கற்புடை மகளிர்
இன்பவியல்
[அதாவது பதிவிரதைகளின் தன்மை. பொதுமகளிர் போகம் விரும்பத்தக்க தன்றென்ற போது குலமகளிர் போகம் அறத்துக்குப் பொருந்தியதனால் விரும்பத்தக்க தென இவ்வதிகாரம் முன்னதின் பின்னர் வைக்கப்பட்டது.]
381. அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
(இ-ள்.) அரு பெறல் கற்பின் - பெறுதற்கரிதான, கற்பினையுடைய, அயிராணி அன்ன - அயிராணியைப் போன்ற, பெரு பெயர் - பெரிய கீர்த்தியையுடைய, பெண்டிர் எனினும் - பெண்களானாலும், பெறும் நசையால் - தன்னை அநுபவிக்கும்படியான ஆசையால், விரும்பி - அபேட்சித்து, பின் நிற்பார் இன்மையே - (தன்) பின்னால் காத்திருக்கும் படியான புருஷரில்லாமையாகிய நற்குணத்தையே, பேணும் நறு நுதலாள் - பரிபாலனஞ் செய்கிற பெண், நன்மை துணை - (தன் நாயகனுக்கு) நல்ல துணையாவாள், எ-று.
இந்திராணிக்குச் சமானமான பெண்ணானாலும், எவள் தன்னைச் சேரவேண்டுமென்று விரும்புகிற புருஷர் தன் பின்னே நிற்காதபடி நல்லொழுக்கத்தில் நிற்கின்றாளோ அவளே தன் கணவனுக்கு நல்ல துணையானவள் என்பதாம்.
பெண்ணின் குறிப்பைக் காணாமல் எவனும் அவள் பின்னே நிற்கமாட்டா னாகையால் பின்னிற்பா ரென்றார். நறுநுதலாள் - நல்ல நெற்றியையுடையவள். அருபெறல் - பெறலரும் என்று சொற்களைத் திருப்பிக் கொள்க. அயிராணி - இந்திராணி என்னும் வட சொல்லின் திரிபு.
382. குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
(இ-ள்.) குடம் நீர் - (ஒரு) குடத்து நீரை, அட்டு உண்ணும் - காய்ச்சி உண்ணும்படியான, இடுக்கண் பொழுதும் - வறுமை வந்த காலத்தும், கடல் நீர் அற உண்ணும் - சமுத்திர ஜலத்தை வற்றும்படி உண்கிற, கேளிர் வரினும் - சுற்றத்தார் வந்தாலும், கடன் நீர்மை - கடமையாகிய குணத்தை, கை ஆறு ஆ - ஒழுக்கநெறியாக, கொள்ளும் - கொள்ளுகின்ற, மடம் மொழி மாதர் - இரசமான மொழியையுடைய பெண், மனை - இல் வாழ்க்கைக்குத்தக்க, மாட்சியாள் - மேன்மையை யுடையவள், எ-று.
குடநீரட்டுண்ணும் - அரிசி முதலியவை யின்மையால் நீரையே காய்ச்சி யுண்கிற என்று வறுமையின் மிகுதி கூறப்பட்டது. கடனீர் வற்றும்படி யுண்கிற கேளிர் என்றால் எண்ணிக்கையில்லாத பந்துக்களென்பது பொருள். கடனாவது - விருந்தோம்பல், சுற்றந்தழுவுதல் என்பன. மடமொழி - சுவடு முதலியவை இல்லாத பேச்சு. இடுக்கண் - இடுக்கமுற்று நிற்பது, அதாவது துன்பம்; இங்கே அது வறுமைக்குக் கொள்ளப்பட்டது. மனை - இல்லறம்.
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
(இ-ள். நால் ஆறும் ஆறு ஆய் - நாற்றிசையும் வழியாகி, நனி சிறிது ஆய் - மிகவும் சிறியதாகி, எ புறனும் - எல்லாப் பக்கங்களிலும், மேல் ஆறு - மேல் வழியிலிருந்து, மேல் - (தன்) மேல், உறை சோரினும் - மழைத்துளி வழிந்தாலும், மேல் ஆய - மேலான தர்மங்களை, வல்லாள் ஆய் - (செய்ய) வல்லவளாய், வாழும் ஊர் - தான் வாழ்கின்ற ஊரிலுள்ளார், தன் புகழும் - தன்னைப் புகழும்படியான, மாண் - கற்பின் - மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய, இல்லாள் - மனைவி, அமர்ந்ததே - வாழ்கின்றதே, இல் - மனையாகும், எ-று.
நாற்பக்கத்திலும் வழியுடையதாய் மிகவும் சிறியதாய் மேல் வழியிலிருந்து மழைத்துளி தன் மேல் வழிந்தாலும் பொறுத்து இல்லறம் நடாத்துவதில் வல்லவளாய் ஊரார் தன்னைப் புகழக் கற்பின் மிகுந்தவள் வசிக்குமிடமே வீடென்பதாம். வீட்டின் சீர்மை யில்லாமையைச் சொன்னது தரித்திரத்தின் மிகுதியைக் குறிப்பிப்பதற்கு எவ்வளவும் தனக்குரிய ஒழுக்கத்தில் தவறுதல் இல்லாமல் கற்பினையுடையவள் சிறந்த பெண் என்றதாயிற்று. ஆய - பலவின்பால் வினையாலணையும் பெயர்.
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
(இ-ள்.) கட்கு இனியாள் - கண்ணுக்கு இனிய ரூபத்தையுடையவளாய், காதலன் - நாயகனது, காதல்வகை - ஆசையின்படி, புனைவாள் - (தன்னை) அலங்கரித்துக் கொள்பவளாய், உட்கு உடையாள் - அச்சம் உடையவளாய், ஊர் நாண் இயல்பினாள் - ஊருக்கு நாணும் படியான தன்மையுடையவளாய் [அல்லது ஊரார் நாணும்படியான தன்மையுடையவனாய்], உட்கி - அஞ்சி, இடன் அறிந்து - சமயம் தெரிந்து ஊடி - (நாயகனோடு) பிணங்கி, இனிதின் - பிரியமாக, உணரும் - (புணர்ச்சியைத்) தெரிந்து கொள்கிற, மடமொழி மாதராள் பெண் - கபடமில்லாத பேச்சுகளை யுடைய பெண்ணே பெண் ஆவாள், எ-று.
முகக்கோட்டம் சுடுசுடுப்பு இல்லாமல் பார்க்கப் பிரியப்படுபவளாய், நாயக னிஷ்டப்படி தன்னை அழகு செய்து கொள்பவளாய், பர புருஷரோடு பேசுதல் முதலாகியவற்றிற்கு அஞ்சுகிறவளாய், எப்படிப்பட்டவர்களுக்கும் நாணுந் தன்மையுடையவளாய், நாயகன் மனதுக்கு என்னகோட்ட முண்டாமோவென் றஞ்சி அப்படிப்பட்ட தருணத்தில் ஊடி மறுத்தும் மூர்க்கமில்லாமல் ஊடலின் நீங்கிப் புணருங் காலம் அறிபவளே குலப்பெண்ணாவாள். "ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக், கூடலிற் றோன்றிய உப்பு" என்னுங் குறளானு முணர்க.
உவப்பிற்கு ஏதுவாகையால் இங்கே இடனறிந்தூடி என்றும், அவ்வூடலே பிடிவாதமாய் நின்றால் அது வெறுப்பைத் தருமாதலால் இனிதினுணரும் என்றுங் கூறினார். "ஒரு பொருண் மேற்பல பெயர்வரினிறுதி, யொருவினை கொடுப்ப தனியு மொரோவழி" என்பதனால் இனியாள் முதலியவை 'மாதராள் பெண்' என்பதனோடு முடிந்தது. இச்சூத்திரத்தில் வினையென்றது முடிக்குஞ் சொல்லை. காதல்வகை - வகையென்பதனோடு ஆக என ஒரு சொல்லை வருவித்துக் கூட்டிக் கொள்க.
ஊர் - ஊரிலுள்ளார்க்கு ஆகுபெயர். ஊர் நாண் இயல்பினாள் - ஊரிலுள்ளவர்கள் வெட்கப்படும்படியான கற்புடைமை முதலிய நற்குணமுடையாள் என உரைப்பினும் பொருந்தும். மாதர் - அழகு, அதனையுடையவள் மாதராள்.
385. எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
(இ-ள்.) எ ஞான்றும் - எந்த நாளும், எம் கணவர் - எம்முடைய நாயகர், எம் தோண்மேல் - எம்முடைய புயங்களில், சேர்ந்து எழினும் - அணைந்தெழுந்தாலும், அ ஞான்று - அந்த நாளில், கண்டேம் போல் - (யாம்) கண்டது போல, நாணுதும் - நாணமடைகின்றோம், எ ஞான்றும் - எப்பொழுதும், பொருள் நசையால் - பொருள் ஆசையால், பல் மார்பு - பலருடைய மார்புகளை, சேர்ந்து ஒழுகுவார் - சேர்ந்து நடக்கின்ற பரத்தையர், கெழீஇயினர் - (பலர்க்கும்) உரியராயினர், என்னை - ஈதென்ன தன்மையோ? எ-று ஆல், கொல், ஒ - அசைகள்.
எம்முடைய நாயகர் எப்போதும் எம்மைவிட்டுப் பிரியாமலே இணைந்திருக்கிறார். ஆயினும் முதலில் கண்ட போது எப்படி நாணினோமோ அப்படியே இன்றும் நாணுகின்றோம். இப்படியிருக்க, பொருளாசையினால் ஒரு கால் சேருகின்ற வேசிமார் சற்றும் நாணாமல் சேர்ந்தவர்களை எப்படி அவ்வளவு சொந்தமாய்க் கையாளுகிறார்கள் என்பது கருத்து. இதனால் வேசிமாரைப் போல நாணம் அச்சங்களின்றிப் புருஷரிடத்தில் நடப்பவர்கள் குலப்பெண்களாகார்கள் என்பதாம்.
சேர்ந்தெழினும் - சேர்ந்தெழுந்தாலும். கண்டேம் - தன்மைப் பன்மை வினையாலணையும் பெயர். நாணுதும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; இங்கே இயல்பினால் நிகழ்காலத்தில் மயங்கியது. என்னை - எவன் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, கடைக்குறையாய் ஐகாரச் சாரியை பெற்றது. கெழீஇயினர் - இன்னிசையளபெடை, கெழுவு - பகுதி, இன் - இடைநிலை, அர் - விகுதி, தெரிநிலை வினைமுற்று.
386. ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
(இ-ள்.) வள்ளன்மை - மிகுந்த ஈகையை, பூண்டான்கண் - அடைந்தவனிடத்துள்ள, ஒள் பொருள் - பிரகாசமான திரவியமானது, உள்ளத்து - மனத்தில், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூல் அற்று - படித்த நூலை ஒத்திருக்கும்; (அதுபோல) நாண் உடையாள் - நாணம் உடைய குலமகள், பெற்ற நலம் - அடைந்த அழகு, தெள்ளிய - விவேகமுள்ள, ஆண் மகன் - வீரனாகிய புருஷருடைய, கையில் - கையிலுள்ள, அயில் - கூர்மையான, வாள் அனைத்து - வாளை ஒத்திருக்கின்றது, எ-று.
இயற்கையில் தாதாவாயிருப்பவன் கையில் பணம் இருந்தால் அது விவேகமுள்ளவன் கற்ற நூற்பொருள் போல் பயன்பட்டு விளங்கும். அதுபோல இயற்கையில் நாணமுடைய வளுக்குள்ள அழகாவது வீரன் கையில் ஆயுதம் போல் யாவராலும் புகழப்பட்டு விளங்குமென்பதாம்.
ஆல், அரோ - அசைகள். வள்ளல் தன்மை - வள்ளன்மை. ஒள்பொருள் - ஒண்பொருள், பண்புச் சொற்களிலுள்ள லகர ளகரங்கள் பெரும்பாலும் னகர ணகரங்களாகத் திரிந்து வருவன என அறிக. வாள் அனைத்து - அனை - உவமைச்சொல். வாளனைத்து என்பது ஒரு சொல்லாக் கொள்ளத்தக்கது.
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
(இ-ள்.) ஊரன் - ஊருக்குடையவன், கரு கொள்ளும் - கறுத்த கொள்ளையும், செம் கொள்ளும் - சிவந்த கொள்ளையும், ஒருங்கு ஒப்ப - சமானமாய் ஒத்திருக்க, தூணி பதக்கு என்று - தூணிப்பதக்கென்னும் அளவால், கொண்டானாம் - வாங்கிக் கொண்டானாம்; (அதுபோல்) ஒருங்கு ஒவ்வா - முழுதும் ஒத்திராத, நல் நுதலார் - அழகிய நெற்றியையுடைய வேசியரை, தோய்ந்த - அனுபவித்த, வரை மார்பன் - மலை போன்ற மார்பையுடைய கணவன், நீர் ஆடாது - ஸ்நானஞ் செய்யாமல், என்னையும் தோய வரும் - என்னையும் அனுபவிக்க வருகிறான். எ-று.
ஒரு நாட்டுப்புறத்தான் கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் விலை வித்தியாசமில்லாமல் ஒரேயளவிற்கு வாங்கிக் கொண்டா னென்பார்கள், அப்படியே என் கணவன் பல பரத்தையரைப் புணர்ந்து ஸ்நானமுஞ் செய்யாமல் என்னையும் அனுபவிக்க வருகிறான், இதென்ன அக்கிரமம் என்று தலைவி கூறியதாகக் கொள்க. இதனால் தன் கணவன் செய்த அக்கிரமத்தையும் பொறுத்துக் கொள்வார் கற்புடை மகளிர் என்பதும், நீராடியாயினும் வந்தால் சேரலாமெனத் தம்முடைய சுத்தியையும் கூறினவாறாயிற்று.
ஒருங்கு - பகுதியே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. தூணி பதக்கு என்பன முகத்தலளவைப் பெயர்கள். தூணி - நாலுமரக்கால், பதக்கு - இரண்டு மரக்கால். ஆம் என்பது தாம் காணாமையைக் குறிக்கின்றது. ஊரன் என்பது தாரதம்மிய மறியாமையைக் குறிக்கின்றது. வரும் - இயல்பினால் வந்த கால வழுவமைதி.
388. கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.
(இ-ள்.) பாண - பாணனே!, கொடியவை கூறாதி - கொடுமையான சொற்களைச் சொல்லாதே; (ஏனெனில்) யாம் -, ஊரற்கு - தலைவனுக்கு, துடியின் - உடுக்கையினது, இடம் கண் அனையம் - இடது பக்கத்தைப் போல் பிரயோசனப் படாதவர்களாயிருக்கின்றோம்; அதனால் - அத்தன்மையால், நீ கூறின் - (அப்படிப்பட்ட சொற்களை) நீ சொன்னால், பைய - மெதுவாக, அடி விட்டு ஒதுங்கி சென்று - நீ இருக்குமிடத்தை விட்டு அப்புறம் போய், வலம் கண் அனையர்க்கு - அந்த (உடுக்கையின்) வலது பக்கத்தைப் போல் அவருக்குப் பிரயோசனப்படுகிற வேசியர்க்கு, உரை - சொல்லு, எ-று.
இஃது ஒருத்தி தன் தலைவன் பரத்தையரிடத்துச் செல்வதைப் பாணன் தன்னிடத்திற் கூற, அதைக் கேட்கச் சகியாமல், பிரயோசனப்படாத வென்னிடத்திற் சொல்ல வேண்டாம், பிரயோசனப்படுகிற பரத்தையரிடத்திற் சொல்லென்று சொன்னாள் என்பது கருத்து. இதனால் தன் கணவன் தூஷணையைக் காதினால் கேட்கவும் பிரியமில்லாமையாகிய நற்குணம் குலமகளிர்க் குண்டென்று கூறப்பட்டது.
உடுக்கைக்கு வலதுபக்கம் அடிபடுதலே யன்றி இடது பக்கம் அடிபடுவதில்லை. பாணன் என்பவன் பாடுகின்ற ஓர் இழி சாதியான்; இவன் தலைவன் தலைவிகளுக்குத் தூது செல்வதுண்டு. கூறாதி - முன்னிலை யேவலொருமை வினைமுற்று; கூறு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, தகரம் - எழுத்துப்பேறு, இ - விகுதி, பைய - குறிப்பு வினையெச்சம். அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.
(இ-ள்.) சாய் - கோரைப்புல்லை, பறிக்க - பிடுங்க, நீர் திகழும் - நீர் விளங்குகின்ற, தண் வயல் - குளிர்ச்சியாகிய வயல் சூழ்ந்த, ஊரன் மீது - ஊர்களையுடையவனான நாயகன் மீது, ஈ பறக்க - ஈயானத் பறக்கையில், நொந்தேனும் யானே - சகியாமல் மனவருத்தப்பட்டவளும் யானே, தீ பறக்க - தழல் வீசும்படி, முலை தாக்கி - (வேசியர்) முலைகளினால் தாக்கி, பொருத - போர்செய்த [கிரீடை செய்த], தண் சாந்து - குளிர்ச்சியான சந்தனக் கலவையை, அணி அகலம் - தரித்த மார்பை, நோக்கி இருந்தேனும் யான் - கண்டிருந்தவளும் யானே, எ-று.
கூடியிருக்கையில் என் நாயகன் மேல் ஈ பறக்கவும் பார்த்துச் சகியாமல் அன்பு கொண்டிருந்தவளும் நான், வேசிமார் தீப்பறக்கும்படி அழுத்தமாய் முலைகளால் தாக்கி கிரீடை செய்து சந்தனக்குழம்பு அப்பிய மார்பைக் கண்டு நொந்து நிற்பவளும் யான் என ஒரு குலமகள் கூறியது. இதனால் குலமகளிர் தமது நாயகர் பரத்தையரைக் கூடின காலத்தும் தாமவரைத் திரஸ்காரஞ் செய்யாது இருக்க வேண்டுமென்று கூறியதாயிற்று.
பறிக்க - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். மன - அசை; மிகவும், எனவும் சொல்லலாம். பொருத - பொரு - பகுதி, த - இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி; இறந்தகாலப் பெயரெச்சம். நொந்தேன், இருந்தேன் - தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்கள். உம் - சிறப்போடு எண்ணுப் பொருளையும் தரும். ஏ - பிரிநிலை.
390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.
(இ-ள்.) பாண - பாணனே!, அரும்பு அவிழ் - பூவரும்புகள் மலரும்படியான, தாரினான் - மாலையணிந்த எனது நாயகன், எம் அருளும் என்று - எமக்குக் கிருபை செய்வானென்று, பெரு பொய் - பெரிய பொய்யான வார்த்தைகளை, உரையாதி - சொல்லாதே; (ஏனெனில்) ஊரற்கு - உரையாளும் அவனுக்கு, கரும்பின் கடை கண் அனையம் நாம் - நாங்கள் கரும்பின் கடைசிக் கணுவை யொத்திருக்கின்றோம்; அதனால் - (இப்பேச்சை) இடை கண் அனையார்க்கு - (அக்கரும்பின்) இடையிலுள்ள கணுக்களையொத்த பரத்தையர்க்கு, உரை - சொல்லு, எ-று.
கரும்பின் கடைக்கணுவைப் போல் உருசி குறைந்துள்ள நம்மிடத்தில் அருள்செய்து நாயகன் வருவானென்று பாணனே நீ பொய்யுரை சொல்லாதே; அக்கரும்பின் இடைக் கணுக்களைப் போல அவருக்கு ருசியுள்ள பரத்தையரிடம் இப்பேச்சைச் சொல்லு எனத் தலைவி கூறியது.
எம் அருளும் - நான்காம் வேற்றுமைத் தொகை. உரை யாதி - முன்னிலை யேவல் வினைமுற்று. அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
