ஈயாமை
துன்பியல்
[அஃதாவது பிறர்க்குக் கொடாமையால் வருமிழுக்கு.]
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
(இ-ள்.) நட்டார்க்கும் - நேசித்தவர்க்கும், நள்ளாதவர்க்கும் - நேசியாதவர்களுக்கும், உள வரையால் - தமக்கு உள்ள அளவினால், அட்டது பாத்து உண்டல் - சமைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்பது, அட்டு உண்டல் - சமைத்துண்பதாம்; அடைதது இருந்து - (வருகிறவர்க்குக் கதவை) மூடியிருந்து, அட்டது உண்டு ஒழுகும் - சமைத்ததைத் (தாம்) புசித்து நடக்கிற, ஆவது இல் மாக்களுக்கு - குணமில்லாத மனிதருக்கு, ஆண்டை கதவு - மேலுலகத்தின் கதவானது, அடைக்கும் - மூடப்படும், எ-று. ஆம் - அசை.
[பொது. சூ. 49] விதியால் அடைக்கும் என்னும் செய்வினை செயப்பாட்டு வினையாக் கொள்ளப்பட்டது.
272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
(இ-ள்.) எத்துணை ஆனும் - எவ்வளவாயினும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்த பிரமாணத்தால், சிறு அறம் செய்தார் - சிறிய தருமத்தையாகிலும் செய்தவர், தலைப்படுவர் - மேன்மைப்படுவர்; மற்றை - வேறான, பெரு செல்வம் எய்தியக் கால் - மிகுந்த செல்வம் பொருந்தின போது, பின் அறிதும் என்பார் - (தருமத்தை) பின்பு பார்த்துக் கொள்வோ மென்கிறவர்கள், கடலத்துள் - கடல்சூழ்ந்த பூமியில், பழி - பழிக்கப்பட்டு, அழிந்தார் - கெட்டுப் போவார், எ-று.
கடலையுடையது = கடலத்து - கடல் - பகுதி, அ - சாரியை, து - விகுதி, பழி என்னு முதனிலை "வரிப்புனைபந்து" என்பது போல் வினையெச்சப் பொருட்டாய் வந்ததெனக் கொள்க; [வினை. சூ. 32]ன் உரையைக் காண்க. மற்றை என்பதை என்பார் என்பதோடு கூட்டுக. [பொது. 33வது சூத்திரத்தினால்] தெளிவு பற்றி அழிந்தாரென இறந்த காலத்துக் கூறப்பட்டது.
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
(இ-ள்.) துய்த்து கழியான் - அனுபவித்துக் கழியாமல் துறவோர்க்கு - (ஆதரிப்பவரால்) துறக்கப்பட்டவர்களுக்கு, ஒன்று ஈகலான் - ஒருபொருள் கொடாமல், வைத்து கழியும் - (பொருளை) வீணாவைத்து இருக்கிற, மடவோனை - மூடனாகிய, அவனை - (உபயோகமற்ற) அவனை, வைத்த பொருளும் நகும் - சேர்த்து வைத்த திரவியமும் சிரிக்கும், அவனை - அப்படிப்பட்டவனை, உலகத்து அருளும் - உலகத்திலே விளங்குகிற கிருபையும், நகும் - சிரிக்கும், எ-று. ஏ - இரண்டும் அசை.
துறவோர் - துறவிகளும் ஆம், ஆயினும் சிறப்பில்லாமையின் "துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும்" என்னுந் திருக்குறளுக் குரைத்தது போல் ஈண்டும் ஆதரிக்கத்தக்கவரால் கைவிடப்பட்டவர் என்று உரைக்கப்பட்டது. வீணாக்கினதைப் பற்றி பொருளும் நகுமென உபசார வழக்காகக் கூறப்பட்டது. "அருளில்லார்க் கவ்வுலகமில்லை. பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாதியாங்கு" என்கிறபடி நற்கதியற்றானே யென அருட்கடவுள் நகும் என்பது கருத்து.
கழியான், ஈகலான் - முற்றெச்சங்கள். ஈகலான் - ஈ - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி.
274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
(இ-ள்.) கொடுத்தலும் துய்த்தலும் - (பிறர்க்கு) கொடுப்பதையும் (தான்) அனுபவிப்பதையும், தேற்றா - தெளியாத, இடுக்கு உடை உள்ளத்தான் - லோபகுணமுள்ள மனமுடையவன், பெற்ற பெருஞ்செல்வம் - அடைந்த மிகுந்த சம்பத்து, இல்லத்து உரு உடை கன்னியரை போல் - வீட்டிற் பிறந்த ரூபமுள்ள பெண்களைப் போலே, பருவத்தால் - (அனுபவிக்கும்) காலத்தில், ஏதிலான் துய்க்கப்படும் - அயலானாலே அனுபவிக்கப்படும், எ-று.
வீட்டிற் பிறந்த பெண் அயலா னனுபவத்திற்கே உரியளாவது போல் லோபியின் செல்வமும் அயலானுக்கே உரியதாகும் என்றபடி.
பருவத்தால் - வேற்றுமை மயக்கம்.
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(இ-ள்.) எறி நீர் பெருங்கடல் - மோதுகின்ற நீரையுடைய பெரிய சமுத்திரத்தை, எய்தி இருந்தும் - அடைந்திருந்தும், அறு நீர் சிறு கிணறு - அற்றுப்போம்படியான நீரையுடைய சிறிய கிணற்றினது, ஊறல் பார்த்து உண்பர் - ஊற்றைக்கண்டு குடிப்பார்கள் (சனங்கள்); மறுமை அறியாதார் ஆக்கத்தின் - மறுமைப்பயனை அறியாதவர்களுடைய செல்வத்தைக் காட்டிலும், சான்றோர் கழி நல்குரவே - யோக்கியர்களுடைய மிகுந்த தரித்திரமே, தலை - மேலானது, எ-று.
மிகுந்த தண்ணீருள்ளதா யிருந்தும் உபயோகப்படாத கடலைப் போலே பயனற்றது அயோக்கியருடைய பணம் ஆதலின், கிணற்று ஊற்றைப் போல் சற்றுச் சற்றாகிலும் உபயோகமான யோக்கியருடைய அற்ப சம்பத்தே மேலானதென்பது கருத்து.
அற்று அற்றுச் சுரப்பதனான் அறுநீர் கிணறு என்றார். சுழி - உரிச்சொல்.
276. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
(இ-ள்.) ஏழை - மூடன், பொருளை - பணத்தை, எனது எனது என்று இருக்கும் - என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டிருப்பான்; யானும் - நானும், (அப்பொருளை) எனது எனது என்று -, இருப்பன் - இருப்பேன், தனது ஆயின் - அவனதனால், தானும் அதனை வழங்கான் - அவனும் அப்பொருளை (ஒருவர்க்கு) கொடான்; பயன் துவ்வான் - (அதின்) பிரயோஜனத்தை அனுபவிக்க மாட்டான். யானும் அதனை அது - நானும் அந்தத் திரவியத்தை அதுவாக, [அப்படியே செய்வேன் என்றபடி,] எ-று.
செய்வேனென்று ஒரு சொல் வருவித்து அது என்பதை முடித்துக் கொள்க.
உபயோக மில்லாமல் சம்பாதித்தவன் தனது என்று சொல்வதற்கும், சம்பாதியாதவன் அப்படிச் சொல்வதற்கும் வித்தியாசமில்லையென்றபடி.
277. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
(இ-ள்.) வழங்காத செல்வரின் - கொடாத தனவான்களைக் காட்டிலும், நல்கூர்ந்தார் உய்ந்தார் - தரித்திரர் (துன்பங்களில்) தப்பினவர்கள்; (எப்படியெனில்) இழந்தார் எனப்படுதல் - பொருளை இழந்து போனார்கள் என்கிற அபவாதத்தினின்றும், உய்ந்தார் - தப்பினார்கள்; உழந்து - வருந்து, அதனை காப்பு - அப்பொருளைக் காப்பாற்றுவதினின்றும், உயந்தார் -, கல்லுதலும் - (அதைப் புதைத்துவைக்கும் பொருட்டு) நிலத்தைத் தோண்டுவதினின்றும், உய்ந்தார் -; தம் கை நோவ - தமது கைகள் நோவும்படி, யாப்பு - கெட்டியாய்ப் பிடித்திருப்பதினும், உய்ந்தார் -; உய்ந்த பல - (இப்படி அவர்) தப்பினவை பல(வுண்டு), எ-று.
எனப்படுதல், காப்பு, கல்லுதல், யாப்பு - இவை நான்கும் ஐந்தாம் வேற்றுமைத் தொகை. கொடாமல் பணம் வைத்திருப்பவனுக்குக் கஷ்டமேயன்றி வேறு பயனில்லை யென்பது கருத்து.
278. தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
(இ-ள்.) தனது ஆக - (பொருள்) தனதா யிருக்கையிலே, தான் கொடான் - (லோபி) தான் (ஒருவர்க்கும்) கொடுக்க மாட்டான்; தாயத்தவரும் - தாயாதர்களும், தமது ஆய போழ்து - (அப்பொருள்) கொடுக்கமாட்டார்; முன்னே - பூர்வத்திலே, தனது ஆக கொடுப்பின் - தனதாயிருக்கையிலே கொடுத்தல், அவர் கடியார் - தாயாதர் விலக்கார்கள்; பின்னை - பிற்காலத்தில், அவர் கொடுக்கும் பொழுது - அந்தத் தாயாதர் கொடுக்குங் காலையில், தான் கடியான் - தான் (அதை) விலக்கமாட்டான், எ-று.
தாயமாவது தகப்பன் பாட்டன் முதலானார் மூலமாய் வந்த பொருள்; அதனை எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் தாயாதர். ஒருவன் தான் சம்பாதித்த பொருள் தன் சுவாதீனமா யிருக்கையிலே வறியவர்க்குக் கொடாமல் வைக்க, அதைப் பெற்றுக் கொண்ட தாயாதிகளும் கொடுக்க மன மிசையார்கள்; தானுயிரோ டிருக்கையிற் கொடுத்தால் தாயாதார் தடுப்பதில்லை; தானிறந்த பின் அவர் கொடுத்தால் தான் தடுப்பதில்லை. இப்படி இரு திறத்தாரும் பொருளைச் சற்பாத்திரத்தில் உபயோகியாமல் வீணாக்குகின்றவர் என்றபடி. இது அக்காலத்து யாரையோ நோக்கிச் சொன்னதுபோலும்.
279. இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
(இ-ள்.) இரவலர் கன்று ஆக - யாசகர் கன்று போலிருக்க, ஈவார் ஆ ஆக - கொடுப்பவர் பசுப்போ லிருக்க, விரகில் - உற்சாகத்தினால், சுரப்பது - பயனைத்தருவது, வண்மை ஆம் - கொடுக்குங்குணமாம்; விரகு இன்றி - உச்சாக மில்லாமல், வல்லவர் ஊன்ற - வலிமையுடையவர்கள் அழுத்தி வருந்த, வடி ஆ போல் - பால் கொடுக்கின்ற பசுவைப் போல, வாய் வைத்து கொள்ள - அவ்வவ் விடங்களிலே நிறுத்தித் துன்பப்படுத்த, சுரப்பது ஆம் - பயனைத்தரும், கீழ் - கீழ்மகன், எ-று.
கன்று வாய்வைக்கச் சந்தோஷமாய்ப் பாலைச் சுரக்கும் பசுவைப் போலே யாசகரைக் கண்டவுடனே சந்தோஷத்தோடு கொடுப்பதுதான் கொடை. வல்லவர் பலவகையில் வருத்த, மனமின்றிப் பால் சுரக்கும் பசுவைப் போல வலியோர் நேர்ந்த விடங்களிலே தூஷிக்கவும் இடுக்கண் செய்யவும் நிர்ப்பந்தமாய்க் கீழ்மக்கள் கொடுக்குங் கொடை, கொடை என்று சொல்லத்தகா தென்பதாம்.
வல்லவர் ஊன்ற அடிக்கின்ற ஆ போலே உறுப்புக்களில் கருவிகளை வைத்துக் கொல்ல எனப்பொருள் உரைப்பாருமுளர். வடித்தல் - ஊற்றல், இங்கு பால் சுரத்தலாம். வாய் - இடம். கீழ் எழுவாய், சுரக்கும் - பயனிலை.
280. ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
(இ-ள்.) ஈட்டலும் துன்பம் - பொருளைச் சம்பாதிப்பதும் வருத்தம்; மற்று - மேலும், ஈட்டிய ஒள் பொருளை - சம்பாதித்த நல்ல பொருளை, காத்தலும் - காப்பாற்றுவதும், ஆங்கே கடு துன்பம் - அப்படியே மிகுந்த துன்பம்; காத்தல் குறைபடில் - காப்பது குறைந்தால்; துன்பம் -; கெடில் - நாசப்பட்டால், துன்பம் -; (ஆதலின்) பொருள் - திரவியமானது, துன்பக்கு உறைபதி - துன்பத்திற்கு வாசஸ்தானம், எ-று மற்றை - அசை.
காத்தலிருக்கவும் பொருள் குறைபட்டால் எனவுமுரைக்கலாம். சாரியை விகற்பமாதலின் "துன்பக்கு" என்பதில் அத்துச்சாரியை வரவில்லை யென்றறிக [உருபு புணர். சூ.4].
