வைரமுத்து
வாழ்க்கை வரலாறு
ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஶ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்றவர் வைரமுத்து அவர்கள்.
பிறப்பு:
வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்:
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ’வைகறை மேகங்கள்‘ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.
