ஸ்ரீவராக அவதார வைபவம்
ஸ்ரீவராக அவதார வைபவம் குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தை கொண்ட அந்தப் பிரம்ம சொரூபியான பகவான், இந்த கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார்? என்பதையும், முந்திய பாத்தும கல்பத்தை பற்றிய பிரளயத்துக்கு பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பை பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார்.பராசர மகரிஷி, மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்து மகனாய், தேவதேவனுமான அந்த பிரமரூபியான பகவான், பிரஜைகளை படைத்த விதத்தை கூறுகிறேன்.முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து, சாத்வீக குணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரம்மன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்க திருவுள்ளம் கொண்டான். பராத்பரனும், ஷட்குண சம்பன்னனும், அனாதியும், சர்வ ஜகத்காரண பூதனும், சதுர்முக சொரூபனுமான அந்த ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே! சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக்காலத்தில் அவரே பிரம்மாவினிடத்தில் அனுப்பிரவேசித்து படைப்பை படைக்கின்றார்.அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற ஸ்லோகத்தை அருளி செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள், நாரங்கள் என்று சொல்லப்படும்.ஏனென்றால், அவை நாராயணருக்கு பிறப்பிடமானபடியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார்.இத்தகைய திவ்விய திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு, ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களை செய்தருளியது போல இந்த கல்பத்தில் ஸ்ரீவராக அவதாரம் எடுக்க விழைந்தார்.அத்தகைய திரு அவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத்தக்கதாகவும், சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு, ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்கு தாமே ஆதாரமாகி, ஏகார்ணவ பிரளயயோகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாக பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காக பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாக துதிப்பாளாயினள்.
