அறன் வலியுறுத்தல்
துறவியல்
[அதாவது தருமம் பொருள் இன்பங்களிலும் உறுதியுடைய தென்பதைக் குறிப்பது.]
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
(இ-ள்.) மேல் தவத்தால் - முன் ஜனனத்தில் செய்த நோன்புகளினால், தவம் செய்யாதார் - (பிற்பிறப்பில்) தவஞ் செய்யாதவர்கள், அகத்தாரே வாழ்வார் என்று - அகத்திலுள்ளவரே நன்மையடைவார் என்று நினைத்து, அண்ணாந்து நோக்கி -, தாம் புகப் பெற்றார் - தாங்கள் உள்ளே போகப் பெறாதவராகி, புறங்கடை பற்றி - தலை வாயிலைப் பிடித்துக் கொண்டு, மிக வருந்தியிருப்பார் - மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள், எ-று.
ஒரு தனவான் வீட்டில் சுபாசுபங்கள் நேர்ந்த போது யாசகர் பலர் உட்புகுந்திருக்க மற்றொரு யாசகன் உள்ளே போயிருப்பவர்கள் நல்ல பயனைப் பெறுவார்கள் ஆதலின் நாமும் உள்ளே செல்லக்கடவோம் என்று உள்ளே புகப் பார்க்க, வாசற் காப்போரால் தடையுற்று வாசற்படியைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான் என்பதாம்.
இது பூர்வஜனனத்தில் தருமஞ்செய்யாத கொடுமையால் வந்தது எனச் சொன்னதனால் தருமம் செய்வது இம்மை மறுமைகளுக்கு உறுதி என்றும், பொருள் இன்பங்கள் அப்படியல்லவென்றும் சொன்னதாயிற்று.
அகத்தாரே - இங்கு ஏகாரம் பிறர் வாழார் என்பதைக் குறித்ததினால் பிரிநிலை. அண்ணாந்து - அண்ணா - பகுதி. பெறா அர் - அளபெடை இசை நிறைக்க வந்தது. மூன்றாம் அடியில் தாம் ஏ இரண்டும் அசை. தவத்தால் தவஞ் செய்வதாவது முந்திய ஜனனத்தில் செய்த தவம் பிந்திய ஜனனத்தில் தவஞ் செய்வதற்குக் காரணமாய் சங்கிலிபோல் தொடர்ந்திருக்கும் தன்மை. தவத்தால் என்பதை செய்யாதார் என்பதின் பகுதியில் முடித்துக் கொள்க.
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
(இ-ள்.) ஆஆ - ஐயோ! நாம் ஆக்கம் நசை இ - நாம் செல்வத்தை விரும்பி, அறம் மறந்து - தருமத்தை மறந்து, போவாம் நாம் என்னா - நாம் இறந்து போவோம் என்று நினையாத, புலை நெஞ்சே - அற்பமான மனமே! ஓவாது - ஒழியாமல், நின்று - நிலைபெற்று, உஞற்றி வாழ்தி எனினும் - முயற்சி செய்து வாழ்வாயானாலும், நின் வாழ்நாட்கள் - உன்னுடைய ஆயுள் நாட்கள், சென்றன - ஒழிந்தன, செய்வது உரை - இனிச் செய்ய வேண்டியதைச் சொல்லு, எ-று.
நாம் ஆக்கம் நசைஇ ஆவாம் - செல்வத்தை விரும்பி விர்த்தியாவோம் (என்று எண்ணி), அறம் மறந்து போவோம் நாம் - தருமத்தை மறந்து போவோம் நாம், என்னா புலை நெஞ்சே - என்று எண்ணாத அற்ப மனமே!, எனவும் உரைக்கலாம்.
உள்ள காலமும் செல்வம் பெற்று வாழ்வதற்கே முயன்று தருமத்தைச் செய்யாதுவிட்டால் உன்வாழ்நாள் சீக்கிரம் ஒழிந்தபின் செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்பது கருத்து.
ஆஆ - இரக்கக் குறிப்பிடைச்சொல். ஆவாம், போவாம் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று; உளப்பாட்டில் வராமல் தனித்து வந்தன. ஆக்கம் - விர்த்தியாக்குதற்குக் காரணமாதலின் செல்வத்திற்குக் காரணப்பெயர். ஆக்கு - பிறவினைப்பகுதி. இதில் கு - பிற வினைவிகுதி, அம் - விகுதி, நசைஇ - நசைந்து என்பதின் விகாரம். ஓவாது - ஓ - அல்லது ஓவு - பகுதி.
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
(இ-ள்.) பேதை - புத்தியீனன், வினைப்பயன் வந்தக்கால் - தீவினைப்பயனாகி ஆபத்து நேர்ந்தால், வெய்ய உயிரா - கடுமையாக மூச்சுவிட்டு [பெருமூச்சுவிட்டு], மனத்தின் அழியும் - மனதிலே வருந்துவான்; அதனை நினைத்து - அத்தீவினைப் பயனை நினைத்து, தொல்லையது என்று - முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்ததென்று, உணர்வாரே - அறிந்த விவேகிகளே, தடுமாற்றத்து எல்லை - சம்சார துக்கத்தின் எல்லையை, இகந்து ஒருவுவார் - விட்டு நீங்குவார்கள், எ-று.
விவேகமில்லாதவர் சங்கடம் வந்த போது இது முற்பிறப்பின் வினையென்று எண்ணாமல் வருந்துவார்; அதை யறிந்தவரோ வருந்தமாட்டார் என்பது கருத்து.
இதனால் விவேகமும் தருமத்தின் பயன் என்று சொல்லியதாயிற்று.
வெய்ய - வெம்மையின் அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர்; வெய்யனவாகிய உயிர்ப்பு உயிர்த்து எனக்கொள்க. குறிப்புவினையெச்சமெனக் கொண்டு உயிரா என்னும் வினைக்கு உரி என்னவுமாம். உயிரா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். அழியுமாம் - ஆம் - அசை. தொல்லையது - தொல்லை என்னும் பண்பின்மேல் வந்த குறிப்பு வினைமுற்று; அ - சாரியை, து - விகுதி. உணர்வாரே ஏகாரம் பிரிநிலை. தடுமாறுதல் = வழிதெரியாமல் அங்கே இங்கே சுற்றுவது; பலபிறப்புப் பிறப்பதான சம்சாரத்துக்கு ஆகுபெயர்.
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
(இ-ள்.) அரு பெறல் யாக்கையை - அருமையான பெறுதலையுடைய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த பலத்தினால், பெரு பயனும் - பெரிய பிரயோஜனமான (தர்மத்தையும்), ஆற்ற கொள்க - மிகவுந் தேடிக்கொள்ள வேண்டும்; கரும்பு ஊர்ந்த சாறு போல் - கரும்பிலிருந்து உண்டான சாற்றைப்போல, சாலவும் பின் உதவி - (அத்தருமம்) மிகவும் பின்னுக்கு உதவியாயிருக்கும்; உடம்பு - திரேகமானது, அதன் கோது போல் போகும் - அக்கரும்பின் சக்கைபோல (உதவியில்லாமல்) போய்விடும், எ-று.
மக்களுடம்பைப் பெறுதல் அருமையானது; அதைப் புண்ணியத்தால் பெற்றபடியால் அதைக்கொண்டு தருமத்தைச் செய்யவேண்டும்; அத்தருமம் கருப்பஞ்சாற்றைப் போல் ஆத்துமாவின் அனுபவத்திற்கு உதவும், உடம்போ உதவாது என்பது கருத்து.
'அரும்பெறல்' என்பதை 'பெறல் அரு' என மாற்றியும் உரைக்கலாம். அற்ற - வினையெச்சம்; இங்கே வினையுரி. உதவி = உதவுவது, பெயர். ஏ - அசை.
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
(இ-ள்.) கரும்பு ஆட்டி - கரும்பை (ஆலையில்) சிதைத்து, கட்டி - (அச்சாற்றினாலாகிய) வெல்லக்கட்டியை, சிறுகாலை கொண்டார் - முற்காலத்தில் கொண்டவர்கள், துரும்பு எழுந்து வேங்கால் - அதன் சக்கை கிளம்பி வேகும்போது, ஆண்டு - அவ்விடத்தில், துயர் உழவார் - துன்பத்தால் வருந்தார்கள்; (அதுபோல்), வருந்தி - வருத்தப்பட்டு, உடம்பின் பயன் கொண்டார் - தேகத்தின் பிரயோசனத்தைக் கொண்டவர்கள் [தருமத்தைச் செய்து அதன் பயனைப் பெற்றவர்], கூற்றம் வருங்கால் - எமன் வரும்போது, பரிவது இலர் - துன்பப்படுவது இல்லையாவார், எ-று.
கரும்பின் சாற்றினால் ஆக வேண்டிய பயனைப் பெற்ற பின் அதன் துரும்பு வேகக்கண்டு துன்பம் அடையாததுபோல் தேகத்தின் பயனாகிய தருமத்தைச் சம்பாதித்த பின் மரணத்துக்குப் பயப்படார் விவேகிகள் என்பது கருத்து.
சிறுகாலை - இது அற்பகால மென்னும் பொருளை யுடைத்தாய் முற்காலத்தைக் குறிக்கின்றது. "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து." இலர் - சிறப்புக்குறிப்பு வினைமுற்று. பரிவது அதற்குச் செயப்படுபொருள். இல்லை என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை நீக்கும்போது செயப்படுபொருள் குன்றாவினையாகவும் பொருளையே நீக்கும்போது செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் வழங்கும். உதாரணம்: 'குடம் நீரில்லாது' - செயப்படு பொருள் குன்றாவினை; 'குடமில்லை' - செயப்படு பொருள் குன்றியவினை.
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
(இ-ள்.) இன்று கொல் அன்று கொல் என்று கொல் - இன்றைக்கோ அன்றைக்கோ என்றைக்கோ, என்னாது - என்று நினையாமல், கூற்றம் - எமன், பின்றையே நின்றது என்று எண்ணி - பின் புறத்திலேயே நிற்கின்றது என்று நினைத்து, தீயவை ஒருவுமின் - தீமையான காரியங்களை விட்டு விடுங்கள்; ஒல்லும் வகையான் - கூடிய விதத்தில், மாண்டார் அறம் - மாட்சிமைப் பட்டவர்களுடைய தர்மத்தை, மருவுமின் - சேருங்கள், எ-று.
நம்முடைய ஆயுள் சதமல்லவென்று நினைத்துப் பாவங்களைச் செய்யாமல் புண்ணியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
கொல் - ஐயத்தில் வந்தது. [இடை. சூ. 46.] பின்றை - ஐ - சாரியை, [உயிரீற்று. சூ. 35.] மாண்டார்களுடைய அறமாவது அவர்கள் நூல்களில் சொல்லியதும் அவர் ஆசரித்ததுமாம்.
37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
(இ-ள்.) மக்களால் ஆய - மனிததேகங்களால் செய்யத்தக்க, பெரும் பயனும் - பெருமையாகிய பயன்களும், ஆயுங்கால் - ஆராயுமிடத்து, எத்துணையும் - எவ்வளவினும், ஆற்றபல ஆனால் - மிகவும் அநேகங்கள் ஆதலினாலே, தொக்க உடம்பிற்கே - (நரம்பு தசை முதலியவை) சேர்ந்த உடம்புக்காக்வே, ஒப்புரவு செய்து ஒழுகாது உபயோகமான காரியங்களைச் செய்து நடவாமல், உம்பர் கிடந்து - சுவர்க்கத்திலிருந்து, உண்ணப் பண்ணப்படும் - போகங்களை யனுபவிக்க (அறங்களைச்) செய்யவேண்டும், எ-று.
மனிதர் உடம்பினால் செய்ய வேண்டிய நற்காரியங்கள் பலவாயிருக்க அசுத்தமான தேகத்துக்கே வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிராமல் சொர்க்க அனுபவத்திற்கு ஏதுவான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
மக்கள் என்பது மனித உடம்பை. தொக்க - தொகு - பகுதி, அகரம் - பெயரெச்ச விகுதி, ககரம் இரட்டி இறந்தகாலம் காட்டியது.
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
(இ-ள்.) உறக்கும் துணையது - கிள்ளி எடுக்கும் அளவுள்ளதான, ஓர் ஆலம் வித்து - ஒரு ஆலமரத்தின் விதை, ஈண்டி - (கிளைகள்) நெருங்கி, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழலைத் தருவது போல, அறம் பயனும் - தருமப் பிரயோஜனமும், சிறிது ஆயினும் - அற்பமானாலும், தக்கார் கைபட்டக்கால் - யோக்கியர் கையில் சேர்ந்தால், வான் சிறிது ஆ - ஆகாயம் அற்பமாகும்படி, போர்த்துவிடும் - மூடிவிடும், எ-று.
தருமஞ் செய்வதையும் யோக்கியர்கள் திறத்திலே செய்தால் அது அற்பமானாலும் ஆலம்விதை பெருகிப் பெரிய மரமாவது போல மிகவும் பெரிதாம் என்பது கருத்து.
வான் சிறிதா என்பதற்கு வானினும் பெரிதாக என்றபடி.
பயந்தாங்கு - பயந்த என்பது அசுர ஈறு தொகுத்தலால் வந்ததென்றும், பயந்தால் என்னும் வினையெச்சம் பயந்து எனத் திரிந்ததென்றும் இருவகையில் கொள்ளலாம். அறப்பயனும் - உம்மை எச்சப்பொருளில் வந்தது. ஆயினும் - இழிபு சிறப்பும்மை.
39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
(இ-ள்.) வைகலும் - தினந்தோறும், வைகல் - நாட்கழிவை, தம் வாழ் நாள்மேல் - தமது ஆயுசில், வைகுதல் - வைத்து - செல்லுதலாக வைத்து, வைகலை உணராதார் - நாட்கழிவை யறியாதவர்கள், வைகலும் - தினந்தோறும் வைகல் வரக்கண்டும் - நாட்கழிவு வரப்பார்த்தும், அஃது உணரார் - அதின் உண்மையை அறியாதவராகி, வைகலும் - தினந்தோறும், வைகலை - ஆயுள் கழிதலை, வைகும் என்று - இருக்கிறதென நினைத்து, இன்பு உறுவர் - சந்தோஷப்படுவார்கள், எ-று.
தினம் நாள் கழிந்து வருவது தமது ஆயுள் கழிவதாக நினையாமல் அது நிற்பதாகவே நினைத்துச் சந்தோஷப்படுவது மூடத்தனம்; தனது மேல் கதிக்கு வேண்டிய நற்காரியங்களைச் செய்து சந்தோஷித்தல் புத்தி என்பது கருத்து.
இங்கே வைகல் என்றது நாள் கழிவுக்கு ஏதுவான சூரியவுதயாஸ்தமயங்கள் எனக்கொள்க. இதனால் தனது ஆயுள் கழிவதன் முன்னே தருமங்களைச் செய்வது அவசியமென அறனை வலியுறுத்தியதாயிற்று.
வைகலும் - முற்றும்மை. கண்டும் - சிறப்பும்மை. உணரார் - முற்றெச்சம். வாழ்நாள் மேல் - ஏழாம் வேற்றுமை. இது முன் வந்த சொல்லும் பொருளும் மறுத்தும் வருவதனால் "இருமைப்பின் வருநிலை" என்னும் அலங்காரமாம். சூத்திரம் - "முன்வருஞ் சொல்லும் பொருளும் ப்லவயின், பின்வருமென்னிற் பின்வருநிலையே" - தண்டியலங்காரம்.
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
(இ-ள்.) ஈநத்தால் - இழிவான காரியத்தால், ஊட்டியக் கண்ணும் - (சோறு முதலியவற்றை) அனுபவிக்கச் செய்தும், இவ்வுடம்பு - இந்தத் தேகம், உறுதிசேர்ந்து - உறுதிப்பட்டு, நீட்டித்து நிற்கும் எனின் - வெகுகாலம் நிலைத்திருக்குமானால், மாநம் அரு கலம் நீக்கி - மானமென்னும் அருமையாகிய ஆபரணத்தைத் தள்ளி, இரவு என்னும் - இரப்பது என்று சொல்லுகிற, ஈந இளிவினால் - தாழ்மையான அவமானத்தால், வாழ்வேன்மன் - பெரும்பாலும் வாழ்வேன், எ-று.
எவ்வளவு காப்பாற்றினாலும் உடம்பு நீடித்து நிற்பதில்லை யாதலால், அதற்காக இழிவான காரியங்களைச் செய்தல் வீண். நிலையான ஆத்துமாவுக்காக வேண்டிய காரியக்களைச் செய்வது நலம் என்பது கருத்து.
மாநமாவது தன் பெருமையைக் காப்பற்றல். ஈநவிளி வினால் = ஈநமாகிய சாவினால் எனவும் உரைக்கலாம்; ஈநகாரியஞ் செய்வது சாவுக்குச் சமானமென்பது கருத்து; சாவில் ஈநமாவது பலர் பழிக்கும்படியான நிலை. மன் - அசையும் ஆம். பெரும்பாலும் வாழ்வேனென்பதனால் அப்படி வாழ்தலும் கூடாத காரியம் என்றதாயிற்று. ஊட்டியக் கண்ணும் - இது எதிர்கால வினையெச்சம்; கண் - விகுதி, உம் - இழிவு சிறப்பு. நீட்டித்து - டகரம் - விரித்தல் விகாரம்.
