சுற்றம் தழால்

bookmark

நட்பியல்

 

[அதாவது சுற்றத்தாரைத் தழுவிக் கொண்டிருத்தல், அதனால் மிகுந்த பயனுண்மையின் அது பெருமையுடையோர் கடனெனக் கூறப்பட்டது.]

 

201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
     கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
     அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
     கேளிரைக் காணக் கெடும்.

     (இ-ள்.) வயாவும் - கர்ப்பந் தரித்திருப்பதினா லுண்டான நோவையும், வருத்தமும் - (அதுபற்றி வரும் பல) துன்பங்களையும், ஈன்றக்கால் நோவும் - கருவுயிர்க்குங்கால் உண்டாகும் நோவையும், கவான் மகன் கண்டு - தொடை மேல் மகனைக் கண்டு, தாய் -, மறந்து ஆங்கு - மறந்து போனாற் போல், அசா - தளர்ச்சியால், தான் உற்ற வருத்தம் - தான் அடைந்த துன்பம், உசா - (க்ஷேம) விசாரணை செய்யுந் தன்மையுள்ள, தன் கேளிரைக் காண - தன் சுற்றத்தாரைப் பார்க்கையில், கெடும் - நீங்கும், எ-று.

     ஈன்றக்கால் என்கிற வினையெச்சம் நிகழ்காலத்திற்குக் கொள்ளப்பட்டது. அசா - முதனிலைத் தொழிற்பெயர். அளபெடைகள் பாட்டினோசை நிறைக்க வந்தன.

 

202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
     நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்
     பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
     நல்லாண் மகற்குக் கடன்.

     (இ-ள்.) அழல் மண்டு போழ்தின் - வெப்பம் நெருங்கின காலத்தில் [கோடை காலத்தில்], அடைந்தவர்கட்கு எல்லாம் - (தன்னிடம்) சேர்ந்தவர்களுக்கெல்லாம், நிழல் மரம் போல் - நிழலைத் தருகிற மரத்தைப் போலே, நேர் ஒப்ப - ஒருசமமாக, தாங்கி காத்து, பழு மரம் போல் - பழுத்த மரத்தைப் போலே, பல்லார் பயன் துய்ப்ப - பலரும் பிரயோசனம் அனுபவிக்கும்படி, தான் வருந்தி வாழ்வதே - தான் வருத்தப்பட்டுக் கொண்டாயினும் சீவித்திருப்பதே, நல் ஆண்மகற்கு - நற்குணமுள்ள ஆண்பிள்ளைகளுக்கு, கடன் முறைமையாகும், எ-று.

     போழ்து - பொழுதின் விகாரம், வருந்தி என்பதோடு இழிவு சிறப்பும்மை வருவிக்கப்பட்டது. ஏகாரம் - தேற்றம்.

 

203. அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
     எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து
     வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
     தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

     (இ-ள்.) அடுக்கல் மலை நாட - அடுக்கடுக்கான மலைகள் பொருந்தின நாட்டை யுடையவனே!, பெரியோர் -, தற்சேர்ந்தவரை - தம்மைச் சேர்ந்தவர்களை, எடுக்கலம் - தாங்க மாட்டோம், என்னார் - என்று சொல்லமாட்டார்; வன் காய் பல பல - வன்மையான அநேகங் காய்கள், அடுத்து அடுத்து காய்ப்பினும் - சேர்ந்து சேர்ந்து அல்லது கிட்டக் கிட்டக் காய்த்தாலும், (ஒரு மரத்தில்) தன் காய் பொறுக்கலா கொம்பு - தன் காய்களைப் பொறுக்க மாட்டாத கிளை, இல்லை - இல்லையே, எ-று.

     எத்தனை கனமான காய்கள் காய்த்தாலும் மரத்துக்கிளை பொறுப்பது போல தம்மை யடுத்தவரைப் பெரியோர் காப்பர் என்றபடி.

     எடுக்கலம் - தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று, எடு - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, அம் - தன்மைப் பன்மை விகுதி. பொறுக்கலா என்னும் பெயரெச்சத்தையும் இவ்வாறே பகுத்துக்கொள்க. தற்சேர்ந்தவர் என்பதை ஒரு சொல்லாக் கொள்ள வேண்டும்.

 

204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
     சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா
     நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
     ஒற்கமி லாளர் தொடர்பு.

     (இ-ள்.) உலகு அறிய - உலகத்தார் அறியும்படி, தீர கலப்பினும் - திடமாகச் சேர்ந்தாலும், சிறு இனத்தார் கேண்மை - அற்பருடைய உறவு, நில்லா - நிலைபெறாமல், சில பகல் ஆம் - சொற்பகால விருப்பதேயாம்; ஒற்கம் இலாளர் தொடர்பு - குணக்குறைவு இல்லாதவருடைய உறவு, நிலை திரியா நிற்கும் - தமது நிலையினின்று மாறாமலிருக்கின்ற, பெரியோர் -, நெறி அடைய - நன்னெறி [மோக்ஷம்] அடையும்படி, நின்ற அனைத்து - யோக நிலையிலே நின்றாற் போலாம். [தவறிப் போகாமல் நீடித்து நின்று பயன்படுமென்பது கருத்து.] எ-று. ஆல் - அசை.

 

205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
     என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
     தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
     தலைமக்கள் ஆகற்பா லார்.

     (இ-ள்.) இன்னர் - இவர், இனையர் - இப்படிப்பட்டவர், எமர் - எம்மவர் [உறவினர்], பிறர் - உறவில்லாதவர், என்னும் சொல் - என்று சொல்லுகிற பேச்சு, என்னும் - ஏதாகிலும், இலர் ஆம் - இல்லாதவராகிய, இயல்பினால் - தன்மையால், துன்னி - சேர்ந்து, தொலை மக்கள் - தளர்ந்த மனிதருடைய, துன்பம் தீர்ப்பார் - சங்கடத்தை நீக்குவார்கள், யார் மாட்டும் - எவரிடத்தும், தலை மக்கள் ஆகல் பாலார் - மேன்மக்களாகும் தன்மையுடையவர்கள், எ-று.

     எங்கும் மேன்மக்களென்று சொல்லத்தக்கவர் நன்மை தீமைகளையும் உறவு உறவின்மைகளையும் நாடாமலே சேர்ந்து துன்புற்றவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பர் என்பது கருத்து.

     ஆகற்பாலார் - எழுவாய்; தீர்ப்பாரே - பயனிலை ஏகாரம் - தேற்றம். துன்பம் தீர்ப்பார் - எழுவாய், தலைமக்களாகற் பாலார் - பயனிலை என்னவுமாம்; அப்போது ஏகாரம் பிரிநிலை தொலை மக்கள் - தொலை - வினைத்தொகை, செல்வம் தொலைந்த மக்கள் என்பதாம்.

     இன்னர் - இன் - இடைச்சொல், பகுதி, அர் - விகுதி. இளையரில் ஐ - சாரியை, பிறர் - ரகரவொற்று விகுதி. என் என்பது இடைக் குறையான எவனென்னும் குறிப்பு முற்றாலாகிய பெயர்.

 

206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
     அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
     உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
     எக்காலத் தானும் இனிது.

     (இ-ள்.) பொன் கலத்தில் பெய்த - பொற்பாத்திரத்திலே இட்ட, புலி உகிர் வான் புழுக்கல் - புலி நகம் போலே வெண்மையான சோற்றை, அக்காரம் பாலோடு - சக்கரை பால்களோடு, அமரார் கைத்து - அன்பில்லாருடைய கையிலிருந்து, உண்டலின் - உண்பதைப் பார்க்கிலும், உப்பு இலி - உப்பு இல்லாத, புற்கை - புல்லரிசிக் கூழை, உயிர்போல் கிளைஞர் மாட்டு - உயிரையொத்த பந்துக்களிடத்தில், எக்கலத்தானும் - எந்தப் பாத்திரத்திலாகிலும் (உண்பது) இனிது - இனிப்பாகும், எ-று.

     அக்காரம் பால் - உம்மைத் தொகை. கைத்து - ஐந்தாம் வேற்றுமைத் தொகை, து - சாரியை, அல்லது கைத்து - கையினிடத்துள்ளதாகிய, புழுக்கல் எனவுங் கூட்டலாம். போல் - வினைத்தொகை. கலத்தான் - ஆன் - இடப்பொருள்.

 

207. நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
     வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
     அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
     தமராயார் மாட்டே இனிது.

     (இ-ள்.) நாள்வாய் பெறினும் - காலத்திலே பெற்றாலும், தம் - தம்மை, நள்ளாதார் இல்லத்து - நேசியாதவருடைய வீட்டில், வேளாண்மை - உபகாரமாகக் கொடுக்கப்பட்ட, வெம் கருனை - விரும்பத்தக்க பொரிக்கறியுணவும், வேம்பு ஆகும் - வேம்பு போல் கைப்பு ஆகும்; கேளாய் - கேள், அபரானப் போழ்தின் - பிற்பகற்காலத்து, அட்கு இடுவர் ஏனும் - இலைக்கறியை இட்டாராயினும், தமர் ஆயார் மாட்டே - தம்மவரா யிருப்பவரிடத்திலேயே, இனிது - (உண்ணும் உணவு) இனிப்பாகும், எ-று.

     இங்கே தமர் என்பது நேசிக்கு முறவினர்க்கு ஆம். நாள்வாய் - வாய் - ஏழனுருபு. நள்ளாதார் - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, ள் - சந்தி, ஆர் - பலர்பால் விகுதி, தகரம் - எழுத்துப் பேறு, அபரானம் - அபராஹ்ந என்னும் ஆரியமொழித்திரிபு; அபர - பிற்பட்டது. அஹத் - பகல், பகலின் பிற்பட்ட பாகம் என மாறி யியைந்தது.

 

208. முட்டிகை போல முனியாது வைகலும்
     கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
     சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
     நட்டார் எனப்படு வார்.

     (இ-ள்.) முட்டிகை போல - சம்மட்டியைப் போலே, முனியாது - வெறுக்காம லிருக்கும்படி, வைகலும் - நாள்தோறும், கொட்டி - பதப்படுத்தி, உண்பாரும் - (ஒருவர் சோற்றை) உண்கிறவர்களும், (காலம் வாய்த்தால்) குறடுபோல் - பற்றுக் குறட்டைப்போல, கைவிடுவர் - விட்டு நீங்குவர்; நட்டார் என்பபடுவார் - அன்புள்ள உறவின ரென்னப்பட்டவர்கள், சுட்டு கோல் போல - உலையாணிக்கோலைப் போல, எரியும் புகுவர் - (உறவினர்க்குத் துன்ப நேர்ந்த போது அவரோடு) நெருப்பிலேயும் விழுவர், எ-று.

     சம்மட்டி இரும்பைக் கொட்டிப் பதமாக்குவது போல் ஒருவனைத் தனக்கு இதஞ்செய்யும்படி வசப்படுத்தி யுண்பர் என்பதாம்.

     கொட்டுதல் - அடித்தல், பதமாக்குதலுக்கு ஆயிற்று. குறடு - கொல்லனுடைய ஓநாயுதம்.

 

209. நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
     மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும்
     இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
     துன்புறுவ துன்புறாக் கால்.

     (இ-ள்.) நறுமலர் தண் கோதாய் - சுகந்தமான பூச்சூட்டிய குளிர்ந்த கூந்தலுடையவளே!, நட்டார் - நேசித்தவர், நட்டார்க்கு - நேசித்தவர்க்கு, இறும் அளவும் - சாகும் வரையும், அவரோடு - அந்த நட்டாரோடு, இன்பு உறுவ இன்பு உற்று - இன்பப்படுமவைகளை இன்பப்பட்டு, எழீஇ - நடந்து, துன்பு உறுவ துன்பு உறாக்கால் - துன்பப்படுமவைகளைத் துன்பப்படாமற் போனால், மறுமையும் - மறுபிறப்பிலாகிலும், செய்வது ஒன்று உண்டோ - செய்யத்தக்க நற்காரியம் வேறொன்று இருக்கிறதோ [இல்லை], எ-று.

     நட்டார் - சுற்றத்தார் எனக்கொள்க. மறுமையும் என்பதில் உம்மை விகற்பப் பொருளும் எச்சப் பொருளு முடையது. இம்மையிலொன்று மில்லையே மறுமையிலாகிலு முண்டோ வென்றால் அதுவுமில்லை என்பது கருத்து.

     நட்டார் தம்மை நட்டாரோடு சமமாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென அவர்களிருக்க வேண்டிய முறைமை கூறப்பட்டது.

     இன்பு உறுவ, துன்பு உறுவ - பலவின்பால் வினையாலணையும் பெயர், இரண்டனுருபு தொக்கது. எழீஇ - எழு - பகுதி.

 

210. விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
     வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்
     தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
     என்போடு இயைந்த அமிழ்து.

     (இ-ள்.) விருப்பு இலார் இல்லத்து - (தன்மேல்) அன்பில்லாதவர்களுடைய வீட்டில், வேறு இருந்து, வேறாயிருந்து, உண்ணும் -, வெருகு கண் - பூனைக்கண்னைப் போன்ற, வெம்கருனை - விரும்பத் தக்க பொரிக்கறியுணவு, வேம்பு ஆம் - விருப்பு உடை தன்போல்வார் இல்லுள் (தன்மேல்) விருப்பமுள்ள தன்னோடொத்தவருடைய வீட்டில் (உண்ணப்படும்) தயங்கு நீர் - தெளிந்த நீரிலேயுள்ள, தண் புற்கை - குளிர்ச்சியான புல்லரிசிக்கூழானது, என்போது இயைந்த - உடம்பிற்குப் பொருந்தின, அமிழ்து - அமிர்தமாகும், எ-று.

     வேறிருத்தலாவது - அன்பிற்குத்தக்க வுபசாரம் பெறாமலிருத்தல். ஒருவித பளபளப்பினால் பூனைக்கண் - கருனைக்கு உவமை யாயிற்று. வெருகு என்பதில் ககரம் வேற்றுமைச் சந்தியில் மிக்கது. "நெடி லோடுயிர்த்தொடர்" என்கிற [நன். உயிர் புணர். சூ. 33ன்] உரையைக் காண்க. விருப்பு - விரும்பு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்தது. வேம்பு, அமிழ்து - உவமையாகு பெயர்கள். தனக்கு அவர்கள் மேலுள்ளது போல் தன்மேல் அவர்களும் அன்பு கூர்ந்தவரா யிருக்கவேண்டுமென்பது "விருப்புடைத் தன்போல்வர்" என்று சொல்லப் பட்டது. என்பு - உடம்புக்கு ஆகுபெயர்; "என்பு முரியர் பிறர்க்கு".