யாக்கை நிலையாமை

bookmark

துறவியல்

 

 [அஃதாவது, உடம்பு நிலையற்றது என்பதைக் குறித்துச் சொல்லுவது]

 

21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
     தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
     துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
     எஞ்சினார் இவ்வுலகத் தில்.

     (இ-ள்.) மலைமிசை தோன்றும் - மலையின் மேல் காணப்படுகிற, மதியம் போல் - சந்திரனைப் போல, யானை தலைமிசை கொண்ட குடையர் - யானையின் தலைமேல் வைத்த குடையையுடைய அரசரும், நிலமிசை - பூமியில், துஞ்சினார் என்று - இறந்தார்களென்று, எடுத்து தூற்றப் பட்டார் அல்லால் - பலரறியக் காட்டி இகழப்பட்டவர்களே யல்லாமல், எஞ்சினார் - (அவ்விகழ்ச்சிக்கு உட்படாமல்) மிகுந்தவர்கள், இ உலகத்து இல் - இவ்வுலகத்தில் இல்லை, எ-று.

     மகா ராஜாதிராஜாக்களும் இறந்தார்களென்று இகழப்படுதலால் யாக்கை நிலையற்றது என்பது கருத்து.

     குடையார் - இங்கே உயர்வு சிறப்பும்மை, விகாரத்தால் தொக்கது. மதியம் - அம் - சாரியை. துஞ்சினார் - இது இடக்கரடக்கல்.

 

22. வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
     வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
     உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
     நிலவார் நிலமிசை மேல்.

     (இ-ள்.) வாழ்நாட்கு - உயிரோடிருக்குங்காலத்துக்கு, அலகு ஆய் - கணக்காய், வயங்கு ஒளி மண்டிலம் - விளங்குகிற சூரியன், வீழ்நாள் படாது - பிரயோசனமில்லாத காலம் உண்டாகாமல், எழுதலால் - உதயமாதலால், வாழ்நாள் உலவா முன் - ஆயுசு கெடாமுன், ஒப்புரவு ஆற்றுமின் - கடமையான தர்மங்களைச் செய்யுங்கள்; யாரும் எப்படிப்பட்டவரும், நிலமிசைமேல் - பூமியின் மேல், நிலவார் - நிலைபெறார், எ-று.

     சூரியன் உதயமாவது ஒருநாள் கழிந்தது இரண்டு நாள் கழிந்தன என்று ஆயுசுக்கு அளவிடுவதா யிருத்தலால் ஆயுசு கழிந்து போவதற்கு முன்னே தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

     மண்டலம் - [வட்டம்]. இவ்வடசொல் தமிழின் மண்டிலம் என விகாரப்பட்டு வழங்குகின்றது. படாஅது - இவ்வளபெடை மறை விகுதி. நிலவார் என்பதில் நில - பகுதி. ஒப்புரவு = பெரியோர் ஒப்பும்படியான பலம்; இது உபகாரத்திற்கு வழங்குகின்றது. மிசை மேல் - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா" [பொது. சூ. 47]

 

23. மன்றம் கறங்க மணப்பறை யாயின
     அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
     ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
     வலிக்குமாம் மாண்டார் மனம்.

     (இ-ள்.) மன்றம் கறங்க - சபையெல்லாம் முழங்க, மணம்பறை ஆயின - கலியாண வாத்தியமாய் நின்றவை, பின்றை அன்று - பின்பு அன்றைக்கே, ஆங்கே - அவ்விடத்திலேயே, அவற்கு - அந்த மனிதனுக்கு, பிணம் பறை ஆய் - பிணவாத்தியமாய், ஒலித்தலும் உண்டாம் என்று - ஓசைப்படுவதும் உண்டு என்று நினைத்து, மாண்டார் மனம் - மாட்சிமைப்பட்டவர்களுடைய மனமானது, உய்ந்து போம் ஆறே (பிறவித் துயருக்குத்) தப்பிப் போம்படியான வழியை, வலிக்கும் உறுதியாய்ப் பற்றியிருக்கும். எ-று.

     ஒருவருக்குக் கல்லியாணத்துக்கு வைத்த வாத்தியமே உடனே அவர் சாவுக்கு அடிக்கும் வாத்தியம் ஆகும்படியான நிலையுள்ளது இவ்வுடம்பு. ஆனதால் இப்படிப்பட்ட உடம்பைப் பராமரியாமல் தருமஞ் செய்ய முயலுவார் பெரியோர் என்பது கருத்து.

     ஒலித்தலும் - உம்மை எதிர்மறையில் வந்தது, என்று - இவ்விடைச் சொல்லோடு நினைத்து என்னும் ஒரு சொல் கூட்டிக் கொள்க. வலிக்குமாம் - ஆம் - அசை. மாண்டார் - மாண் - பண்படி, பகுதி, ட் - இடைநிலை, ஆர் - விகுதி. இறந்தார் என்னும் பொருள்படும்போது மாள் - பகுதி.

 

24. சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
     நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
     முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
     செத்தாரைச் சாவார் சுமந்து.

     (இ-ள்.) சென்று - (செத்தவிடத்திற்குப்) போய், ஒரு கால் எறிப் (பறையினை) - பிணவாத்தியத்தை ஒரு தரம் கொட்டுவார்கள்; சிறுவரை நின்று - (பின்) சிறிது காலம் சும்மாவிருந்து, பறையினை எறிப - சாப்பறை யடிப்பார்கள்; முக்காலைக் கொட்டினுள் - மூன்றாங் காலம் வாத்தியத்தைக் கொட்டுவதற்குள்ளே, சாவார் - சாகப்போகிறவர்கள், செத்தாரை - செத்துப் போனவர்களை, மூடி சுமந்து - வஸ்திரத்தினால் மறைத்துத் தூக்கிக் கொண்டு, தீ கொண்டு எழுவர் - நெருப்பை யெடுத்துக் கொண்டு போவார்கள்; நன்றே காண் - நன்றாய் யோசித்துப் பார், எ-று.

     மூன்றாங் கொட்டுக்குள்ளே செத்தவரைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகிறார்களாதலால் யாக்கை நிலையற்றது என்பதாம்.

     "சாவார்" என்பது, இன்றைக்கொருவரைச் சுடுகாட்டில் விட்டு வந்தவர் நாளைக்குச் செத்துப் போவார் என்பது தோன்றுதற்கு. சென்றே நின்றே - ஏகாரங்கள் - அசை. எறிப - "அர் ஆர் பவ்வூ ரகரமாரீற்ற" என்றதனால் 'ப' விகுதி பலர் பாலுக்கு வந்தது, [வினை. சூ. 8] "பாந்தம் செலவோடு வரவும்" என்றதனால், [பத. சூ. 18.] இங்கே எதிர்காலங் காட்டியது.

 

25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
     பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
     உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
     டொண்டொண்டொ டென்னும் பறை.

     (இ-ள்.) கணம் கொண்டு - கூட்டங்கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கலீரென்று கூவி அழ, பிணம் கொண்டு - பிணத்தைத் தூக்கிக் கொண்டு, காட்டு உய்ப்பார் - சுடுகாட்டில் இடுபவரை, கண்டும் - பார்த்து, மணம் கொண்டு - கல்லியாணஞ் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் - இவ்வுலகத்தில் நிச்சயமாய்ச் சுகமுண்டு சுகமுண்டு சுகமுண்டு என்கிற, உணர்வினான் - அறிவுல்லவனைக் குறித்து, தொண் தொண் தொண் என்னும் பறை - தொண் தொண் தொண் என்கிற வகையாய் ஒலிக்கிற பிணப்பறையானது, சாற்றும் - (இல்வாழ்க்கை இவ்வகையது என்று) சொல்லும், எ-று. ஏகாரம் - அசை, பிரசித்தத்தைக் காட்டியது என்றுஞ் சொல்லலாம்.

     இறந்து சுடுகாடு சேர்பவரைப் பார்த்தும் கல்லியாணஞ் செய்து கொண்டு நான் சுகமே வாழ்வேன் என்று நினைக்கிற மூடனுக்குச் சரீரம் நிலையுள்ளதென்று நினையாதே என்ப பிணப்பறை தன் ஒலியால் தெரிவிக்கின்றது என்றால் நாளைக்கு நமக்கும் இதுதான் கதியென்று அறிவு மூட்டுகின்றது என்பது கருத்து.

     'கல்' என்பது அழும் ஓசையின் குறிப்பு. உய்ப்பார்க்கண்டு - 'இயல்பின்விகாரமும்' என்கிற [உருபு. சூ. 16] விதியால் வலி மிகுந்தது. உண்டு உண்டு உண்டு என்னும் அடுக்கு நிச்சயமென்கிற பொருளில் வந்தது. [பொது. சூ. 44] தொண் தொண் தொண் என்பது ஒலிக்குறிப்பு. பறைசாற்றும் என்பது [பொது. 49ம்] சூத்திரத்தின் விதியால் கருவியைக் கர்த்தா போல் சொன்னது.

 

26. நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
     பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
     தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
     கூத்தன் புறப்பட்டக் கால்.

     (இ-ள்.) தோல் பையுள் நின்று - தோலாற் செய்த பையாகிய உடம்பிலிருந்து, தொழில் அற செய்து - (தான் செய்ய விதித்த) தொழில்களைப் பூரணமாகச் செய்து, ஊட்டும் கூத்தன் - (அப்பயனைத் தன்னை) அனுபவிக்கச் செய்கிற கூத்தாடியாகிய ஆத்துமா, புறப்பட்டக்கால் - (அதைவிட்டு) அப்புறஞ் சென்றால், (அவ்வுடலை) நார் தொடுத்து ஈர்க்கில் என் - கயிற்றாற் கட்டி யிழுத்தாலென்ன?, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகச் சுத்தஞ் செய்து அடக்கஞ் செய்தால் என்ன? பார்த்த உழி பெய்யில் என் - கண்டவிடத்தில் போட்டாலென்ன?, பல்லோர் பழிக்கில் என் - பலரும் பழித்தாலென்ன? [யாதும் இழிவுமில்லை சிறப்புமில்லை என்றபடி.], எ-று.

     இறந்த பின் உடலை மேன்மைபப்டுத்தினாலும் உயர்வில்லை; தாழ்மைப்படுத்தினாலும் குறையில்லை; ஆதலின் இறவாதிருக்கும் பொழுதே நற்காரியம் செய்ய வேண்டும் என்பது கருத்து.

     இப்பாட்டு யாக்கை நிலையாமையைக் குறிப்பிப்பதனால் இவ்வதிகாரத்தில் சேர்க்கப்பட்டது என்றறிக. உயிரோடிருக்கும் போது ஒரு காலத்துக்கொருகால் வெவ்வேறான செய்கைகளைச் செய்வதனால் ஆத்துமாவைக் 'கூத்தன்' என்றது.

     என் என்பது எவன் என்னும் குறிப்பு வினைமுற்று, இடைகுறைந்தது. பார்த்த உழி என்பது ஈறு தொக்கதாய்ப் பார்த்துழி என்று ஆயிற்று; உழி - இடம். பல்லோர் - ஈற்று அயல் ஆகாரம் ஓகாரமாயிற்று [பொது. சூ. 2].

 

27. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
     கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
     தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
     நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

     (இ-ள்.) படு மழை மொக்குளில் - வீழ்கின்ற மழை நீரினது குமிழிபோல், பல் காலும் தோன்றி - பல காலங்களிலும் உண்டாகி, கெடும் இது - நாசமாகும் படியானது, ஓர் யாக்கை என்று எண்ணி - ஒருவகைப் பொருளாகிய தேகம் என்று நினைத்து, தடுமாற்றம் தீர்ப்போம்யாம் - (இந்தச் சம்சாரத்தில்) தடுமாறுவதை நாம் போக்கக் கூடவோம், என்று உணரும் - என்று அறிந்து நிற்கிற, திண் அறிவாளரை - உறுதியான ஞானமுள்ள பெரியோர்களை, நீள் நிலத்தின்மேல் - இந்தப் பெரிய பூமியில், நேர்ப்பார் யார் - ஒத்திருப்பவர்கள் யார்? [ஒருவருமில்லை என்றபடி], எ-று.

     மழை நீர்க்குமிழிகள் போல நிலையற்ற உடம்பெடுத்துத் தடுமாறுவதை ஒழிக்க முயல்வார்கள் பெரியோர், நாமும் அப்படி முயல்வது நலம் என்பது கருத்து.

     படுதல் = வீழ்தல், படுமழை - வினைத்தொகை. மொக்குளின் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது.

 

28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
     யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
     மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
     நிலையாது நீத்து விடும்.

     இ-ள்.) யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்து ஆ- உறுதியை யுடையதாக, பெற்றவர் - அடைந்தவர், தாம் பெற்ற யாக்கையால் ஆய பய - தாம் அடைந்துள்ள தேகத்தினால் ஆகத்தக்க பிரயோஜனங்களை, கொள்க - கொள்ளக்கடவர், (ஏனெனில்) யாக்கை - தேகமானது, மலை ஆடு மஞ்சு போல் தோன்றி - மலையினிடத்திலே ஆடுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, நிலையாது - நிலைபெறாமல், நீத்துவிடும் (உயிரை) ஒழித்துவிடும், எ-று.

     மலைமேல் அசைந்து கொண்டிருக்கிற மேகத்தைப் போல உடம்பு நிலையற்றதாகையால் அது உறுதியாயிருக்கும் போதே நற்காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

     யாத்தல் = கட்டுதல், தோல் நரம்பு முதலியவைகளால் கட்டப்படுவதாகையால் யாக்கையெனச் சொல்லப்பட்டது; யா - பகுதி, கு - சாரியை, ஐ - விகுதி, ஆய - ஆகிய என்பதின் இடைக்குறை யென்பார்கள்; அல்லது ஆ - பகுதி, யகரம் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி மற்று, ஆங்கு, ஏ - இம்மூன்றும் அசை.

 

29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
     இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
     நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
     சென்றான் எனப்படுத லால்.

     (இ-ள்.) இன் இனி ஏ - இப்பொழுதே, (ஒருவன்) நின்றான் இருந்தான் கிடந்தான் - நின்று கொண்டிருந்தான் உட்கார்ந்தான் படுத்தான், தன் கேள் அலற சென்றான் - தன் பந்துக்கள் அலறி அழ இறந்தான், எனப்படுதலால் - என்று சொல்லப்படுவதனால், (உடம்பு) புல் நுனிமேல் - புல்லின் நுனியிலிருக்கிற, நீர் போல் - நீர்த்துளியைப் போல, நிலையாமை என்று எண்ணி - நிலைபெறாத தன்மையையுடையது என்று நினைத்து, இன் இனி ஏ - இப்பொழுதே, அறம் வினை செய்க - தர்ம காரியத்தைச் செய்யக்கடவர், எ-று.

     ஒருவன் ஒரே காலத்தில் நின்று கொண்டிருக்கக் கண்டேனென்றும் மற்றொருவன் உட்கார்ந்திருக்கக் கண்டேனென்றும் இன்னம் ஒருவன் படுத்திருக்கப் பார்த்தேனென்றும் கடைசியிலொருவன் அவன் இறந்து போனானென்றும் சொல்லும்படி மனிதனுடைய நிலையிருக்கிறதினால் தருமத்தைச் சீக்கிரத்தில் செய்ய வேண்டும் என்பது கருத்து.

     இன் இனி - இன் என்பது இக்காலம் என்பது தெரிவிக்கிற ஒருவகை இடைச்சொல். அது மிக என்னும் பொருளினால் அடுக்கி இன்னின் என்றாகி ஈற்றில் இகரச் சாரியை பெற்றது. அறம் வினை என்பதில் மகரங்கெட்டது. [மெய்யீறு. சூ. 16.], இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

 

30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
     வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
     சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
     யாக்கை தமர்க்கொழிய நீத்து.

     (இ-ள்.) மாந்தர்கள் - மனிதர்கள், கேளாதே வந்து - (வரட்டுமா என்று) கேளாமல் வந்து, கிளைகளாய் இல் தோன்றி - உறவினராய் தன் குடியிற் பிறந்து, வாளாதே - சொல்லாமலே, சேக்கை மரன் ஒழிய - தனக்கு வாசஸ்தானமாயிருந்த மரத்தை ஒழித்து, சேண் நீங்கு புள் போல - தூரத்தில் நீங்கிச் செல்லுகிற பட்சியைப் போல, தமர்க்கு - தம்மவர்களுக்கு, யாக்கை ஒழிய நீத்து - உடம்பை விட்டு விட்டு, வாளாதே போவர் - சொல்லாமல் போகின்றார்கள், எ-று.

     பறவைகள் தமது இச்சையின்படி மரங்களில் வந்து சேர்வதும் விட்டுப் போவதும் போல மனிதர் கர்மவசத்தினால் ஒரு குடியிற் பிறப்பதும் நீங்குவதுமா யிருப்பதுபோல் வந்து போகிறவரை உறவினரென்றெண்ணிப் பாடுபட்டு உழலாமல் தருமத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

     கேளாது, வாளாது - வினையெச்சங்கள். மரம் மரன் ஆனது போலி, [எழுத்து. சூ. 67.] நீத்து - நீ - பகுதி, த் - இடைநிலை, உ - விகுதி, தகரம் - சந்தி, ஆல் - அசை.