தாளாண்மை

bookmark

துறவியல்

 

 [அதாவது முயற்சியை ஆளுந்தன்மை.]

 

191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
     கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
     வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
     தாளாளர்க்கு உண்டோ தவறு?

     (இ-ள்.) கோள் - (நீரின்) கொள்கையை, ஆற்ற - பூர்ணமாக, கொள்ளா - கொள்ள மாட்டாத, குளத்தின் கீழ் - ஏரியின் கீழுள்ள பைங்கூழ் போல் - பயிரைப் போலே, கேள் ஈவது உண்டு - பந்துக்கள் கொடுப்பதைப் புசித்துக் கொண்டு, கிளைகள் - (கொடுப்பவர்க்கு) உறவின் முறையார், துஞ்சுவ - சாவர்; வாள் ஆடு - வாளின் மேல் ஆடுகின்ற, கூத்தியர் - கூத்தாடும் பெண்களுடைய, கண் போல் - கண்ணைப் போல், தடுமாறும் - (அவ்வாட்டத்தின் மேல் கவனமாய்) புடைபெயர்ந்து நிற்கிற, தாள் ஆளர்க்கு - முயற்சியைக் கையாள்பவர்க்கு, தவறு உண்டோ - காரியம் கைகூடாமற் போவது உண்டாகுமோ [உண்டாகாது], எ-று.

     மிகுந்த நீரைக் கொள்ளமாட்டாத ஏரியின் கீழ்ப் பயிர் அவ்வேரி செழித்திருக்கு மளவும் செழித்திருந்து அது வரண்டால் தானும் சாவது போல், யாதொரு முயற்சியுஞ் செய்யாமல் உறவினர் கொடுக்கத் தின்று கொண்டு காலங் கழிக்குஞ் சோம்பர் அவர் செல்வம் வரளும் போது சாவர். கத்திமேல் ஆடுகிறவள் அவ்வாட்டம் தவறாமலும் அபாயம் வராமலும் ஜாக்கிருதையாய்க் கண்ணை அதன் மேலேயே செலுத்துவது போல் காரியத்தில் ஜாக்கிருதையாய் முயற்சி செய்கிறவர்களுக்குக் காரியம் தவறிப் போக மாட்டாது என்பது கருத்து.

     துஞ்சுக எனவும் பாடமுண்டு. தடு - தம்பித்திருத்தல். அது மாறுதல் தடுமாற்றம். ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி. பசுமையான கூழ் பைங்கூழ்; அடி அகரம் ஐ ஆய், மற்றவை கெட்டன. கிளைகளோ - ஓ - இரக்கதின்கண் வந்தது.

 

192. ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
     காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
     வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
     தாழ்வின்றித் தன்னைச் செயின்.

     (இ-ள்.) ஆடு கோடு ஆகி - ஆடுகின்ற கொம்பு ஆகி, அதரிடை - வழியில், நின்றதும் - நின்ற செடியும், காழ் கொண்ட கண்ணே - வயிரங் கொண்ட போதே, களிறு அணைக்கும் கந்து ஆகும் - யானையைக் கட்டும்படியான தறியாகும்; ஒருவன் -, தான் தன்னை -, தாழ்வு இன்றி செயின் - தாழ்ச்சியில்லா திருக்கும்படி (முயற்சி) செய்தால், வாழ்தலும் - (அவனுடைய) வாழ்வும், அன்ன தகைத்தே - அப்படிப்பட்ட தன்மையுடையதே ஆகும், எ-று.

     அளபெடை இன்னிசைக்கு வந்தது. ஏகாரம் இரண்டும் தேற்றம்.

 

193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
     சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
     கால்தொழில் என்று கருதற்க கையினால்
     மேல் தொழிலும் ஆங்கே மிகும்.

     (இ-ள்.) உறு புலி - பெரிய புலி - ஊன் இரை இன்றி - மாமிசமாகிய உணவு இல்லாமல், ஒருநாள் -, சிறு தேரை - சிறிய தவளையை, பற்றியும் தின்னும் - பிடித்தும் புசிக்கும்; (ஆனது பற்றி) அறிவினால் -, கால் தொழில் என்று - அற்பச் செய்கையென்று, கருதற்க - நினைக்க வேண்டாம்; கையினால் - முயற்சியால், மேல் தொழிலும் - மேலான செய்கையும், ஆங்கே மிகும் - அப்படியே மேம்படும், எ-று.

     புலியும் ஒரு சமயத்தில் தேரையைத் தின்னும்படி நேரிடும். ஆதலால் நாமும் சமயத்துக்கு ஏற்றபடி ஒரு அற்ப காரியஞ் செய்ய வந்தால் அதை அற்பம் என்று நினையாமல் முயன்றால் மேலான காரியம் அப்படியே கைகூடு மென்பதாம்.

     பற்றியும் என்கிற உம்மை எச்சப்பொருளோடு இழிவு சிறப்புமாம்; பற்றித் தின்பது முண்டு என்றபடி.

 

194. இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
     அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
     கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
     பெண்டிரும் வாழாரோ மற்று.

     (இ-ள்.) கண்டல் - முள்ளிச் செடியை [அல்லது தாழஞ் செடிகளை], திரை - அலைகள், அலைக்கும் - அலையச் செய்கின்ற, கானல் - உப்பளமுள்ள, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்றுறையுடைய பாண்டியனே!, இசையாது எனினும் - கூடாமற்போனாலும், ஓர் ஆற்றான் இயற்றி - ஒரு வழியினால் செய்து, அசையாது நிற்பது - மனம் சலியாமலிருப்பது, ஆண்மை ஆம் - ஆண்தன்மையாம்; இசையுங்கால் - கூடினால், பெண்டிரும் வாழாரோ - பெண்பிள்ளைகளும் மேன்மை அடைய மாட்டார்களா?, எ-று. மற்று - அசை.

     சுலபமாய் ஒரு காரியம் கைகூடினால் பெண்பிள்ளைகளும் அதைச் செய்து மேன்மை பெறலாம். இசையாத காரியத்தை எப்படியாகிலும் செய்து அந்த வருத்தத்துக்காக மனஞ் சலியாமலிருப்பதுதான் ஆண்குணம் என்பது கருத்து.

     கானல் - கடற்கரைச் சோலையுமாம். அம் - சாரியை, அழகைக் குறிக்கு முரிச் சொல்லுமாம்.

 

195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
     சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
     ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
     என்றிவற்றான் ஆகும் குலம்.

     (இ-ள்.) நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் -, (சொல்வது) சொல் அளவு அல்லால் - சொல்மாத்திரையா யிருக்கின்ற தல்லாமல், பொருள் இல்லை - ஒரு பொருளையும் உடைத்தாயிருக்கவில்லை; தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் பொருள் ஒன்றோ - சுத்தமான பொருளும், தவம் - விரதமும், கல்வி - நூலறிவும்; ஆள் வினை - முயற்சியும், என்ற இவற்றால் - என்று சொல்லப்படுகிற இக்குணங்களால், குலம் ஆகும் - நற்குலமென்பது உண்டாகும், எ-று.

     இயற்கையாய் நற்குலமென்றும் தீக்குலமென்றும் மில்லை; நற்குண நற்செய்கைகளால் நல்ல குலமென்பதும் அவையின்மையால் தீயகுல மென்பதுமாம் என்றதாயிற்று.

     ஒன்றோ என்பது எண்ணிடைச் சொல், அல்லது அது ஒன்றோ, பின் சொல்லப்படும் பிறவும் என வுரைக்கினு மமையும்.

 

196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
     ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
     உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
     குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

     (இ-ள்.) ஆற்றும் துணையும் - (தாம் ஒரு காரியத்தை) செய்து முடிக்குமளவும், அறிவினை உள் அடக்கி - (தமது) அறிவின் திறத்தை வெளிப்படாமல் வைத்து, ஊக்கம் உரையார் - (தமது) மனவலியை (பிறருக்கு) சொல்லமாட்டார், உணர்வு உடையார் - விவேகமுள்ளவர், ஊக்கம் - (பிறர்) மனவலியை, உறுப்பினால் - அவயவங்களி னிலைமையினால், ஆராயும் ஒண்மை உடையார் - ஆராய்ந்து அறியும்படியான புத்தியுள்ளவர்களது, குறிப்பின் கீழ் - அறிவின் நுட்பத்தில், பட்டது உலகு - இருக்கின்றது உலகு, எ-று.

     புத்திமான்கள் எடுத்த காரிய முடியுமளவும் முயற்சி செலுத்தும்படியான தமது மனோபலத்தைப் பிறருக்கு வெளியிடார். பிறருடைய மனோபலத்தையோ அவருறுப்புகளிருக்குந் தன்மையாலேயே அறிந்து கொள்ளுவர். ஆதலால் உலக்மெல்லாம் அப்படிப்பட்டவருடைய குறிப்பிலடங்கி யிருக்கிறதென்பது கருத்து.

     ஒண்மை - விளக்கம், புத்திக்கு ஆகு பெயர். ஊக்கமுரையாரும் உணர்வுடையாரும் ஒண்மையுடையாரு மானவர்களுடைய என ஒரே வாக்கியமாகவு முரைக்கலாம். குறிப்பின் கீழ் - கீழ் ஏழனுருபு.

 

197. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
     மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
     குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
     புதல்வன் மறைப்பக் கெடும்.

     (இ-ள்.) சிதலை தினப்பட்ட - கறையானாலே தின்னப் பட்ட, ஆல மரத்தை -, மதலை ஆய் - தாங்குந் தூணாய், அதன் வீழ் - அந்த ஆலின் வீழ், ஊன்றி ஆங்கு - தாங்கினாற் போல, தந்தைகண் குதலைமை தோன்றின் - பிதாவினிடத்தில் தளர்ச்சி உண்டானால், தான் பெற்ற புதல்வன் - அவன் பெற்ற மகன், மறைப்ப - மறைப்பதனால், கெடும் - போய்விடும், எ-று.

     செல்லெரித்து வீழ்ந்து போகத்தக்க ஆலமரத்தை அதன் வீழ் தாங்கிக் கொண்டது போல் பிதா செய்யுங் காரியத்துக்கு நேரிடும் தளர்ச்சியை மகன் முயற்சியால் போக்க வேண்டுமென்றபடி.

     ஆல் மரம் - இடையில் அம் சாரியை வந்தது. மதலை - மகனுக்கும் தூணுக்கும் சிலேடை ஊன்றினால் என்பது ஊன்றி எனத் திரிந்தது.

 

198. ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
     மானம் தலைவருவ செய்யவோ? - யானை
     வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
     அரிமா மதுகை அவர்.

     (இ-ள்.) யானை வரி முகம் - யானையினது புள்ளியுள்ள முகத்தை, புண் படுக்கும் - புண்படச் செய்யும்படியான, வள் உகிர் - கூர்மையான நகங்களும், நோன் தாள் - வலிமையுள்ள பாதங்களும் (உள்ள), அரிமா - சிங்கத்தைப் போன்ற, மதுகையவர் - வீரமுள்ளவர்கள், ஈனம் ஆய் - தாழ்ச்சியுண்டாகி, இல் இருந்து - வீட்டிலிருந்து, இன்றி - ஒரு பொருளுமில்லாமல், விளியினும் - சாம்படி நேரிட்டாலும், மானம் தலைவருவ - குற்றம் தம்மிடத்து வரும்படியான காரியங்களை, செய்பவோ - செய்வார்களோ [செய்யார்கள்], எ-று.

     நல்ல சாமர்த்திய முள்ளவர்கள் ஒரு கால் தங்கள் முயற்சி இடையூறுற்றுக் காரிய முடியாமல் சாம்படி நேர்ந்தாலும் பொறுத்திருந்து அம்முயற்சியை மறுபடியும் கைகூடப் பார்ப்பார்களேயன்றித் தாழ்வான காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.

     செய்ப - பலர்பால் வினைமுற்று, எதிர்காலம்; [வினை. சூ. 8, பத. சூ. 18] ஓகாரம் - எதிர்மறை.

 

199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
     தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
     உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
     பேராண்மை இல்லாக் கடை.

     (இ-ள்.) தீம் கரும்பு ஈன்ற - மதுரமான கரும்பு பெற்ற, திரள் கால் - திரண்ட தாளையுடைய, உளை - குதிரை முதலியவற்றின் பிடர் மயிர்போல் (கற்றையாகிய), அலரி - பூவானது, தேம் கமழ் நாற்றம் - இனிமையாய்ப் பரிமளிக்கும் சுகந்தத்தை, இகழ்ந்தது ஆங்கு - இகழ்ந்ததுபோல், ஓங்கும் உயர் குடியுள் - பேர் பெற்ற மேலான குலத்தில், பிறப்பின் - பிறந்ததனால், பேர் பொறிக்கும் - பேர் எழுதும் படியான, பேர் ஆண்மை - மிகுந்த சாமர்த்தியம் [அதாவது முயற்சி], இல்லாக் கடை - இல்லாமற் போனால், என ஆம் - என்ன (சிறப்பு) உண்டாம், எ-று.

     கரும்பிற் பிறந்தும் அதன் நுனியிலுள்ள பூங்கொழுந்துக்குச் சிறப்பில்லை போல மேற்குலத்திற் பிறந்தாலும் முயற்சியில்லையாயின் சிறப்பில்லை என்பதாம்.

     மெதுவாய்ச் செறிந்து குஞ்சம் போலிருக்குந் தன்மையால் உளை உவமானமாயிற்று. அலரி - அலர் - பகுதி, இ - கர்த்தாவைக் காட்டும் விகுதி. பிறப்பின் - தொழிற்பெயர், ஐந்தனுருபு, ஏதுப்பொருள்.

 

200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
     கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
     பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
     நீரும் அமிழ்தாய் விடும்.

     (இ-ள்.) பெரு - பெரிய, முத்தரையர் - முத்தரையரென்பவர், பெரிது உவந்து - மிகவும் சந்தோஷித்து, ஈயும் - கொடுக்கிற, கருனை சோறு - பொரிக்கறியோடு கூடிய சோற்றை, கயவர் - மூடர் [யாதொரு முயற்சியுஞ் செய்யுந் திறனில்லாதவர்], ஆர்வர் - உண்பார்கள்; கருனையை பேரும் அறியார் - பொரிக்கறியின் பேரையும் அறியாதவருடைய, நனி விரும்பு தாளாண்மை - மிகவும் விரும்பத்தக்க முயற்சியாலுண்டாகிற, நீரும் -, அமிழ்து ஆய்விடும் - (அவர்க்கு) அமிர்தம் போலாகும், எ-று.

     முத்தரையர் என்பவர் ஒருவர் பூர்வத்தில் பலருக்கும் நல்ல சோறிட்டுக் கொண்டிருந்தார் போலும், யாதொரு முயற்சியும் செய்ய மாட்டாத சோம்பேறிகள் அதனையுண்டு மகிழ்ந்தார்கள். அது தகுதியன்று. உயர்ந்த ஊணின் பேரையும் அறியாத சிலர் தமது முயற்சியால் கூழ்நீரைக் கொண்டாலும் அதுவே தகுதி. அவர்களுக்குத் திருத்தியையும் பெருமையையும் தருவதனால் அமிருதத்தோடு ஒப்பிடப்பட்டது.

     பெருமுத்தரையர் - பேரு முத்து அரையர் - பெரிய முத்துக்களையுடைய பாண்டியரசர்கள் எனவும் உரைக்கலாம்; அந்நாட்டிலே முத்து மிகுதியுமுண்டாவது பிரசித்தம். கயவர் - கயம் - பகுதி, உரிச்சொல், அர் - விகுதி. கருனை - வேற்றுமைமயக்கம் அல்லது கருனையைப் பேரினாலுமறியாதவர் எனவுங் கொள்ளலாம். தாளாண்மை - மூன்றனுருபு தொக்கது.

     இவ்வளவால் முன் கூறிய பெருமைக்கும் மேன்மைக்கும் தாளாண்மை முக்கிய காரணமென அதன் சொரூபமும் பயனும் அஃதில்லாமையா லிழிவும் விளக்கப்பட்டன.