காம நுதலியல்

bookmark

இன்பவியல்

 

 [அதாவது காமத்தின் பகுதிகளைச் சொல்லுகின்ற பிரிவு.]

     [இஃது தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது.]

 

391. முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
     உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
     நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
     புல்லாப் புலப்பதோர் ஆறு.

     (இ-ள்.) வயங்கு - விளங்குகின்ற, ஓதம் - கடலானது, நில்லா - நில்லாமல், திரை அலைக்கும் - அலைகளால் மோதுகின்ற, நீள் சுழி - நீண்ட சுழிகளினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, முயங்காக்கால் - சேர்ந்திராமற் போனால், பசலை பாயும் - பசலையானது [நிறம் மாறுதல்] உடம்பில் வியாபிக்கும், ஊடி உயங்காக்கால் - ஊடி வருந்தாத போது, காமம் உப்பு இன்றாம் - காமமானது ருசியில்லாமற் போகும்; புல்லா - புணர்ந்து, புலப்பது - ஊடுவது, ஓர் ஆறு - (காமத்துக்கு) ஓர் நன்னெறியாம், எ-று.

     பசலை - விசனத்தைக் குறிக்கின்ற வேறு நிறம் [நிறம் மாறுதல்]; கூடாமற் போனால் பசலையுண்டாகின்றது. இங்கே பசலை நித்திரையின்மை, உடம்பு மெலிதல், எல்லாவற்றிலும் பிரியம் இல்லாமற் போதல் இவைகளுக்கு உபலக்ஷணம். எப்பொழுதும் சேர்ந்து கொண்டிருந்தால் காமத்தில் ருசியில்லை, ஆதலால் கூடுவதும் ஊடுவதும் காமத்திற்கு அழகு.

     முயங்காக்கால் - செய்யின் என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்சம். காமம் உப்பின்று - மாடுகோடு கூறியது என்பது போலக் கொள்க. 'உயர்தினை தொடர்ந்த' என்னும் சூத்திர வுரையில் இலக்கணம் காண்க. கூடலை வடநூலாரும் சம்போகமென்றும் ஊடலை விப்ரளம்பம் என்றும் சொல்லி, விப்ரளம்பத்தை மதுரதரம் என்கிறார்கள். [மதுரதரம் - மிகுந்த இனிப்பு.]

 

392. தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
     விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
     பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
     நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

     (இ-ள்.) தம் அமர் காதலர் - தம்மால் விரும்பப்பட்ட நாயகருடைய, தார் சூழ் அணி அகலம் - மாலையை யணிந்த அழகிய மார்பை, விம்ம முயங்கும் - பூரிக்கத் தழுவும், துணை இல்லார்க்கு - அந்நா யகரைப் பிரிந்த மாதருக்கு, இம் என - இம்மென்னு மோசையோடு, எழிலி பெய்ய - மேகம் (நீரைச்) சொரிய, முழங்கும் - முழங்காநின்ற, திசையெல்லாம் - திக்குகளெல்லாம், (அம்முழக்கம்) நெய்தல் அறைந்தது அன்ன நீர்த்து - சாப்பறை யறைந்தாற் போலும் தன்மையையுடைத்து, எ-று.

     மழைக்காலத்தில் தம்மைத் தழுவும்படியான நாயகரைப் பிரிந்த மாதருக்கு மழை பெய்யும் ஓசை சாப்பறை போலிருக்கும் என்றால் அவர்கள் உயிர் பொறுத்தல் கடின மென்றபடி.

     அமர் - வினைத்தொகை; இச்செய்வினையைச் செயப்பாட்டு வினையாகத் திரித்துக் கொள்க. நீர்த்து - குறிப்பு முற்று.

     [இஃது தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.]

 

393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
     மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
     கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
     இம்மாலை என்செய்வ தென்று.

     (இ-ள்.) கம்மம் செய் - கம்மியத் தொழிலைச் செய்கின்ற, மாக்கள் - மனிதருடைய [கம்மாளருடைய], கருவி - ஆயுதங்களை, ஒடுக்கிய - வேலையில்லாமல் இருக்கச் செய்த, மம்மர் கொள் - மயக்கத்தைக் கொண்ட, மாலை - சாயங்காலத்தில், மலர் ஆய்ந்து - பூக்களை யாராய்ந்தெடுத்து, பூ தொடுப்பாள் - அம்மலர்களை (மாலையாத் தொடுத்து,) கை மாலை இட்டு - கையில் அம்மாலையை வைத்துக் கொண்டு, துணை இல்லார்க்கு - நாயகனில்லாத பெண்களுக்கு, இ மாலை என் செய்வது என்று - இந்த மாலை என்ன பிரயோசனத்தைத் தருவதென்று, கலுழ்ந்தாள் - மனம் கலங்கி அழுதாள், எ-று.

     ஒருத்தி சாயங்காலம் நல்ல மலர்களை மாலை தொடுத்து நாயகன் பிரிந்து பரதேசம் செல்வதைத் தோழியாற் கேள்வியுற்று இவ்வளவு வருந்தி அன்பினால் நாயகருக்கென்று விநோதமாய்க் கட்டிய இந்த மாலை அவர் இல்லாத போது இது ஏதுக்கும் உபயோகமில்லையென்று மனங்கலங்கி அழுதாள் எனத் தோழி தலைவற்குக் கூறினாள். இதனால் அவன் பகற்காலத்தில் நாயகரைப் பிரிந்திருந்தாலும் இரவிற் பிரிந்திருப்பது சகிக்கத் தக்கதன்று என்றால் இதுவும் கார்க்காலம் போல பெண்களுக்கு வருத்த முண்டாக்கும் என்றதாயிற்று.

     மாலை என்பது பூமாலையேயல்ல போகத்துக்கு வேண்டிய மற்றக் கருவிகளுக்கும் உபலக்ஷணம். இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் பெண்களுக்குக் காமமிகுதியால் வரும் இன்பச் செய்கைகள். 'கம்மஞ்செய்... ஒடுங்கிய' என்பது அந்திக் காலத்தின் குறிப்பு. பலகுறிப்புகள் உளவாயினும் பகலெல்லாம் மிகவருந்தி வேலை செய்யும் கம்மியரும் வேலையை நிறுத்தித் தன் நாயகிமாரிடம் செல்லுங் காலமென இக்குறிப்பைக் காட்டியது. மம்மர் என்பது காமக்களிப்பு. மம்மர் செய் - இது காலத்தின் இயற்கையைக் காட்டியது.

     ஒடுங்கிய என்னும் பெயரெச்சமும் பெயரெச்சத்தின் விகாரமாகிய செய் என்னும் வினைத்தொகையும் [நன். பொது. சூ.4ம்] விதியால் மாலை என்னும் தம்மெச்சம் கொண்டன. கலுழ்ந்தாள் - கலுழ் - பகுதி.

     [இஃது வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது.]

 

394. செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
     மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
     நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
     தோள்வைத்து அணைமேற் கிடந்து.

     (இ-ள்.) செல் - (அஸ்தமிக்கச்) செல்கின்ற, சுடர் - சூரியனை, நோக்கி - பார்த்து, சிதர் - சிதறிய, அரி - இரேகைகளையுடைய, கண் - கண்கள், கொண்ட - அடைந்த, நீர் - நீரை, மெல் விரல் - மெல்லிய விரல்களால், ஊழ் - முறையில், தெறியா - எடுத்தெறிந்து, விம்மி - விம்மி அழுது, தன் மெல் விரலின் - தன்னுடைய மெல்லிய விரல்களில், நாள் வைத்து - நாள்களைக் கணக்கிட்டு, (தலைவி) அணைமேல் - படுக்கையில், தன் தோள் வைத்து - தன் புஜங்களைத் தலைக் கணையா வைத்து, கிடந்து - படுத்து, நம் குற்றம் - நமது குற்றங்களை, எண்ணும் கொல் - எண்ணுவாளோ, அந்தோ - ஐயோ! (என்று பாகனோடு தலைவன் கூறினான்), எ-று.

     ஒரு தலைவன் தேசாந்தரம் போயிருந்து தன்னூர் கிட்ட வரும் போது, நம்முடைய காதலி அஸ்தமன காலங் கண்டு கண்களில் வடியும் நீரை விரலால் எடுத்துத் தெறித்து நாம் போன நாள் இத்தனையென்று விரல்வைத்தெண்ணி நாம் விரைவில் வருவோ மென்றும் இன்னின்னபடி செய்வோமென்றும் சொல்லித் தவறிப் போன குற்றங்களைச் சிந்தித்து விசனப்படுவாளே யென்றிரங்கிப் பாகனோடு சொல்லியபடி.

     செல் - வினைத்தொகையாகலின் ஈறுதிரியா தியல் பாயிற்று. அந்தோ - இரக்கச் சொல். "சிதரரிக்கண்கொண்ட நீர்" என்பதற்கு 'இரேகைகள் படர்ந்த கண் அழகை மறைத்துக் கொண்டு நிற்கிற நீர்' என அவள் அழகை நினைத்து இரங்கினானென்பது கருத்து.

     [இஃது தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது.]

 

395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
     பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
     ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
     கோட்டிய வில்வாக்கு அறிந்து.

     (இ-ள்.) கண் - கண்களை, கயல் என்னும் - மச்சமென்கிற, கருத்தினால் - எண்ணத்தினால், சிறு சிரல் - சிறிய சிச்சிலிக் குருவி, காதலி பின் சென்றது - மனைவியைப் பின் தொடர்ந்து போயிற்று; பின் சென்றும் - பின் போயும், ஊக்கி எழுந்தும் - முயற்சிப்பட்டும், ஒள் புருவம் - பிரகாசமான புருவமாகிய, கோட்டிய - வளைத்த, வில் வாக்கு - வில்லின் வளைவை, அறிந்து - தெரிந்து, எறிகல்லா - எறியமாட்டாதிருந்தன [பிடியாமலிருந்தன], எ-று.

     தன் தலைவியினுடைய கண்களை மச்சமென்று நினைத்து சிச்சிலிக் குருவிகள் பின்சென்று பிடிக்க முயன்றும் மேலிருக்கும் புருவத்தை வளைத்த வில்லென்று நினைத்துப் பிடியாமனின்றன வென்று தன் காதலியினுடைய அழகை வியந்து தலைவன் தோழனோடு சொல்லியது.

     அம்ம - இடைச்சொல், இது அசையுமாம், கேளுங்கள் என்கிற பொருளையுந் தரும். "அம்மவுரையசை கேண்மினென்றாகும்" என்பது சூத்திரம். எறிகல்லா - எறி - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறைப் பண்படி, இங்கு விகுதியாவேனும் இடைநிலையாவேனும் கொள்க; ஆ - பலவின்பால் விகுதி. எறிதல் - தூக்கிப்போடல் வாக்கு - வாங்கு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்து நின்றது.

     [இஃது மகளைப் போக்கிய தாய் இரங்கியது.]

 

396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
     பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
     பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
     அஞ்சிப் பின்வாங்கும் அடி.

     (இ-ள்.) அரக்கு ஆம்பல் - செவ்வாம்பலைப் போல, நாறும் - தோன்றுகின்ற, வாய் - இதழையுடைய, அம் மருங்கிற்கு - அழகிய இடையே யுடையவளுக்கு, அன்னோ - ஐயோ!, பரல் கானம் - பருக்காங் கற்களையுடைய காட்டை, அரக்கு ஆர்ந்த பஞ்சி கொண்டு - சிவந்த நிறமுடைய பஞ்சினால், ஊட்டினும் - (செம்பஞ்சிக் குழம்பைத்) தடவினாலும், பை என பை என என்று - மெதுவாக மெதுவாக என்று, அஞ்சி - பயந்து, பின் வாங்கும் அடி - (சகியாமல்) இளைக்கிற பாதங்கள், ஆற்றின கொல் ஓ - பொறுத்தனவோ?, எ-று.

     நம்மகள் காடு சென்றாளே அவள் செம்பஞ்சிக் குழம்பைப் பஞ்சினால் தடவினபோதும் அதைப் பொறுக்க மாட்டாமல் மெல்ல மெல்ல என்று சொன்ன அவள் தன் தலைவன் பின்னே செல்லுகையில் அவளுடைய பாதங்கள் பருக்காம் கற்களின் மேல் எப்படி நடந்தனவோ வென்றிரங்கித் தாய் விசனப்பட்டுச் சொன்னாள் என்பதாம்.

     நாறும் வாய் - மணம் வீசும் வாய் எனவும் பொருள் கொள்ளலாம். அம்மருங்குல் - உரிச்சொற்றொடர்ப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அம் - உரிச்சொல்; அது பண்பாதலால் "ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி" என்பதற்கு விரோதமில்லை. அன்னோ - இரக்கச்சொல். கொல் என்பது ஐயப்பொருளில்வந்த இடைச்சொல். ஓ - வாக்கியாலங்காரத்திற்கு வந்த அசைச்சொல். (அல்லது) "ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா" என்கிற விதியினால் இரண்டும் ஐயப்பொருளையே சிறப்பித்து நின்றன வென்னவுமாம்.

     பைய என என்பது பையென என ஈறு தொகுத்தலாய் நின்றது. பையெனப் பையென - அச்சப்பொருள் பற்றி அடுக்கி வந்தன.

     [இஃது தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.]

 

397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
     மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
     மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
     கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.

     (இ-ள்.) ஓலை கணக்கர் - ஓலையெழுதும் கணக்கர்களுடைய, ஒலி அடங்கும் - ஓசை ஒழிந்து போகும்படியான, புல் செக்கர் - அற்பமான சிவப்பினையுடைய, மாலை பொழுதில் - மாலைக்காலத்தில், மணந்தார் பிரிவு உள்ளி - தலைவன் பிரிதலை நினைத்து, மாலை பரிந்திட்டு - மாலையைக் கழற்றியெறிந்து, வனம் முலை மேல் - அழகான ஸ்தனத்தின் மேல், கோலம் செய் சாந்தம் - அலங்காரம் செய்த சந்தனப் பூச்சை, திமிர்ந்து - உதிர்ந்துத்தள்ளி, அழுதாள் - துக்கித்தாள், எ-று.

     சாயங்காலத்தில் தன் தலைவன் பிரிவதை எண்ணி அதைப் பொறாமல் தலைவி, தான் அணிந்திருந்த பூமாலையைக் கழற்றி யெறிந்து சந்தனக் கோலத்தைத் திமிர்த்துத் தள்ளியழுதாள் எனத் தோழி தலைவற்குச் சொன்னா ளென்பதாம்.

     கணக்கர் கிராமக்கணக்கு முதலியவைகளை யெழுதிப் பேசி யோயுங்காலமாதலால், "ஓலைக்கணக்கர் ஒலியடங்கு" என்பதைச் சாயங்காலத்தின் குறிப்பாகக் கொள்ளப்பட்டது.

     அடங்கு - வினைத்தொகை. மணந்தார் - விவாகஞ் செய்தவர், வினையாலணையும் பெயர். உள்ளி - உள் அல்லது உள்ளு - பகுதி, இ - விகுதி, இதனை உகரத்தின் திரிபு என்று சொல்வாரு முளர்.

     [இஃது உடன்போக்குப் பொருந்தின தலைமகன் தோழிக்குச் சொல்லியது.]

 

398. கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
     நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
     பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
     கற்றான் அஃதூரும் ஆறு.

     (இ-ள்.) சுடர் தொடீஇ - பிரகாசமுள்ள வளைகளை யுடையவளே!, கடக்க அருகானத்து - கடந்துபோவதற் கரிதான காட்டிலே, காளை பின் - காளை போன்ற என் கணவன் பின், நாளை - நாளைத்தினம், நடக்கவும் வல்லையோ - நடந்து சொல்லவு மாட்டுவையோ, என்றி - என்று நீ சொன்னாய்; பெரு குதிரை - பெரிய குதிரையை, பெற்றான் ஒருவன் - பெற்றவனாகிய ஒருவன், அ நிலையே - அக்கணமே, அஃது - அதை, ஊரும் ஆறு - ஏறி நடத்து முறைமையை, கற்றான் - கற்றவனேயாவன், (ஆதலால் நாயகன் பின்போதல் அரிதன்று), எ-று.

     நீ நாளைக்குக் கணவன் பின் போக வுடன்பட்டையே நடந்து செல்லமாட்டுவையோ வென்று தோழீ நீ என்னை வினாவினாய், அதற்கு நான் சொல்லுகிறேன், ஒருவன் குதிரையை வாங்கினால் அதையேறி நடத்தவும் கற்றிருப்பானல்லவோ, அப்படிப்போல ஓர் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட நான் அவன் பின் செல்லமாட்டா திருப்பேனோ என்றாள் ஒருத்தி என்பதாம்.

     கடக்க அரு - கடக்கரு என ஈறுதொக்கது. காளை - உவமையாகு பெயர். வல்லை - முன்னிலைக் குறிப்பு வினைமுற்று. ஓ - வினா விடைச்சொல். என்றி - முன்னிலை யொருமைத் தெரிநிலை வினைமுற்று; என் - பகுதி, இடைச்சொல், றகரம் - இடைநிலை, இ - விகுதி. ஐயாயிகர வீற்ற மூன்று மேவலின் உரூஉம் என்னுஞ் சூத்திரத்திற் காண்க. சுடர்த்தொடி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, அளபெடுத்தது விளியுருபு.

     [இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது.]

 

399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
     இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
     வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
     பூம்பாவை செய்த குறி.

     (இ-ள்.) முலை கண்ணும் - முலையின் காம்புகளும், முத்தும் - முத்துமாலையும் (அழுந்த) - முழுமெய்யும் - உடம்பு முழுமையும், புல்லும் இலக்கணம் யாதும் - ஆலிங்கனம் செய்து கொண்ட குறி யாதொன்றையும், அறியேன் - அறியமாட்டேன்; என் பூம்பாவை - என்னுடைய மகள், செய்த குறி - செய்த அடையாளம், கலை கணம் - மான் கூட்டம், வேங்கை வெரூஉம் - புலிக்கு பயப்படுகிற, நெறி - வழியில், செலிய போலும் - செல்லுதற்குப் போலும், எ-று.

     நேற்று என் மகள் தன்னுடைய முலைக்கண்ணும் முத்துமாலையும் என் மெய்யிற் பொருந்தும்படி என்னை ஆலிங்கனஞ் செய்த குறி இன்னதென்று அறிந்திலேன். அது, மான்கள் புலிக்கஞ்சி யோடும்படியான வழியில் தான் தன் னாயகனோடு செல்லுதற்கு அடையாளமாகச் செய்தாளென்று இன்றறிந்தேன் என்று தாய் மகளைக் குறித்துக் கவலைப்பட்டுச் சொல்லியது.

     பயத்துக் கேதுவானதை இரண்டாம் வேற்றுமையிற் கொள்வது தமிழ்ச் செய்யுளாட்சி; நான்காம் வேற்றுமையிற் கொள்வது உலக வழக்கு. வெரூஉம் - உகரம் அளபெடுத்தது இன்னோசைக்காக, செலிய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம்; செல் - பகுதி, இ - சாரியை, அ - விகுதி, இச்சாரியை பெறாதபோது செல்ல வென்றிருக்கும். போலும் - தெரிநிலை வினைமுற்று, பயனிலை இங்கு போல் என்றது உவமையைக் காட்டினதன்று; தற்குறிப்பைக் காட்டியது. "அங்ஙனம் புல்லியது" என்பதை எழுவாயாக வருவித்துக் கொள்க.

 

400. கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
     என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
     கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
     பாங்கனார் சென்ற நெறி.

     (இ-ள்.) பொன் ஈன்ற - பொன்போலும் தேமல் பூத்த, கோங்கு அரும்பு அன்ன முலையாய் - கோங்க மலரையொத்த முலையையுடைய தோழி!, கண் மூன்று உடையானும் - மூன்று கண்களையுடைய சிவனும், காக்கையும் - காக்கைப் பறவையும், பை அரவம் - படமுடைய சர்ப்பமும், என் ஈன்ற யாயும் - என்னைப் பெற்ற தாயும், பிழைத்தது என் - (எனக்கு அவர்கள்) செய்த குற்றம் என்ன, [ஒன்றுமில்லை]; (குற்றம் செய்ததெது வெனில்) பொருள்வயின் - பொருளினிடத்தசையால், பாங்கனார் - என் நாயகர், சென்ற நெறி - போன மார்க்கமே (யாம்), எ-று.

     அந்நெறி இல்லையாயின் அவர் செல்லார், அப்போது அவையெல்லாம் நமக்கு அநுகூலமே யாகும். நாயகர் பொருள் விருப்பத்தால் தேசாந்தரம் போன நெறியை நாம் வெறுத்துப் பழிக்க வேண்டுவதென்ன? அது நமக்கு என்ன குற்றம் செய்தது. ஆகில் யார் குற்றம் செய்தவர்களென்றால், மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டிற் பொரித்த குயிற்குஞ்சைக் குத்தியெறியாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த அரவும், என்னைப் பெற்ற போதே கொல்லாமல் விட்டு வளர்த்த தாயுமே பிழை செய்தனர் என்று தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது என்றால் கணவனைப் பிரிந்த காலத்து மன்மதனும் குயிலும் சந்திரனும் வருத்துவதனாலும் தாய் கொன்றிருந்தால் இப்படிப்பட்ட துன்பங்களை யநுபவியாமலிருக்கலா மாதலாலும் அவர்கள் பிழைத்த தென்றாள். இப்பொழுது மன்மதன், குயில், சந்திரன் ஆகிய இவர்கள் இன்னின்ன காரியம் செய்ததனாலே பிழை செய்தார்களென்று நாம் வெறுக்க வேண்டியதில்லை; அவர் அந்நெறியிற் செல்லாமல் நம்மிடத்தே யிருப்பராயின் அவரெல்லாம் அநுகூலமே செய்வாராவர், ஆதலால் அவர் சென்ற நெறியே நமக்குப் பிழைத்ததென நாம் கூறவேண்டிய தாயிற்று.

     கண்மூன்றுடையான் - பண்புத்தொகை; மூன்று கண் என மாற்றிக் கொள்க. பையரவு - இரண்டாம் வேற்றுமை யுருபும் பயனுமுடன்றொக்க தொகை. பிழைத்தது - தொழிற்பெயர். கண்மூன்றுடையான் முதலானோர் பிழைத்தது என்பதனோடு முடிந்தது, அது எழுவாயாகி என் என்னும் வினாவினைக் குறிப்பு முற்றோடு முடிந்தது. பொன் - தேமலுக்கு ஆகுபெயர். முலையாய் - ளகரம் யகரமானது விளியுருபு. வயின் - ஏழனுருபு. நெறி - எழுவாய், பிழைத்தது - பயனிலை.

 

காமத்துப்பால்முற்றிற்று

...நாலடியார் முற்றிற்று...