும்   உழத்தியரின்
கண்  பிரதி பிம்பத்தை அந்த நாரைகள் கயலென்று கருத்திக்  கொத்தி
அவை மீன்கள் அல்ல என்பதை அறிந்து  வெட்கமடைந்து  மறைதற்கு
இடமான   வயல்  நிலத்திற்குச்  சென்றன.   மயக்க  அணி:   மகளிர்
கண்களின்   நிழலைக்   கயல்   மீன்    என்று   கருதி    நாரைகள்
மயங்கினவாகக்   கூறியதால்.  வான்களை:  வயல்களில்   தாமரைகளே
களைகளாக   உள்ளன.   ஒப்புமை:   கண்ணும்   கயலும்:  வடிவமும்
பிறழ்ச்சியும் பற்றிக் கண்ணிற்குக் கயல் உவமையாயிற்று. கம்பன்.41   6