நன்றியில் செல்வம்

bookmark

இன்பவியல்

 

 [அதாவது நன்மையில்லாத சம்பத்து; பயனில்லாமலும் கேடு தருவதுமான செல்வ மென்றபடி.]

 

261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
     பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
     பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
     கருதுங் கடப்பாட்ட தன்று.

     (இ-ள்.) அருகலது ஆகி - கிட்டினதாகி, பல பழுத்தக் கண்ணும் - அநேகமாய்ப் பழுத்திருந்தாலும், பொரி தாள் விளவினை - பொரிந்த அரையையுடைய விளாமரத்தை, வாவல் - வௌவால்கள், குறுகா - சேரமாட்டா; பெரிது அணிய ராயினும் - மிகவும் சமீபித்தவரா யிருந்தாலும், பீடு இலார் செல்வம் - பெருமையில்லாதவர்களுடைய செல்வமானது, கருதும் கடப்பாட்டது அன்று - நினைக்கும் படியான முறைமையுள்ள தன்று, எ-று.

     விளாமரத்திற்குப் பெருமையில்லை யென்பதன்று; வௌவாலுக்கு அதனா லுபயோகமில்லை யென்பது கருத்து.

     பாடு என்பது சாதாரணமான ஜனங்களுக்கு உபயோகமா யிருத்தலெனக் கொள்க. அருகலது - குறிப்பு வினையாலணையும் பெயர். பழுத்தக்கண் - வினையெச்சம்.

 

262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
     கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
     செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
     நள்ளார் அறிவுடை யார்.

     (இ-ள்.) அள்ளி கொள்வ அன்ன - அள்ளி எடுக்கலாம் படியான, குறு முகிழ ஆயினும் - சிறிய முகிழ்களை உடையவையானாலும், சூடும் பூ அன்மையால் - முடிக்கத்தக்க பூ அல்லாமையால், கள்ளி மேல் கை நீட்டார் - கள்ளி மரத்தின் மேல் கைபோட மாட்டார்கள் (மனிதர்), பெரிது செல்வம் உடைய ராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், கீழ்களை - கீழ்மக்களை, நள்ளார் - (அறிவுடையார்) விரும்ப மாட்டார்கள்; எ-று.

     அதிக அழகான பொருள் மேல் அள்ளி எடுத்துக் கொள்ளும் படியான ஆசையுண்டா யிருக்கும் ஆதலால் அள்ளிக் கொள்வன்ன என்றது. அள்ளிக் கொள்வ என்பதில் ஈற்றகரம் தொகுத்தல். அன்ன - அத்தன்மையுடையன.

 

263. மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
     வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
     செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
     நல்குவார் கட்டே நசை.

     (இ-ள்.) மல்கு திரைய - மிகுந்த அலைகளையுடைய, கடல் கோடு இருப்பினும் - சமுத்திரக் கரையில் இருந்தாலும், வல் ஊற்று - வலிமையான ஊறுதலையுடைத்தான, உவர் இல் கிணற்றின் கண் - உப்பில்லாத கிணற்றிலே, சென்று உண்பர் - போய் (நீரை) உண்பார்கள்; பெரிது செல்வம் உடையராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், (ஈயாதாரை விட்டு) சேண் சென்று - தூரத்தில் போய், நல்குவார் கட்டே - கொடுப்பவரிடத்துள்ளதே, நசை - ஆசை, எ-று.

     ஆசை - எழுவாய், நல்குவார்கட்டே - பயனிலை. ஊற்றுக்கு வலிமையாவது சிறிது சிறிதாயூறுவது, உவரில் கிணறு என்பதில், [மெய்புணர். சூ. 30ம் விதியால்] லகரம் றகரமாய்த் திரியவில்லை. நல்குவார்கட்டு - குறிப்பு முற்று. நல்குவார்கண் - பகுதி, டு - ஒன்றன் விகுதி, ணகரம் டகரமானது விகாரம். திரைய - குறிப்புப் பெயரெச்சம்.

 

264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
     உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
     வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
     பட்டும் துகிலும் உடுத்து.

     (இ-ள்.) புணர்கடல் சூழ் வையத்து - சேர்ந்த சமுத்திரஞ் சூழ்ந்த பூமியில், புண்ணியம் வேறே - புண்ணியமானது (யோக்கியதை யிருக்குமிடத்தைக் காட்டிலும்) வேறாகவே இருக்கிறது; உணர்வு உடையார் இருப்ப - கல்வியறிவுள்ளவர்கள் (ஒன்றுமில்லாது) இருக்க, உணர்வு இலா - அறிவில்லாத, வட்டும் வழுதுணையும் போல்வாரும் - பனவட்டையும் வழுதுணங்காயையும் ஒத்த அற்பரும், பட்டும் துகிலும் - பட்டுவஸ்திரத்தையும் வேறு நல்ல வஸ்திரத்தையும், உடுத்து வாழ்வரே - உடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்களே, எ-று.

     வட்டும் வழுதுணையும் எளிதில் கிடைக்கத்தக்க சாதாரணப் பொருள்கள்; இவை போன்ற அற்பர் செல்வராயிருக்க அறிவுள்ளவரோ தரித்திரராயிருப்பர் என்பது கருத்து.

     வாழ்வரே - இந்த ஏகாரம் பிரசித்தத்தைக் காட்டுகிறது. முந்திய ஏகாரம் தேற்றத்தில் வந்தது. ஓ - அதிசய இரக்கச் சொல். உணர்வது - அது அசை.

 

265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
     கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
     வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
     நினைப்ப வருவதொன் றில்.

     (இ-ள்.) வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களை யுடையவளே!, நயவர் நல்லார் - நீதிமான்களான நல்லவர், இருப்ப - (தரித்திரரா) யிருக்க, நயம் இலா கல்லார்க்கு - நீதியில்லாத மூடருக்கு, ஒன்று ஆகிய காரணம் - ஒரு செல்வப் பொருளுண்டாகிய காரணமானது, தொல்லை வினைப்பயன் அல்லது - பழமையான வினையின் பயனே யல்லாமல், நினைப்ப - யோசிக்க, வருவது ஒன்று - தோன்றத் தக்க வேறொன்றும், இல் - இல்லை, எ - று. [நயம் - பெருமையுமாம்.]

     முற்பாட்டில் கூறியபடி மூடர் செல்வம் பெற்று வாழ்தற்கு அவருடைய பூர்வ ஜனன புண்ணியமே யல்லது வேறில்லை யென நியாய முறுதிப் படுத்தியது.

 

266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
     நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
     புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
     நன்மக்கள் பக்கம் துறந்து.

     (இ-ள்.) நாறா தகடே போல் - பரிமளிக்காத புற விதழைப் போலே, நல் மலர்மேல் பொன் பாவாய் - நல்ல தாமரை மலரின் மேலிருக்கிற பொன்னின் பதுமை போன்ற திருமகளே!, நீ-, பொன்போலும் நல் மக்கள் பக்கம் துறந்து - பொன்னைப் போன்ற யோக்கியரான மனிதரிடத்து விட்டு, வேறு ஆய - (நன்மக்களில்) வேறாயிருக்கிற, புல் மக்கள் பக்கம் - கீழான ஜனங்களிடம், புகுவாய் - சேருகிறாய், (ஆதலால்) நிலத்து - பூமியில், நீறு ஆய் விளி - சாம்பலாகும்படி சாகக்கடவை, எ-று.

     சுகந்தமில்லாமலே பூவிலிருக்கும் புறவிதழ்போலே நீயும் சற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய் என இகழ்ந்தபடி. இதுவே பொற்பாவாய் என்பதனால் திடப்படுத்தப்பட்டது. நாறா தகடு - பரிமளியாத பொற்றகடு என்னவுமாம். அரோ - அசை.

 

267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
     பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
     வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
     நயவாது நிற்கு நிலை.

     (இ-ள்.) நயவார்கண் நல்குரவு - நயமுடையவரிடத்துள்ள தரித்திரமானது, நாண் இன்றுகொல் - வெட்கமில்லாததோ, பயவார் கண் செல்வம் - உபயோகியாதவரிடத்துள்ள சம்பத்தானது, பரம்ப - பரவுதற்கு (ஆன), பயின்கொல் - பிசினோ, வேல் கண்ணாய் - வேல் போன்ற கண்ணுள்ளவளே!, இவ்விரண்டும் - (யோக்கியரிடத்து வறுமையும் அயோக்கியரிடத்துச் செல்வமுமாகிய) இரண்டும், ஆங்கே - அவ்வவ்விடத்திலே, நயவாது நிற்கும் நிலை - மேன்மைப்படாமல் நிற்கின்ற நிலையை, வியவாய் காண் - ஆச்சரியப்பட்டுப்பார், எ-று.

     பரம்புதலாவது நாற்புறமு மொட்டும்படி வியாபித்தல். நீங்காது நிற்பது பற்றி பயின்கொல் என்னப்பட்டது. 'பறம்ப' எனப் பாடங்கொண்டு உறைகாரர் எனப் பொருள் கொண்டனர் சிலர்; அதற்குச் சந்தி யசையாதென அறிக.

 

268. வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
     கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
     காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
     மேலாறு பாய இருந்து.

     (இ-ள்.) வலவைகள் அல்லாதார் - பேய்த்தனமுடையராகாதவர் [யோக்கியர்], கால் ஆறு சென்று - தூரவழிபோய், கலவைகள் உண்டு - பல கலப்பான உணவைப் புசித்து, கழிப்பர் - காலங் கழிப்பார்கள்; வலவைகள் - பேய்த்தனமுள்ளவர்களோ, கால் ஆறுஞ் செல்லார் - தூரதேசமும் போகாதவர்களாய், மேல் ஆறு பாய - தம் மேல் பாலாறு நெய்யாறு பாயும்படி, இருந்து - தம்மிடத்திலேயே இருந்து, கருனையால் - பொரிக்கறியோடு கூட, துய்ப்ப - (உணவுகளை) உண்பார்கள், எ-று.

     இவ்வாறு இப்பாட்டிலும் முற்பாட்டுகளிலும் தக்கவர் வருந்த அவர்க்குப் பயன்படாமல் தகாதவரிடத் திருக்கின்ற செல்வம் நன்றியில் செல்வமென்று கூறியதாயிற்று. வலவைகள் இடாகினி காளிகளுக்கு ஊழியஞ் செய்பவராதலால் பேயெனக் கொண்டு அத்திறமுடையாரென உரைக்கப்பட்டது. அத்திறமாவது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலுமாம். கால் ஆறு - காலாற் செல்லத்தக்க ஆறு. கலவையாவது - பலரிடம் பெற்ற சோறாதலின் ஒருவ்கைப்படாதிருப்பது.

 

269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
     மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
     வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
     வண்மையும் அன்ன தகைத்து.

     (இ-ள்.) பொன் நிறம் செம் நெல் - பொன் போன்ற வர்ணமுள்ள நல்லநெற்கள், பொதியொடு - பொதிந்திருக்குங் கதிர்களோடு, பீள் - பயிரின் கருவானது, வாட - வாடிக் கொண்டிருக்க, மின் ஒளிர் வானம் - மின்னல் விளங்காநின்ற மேகமானது, கடலுள்ளும் - சமுத்திரத்திலேயும், கான்று உகுக்கும் - (தண்ணீரை) கக்கி உதிர்க்கும்; வெண்மை உடையார் - அறிவின்மை செல்வத்தைப் பொருந்தினால், வண்மையும் - (அவர்) கொடையும், அன்ன தகைத்து - அப்படிப்பட்ட தன்மையுள்ளது, எ-று.

     நல்ல நெற்பயிர் வாடிக் கொண்டிருக்க அங்கே பெய்யாமல் உபயோகமற்ற கடலிலே மேகம் மழை பொழிவது போல் புத்தியீனர் செல்வத்தைச் சற்பாத்திரத்தி லுபயோகப்படுத்தாமல் அபாத்திரத்தில் உபயோகப்படுத்துவர் என்பது கருத்து.

     கடலுள்ளு மென்பதில் உம்மை இழிவு சிறப்பு; அசையெனக் கொள்ளல் நலம்.

 

270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
     ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
     நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
     நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

     (இ-ள்.) உணர்வு இலார் - பகுத்தறிவில்லாதவர்கள், ஓதியும் ஓதார் - படித்தும் படியாதவர்களே; உணர்வு உடையார் - ஓதாதும் - ஓதாமலும், ஓதி அனையர் - படித்தவர்க்குச் சமானமானவர்களாவர்; (அதுபோல்) தூய்து ஆக - சுத்தமாக, [மிகவும்], நல்கூர்ந்தும் - வறுமையுற்றும், இரவாதார் - யாசியாதவர்கள், செல்வர் - சம்பத் துள்ளவராவர்; செல்வரும் - செல்வமுடையோரும், ஈயார் எனின் - (யோக்கியருக்கு) கொடாமற் போனால், நல்கூர்ந்தார் - தரித்திரப் பட்டவர்களே, எ-று.

     ஓதி - ஓதுகிறவன், இகர விகுதி கர்த்தாப் பொருளில் வந்தது, கூத்தாடி, கடலோடி என்பவை போல். தூயது - தூய்மையை உடையது, குறிப்பு முற்று; ஈண்டு ஆக என்பதோடு ஒன்றி வினையெச்சமாய் "மிக" என்னும் பொருளாய் வினையுரியாயிற்றென அறிக. பிறர் நல்குதலை ஊர்தல் [கொண்டு செல்லல்] - நல்கூர்தல், நல்குதல் - கொடுத்தல்.