அகலிகைப் படலம் - 494
துருவாசமுனிவன் இந்திரனுக்குச் சாபமிடுதல்
494.
‘ “இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு.
உவகையின் ஈந்த
மன்றல்அம் தொடை இகழ்ந்தனை;
நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
உவரி புக்கு ஒளிப்ப.
குன்றி. நீ துயர் உறுக” என
உரைத்தனன். கொதித்தே.
உவரி- உப்புச் சுவையுடையது; இங்கே பாற்கடலைக் குறித்தது;
குன்றி - பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.
‘உலா வருகின்ற உன் சிறப்பைக் கண்டு இம் மாலையை
உனக்குத் தந்தேன்; நீயோ அதனை இகழ்ந்தாய். ஆதலால். உன்
பெருநிதிகளும். செல்வங்களும் மறையட்டும்’ என்று துருவாசன்
இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல். 3-14
