வேள்விப் படலம் - 467

bookmark

இராமபிரான் வேள்விச்சாலையைச் சரக்கூடமாக்குதல்

467.

‘தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்’ என்று உன்னி. அத்
தாமரைக் கண்ணனும். சரங்களே கொடு.
கோ முனி இருக்கை. ஓர் கூடம் ஆக்கினான்.
 
தூம  வேல்  அரக்கர்  தம்  -   புகை  காலும்   வேலையுடைய
அவ்வரக்கரது;   நிணமும்   சோரியும்   -   சதைத்  துண்டங்களும்
இரத்தமும்; ஓம  வெம் கனல் இடை உகும் - தூய வேள்வித் தீயிலே
சிதறி  விழக்கூடும்;  என்று  உன்னியே  -  என்று  நினைத்தவனாய்;
தாமரைக் கண்ணனும்  -  தாமரை மலர் போன்ற கண்களை  உடைய
இராபிரான்;  சரங்களே  கொடு  -  தனது  அம்புகளைக்  கொண்டே;
கோமுனி   இருக்கை  -  அரச  முனிவனான  விசுவாமித்திரனுடைய
இருப்பிடத்தை;  ஓர்  கூடம் ஆக்கினான் - ஒரு கூடாராமாகக் செய்து
விட்டான்.  

தூமம்:   புகை. நிணம்: உடற்சதை. சோரி: இரத்தம். ஓமம்: வேள்வி.
உன்னி:    நினைத்து.    வெங்கனல்:   பண்புத்தொகை.    இருக்கை:
இருப்பிடம்.   அரக்கரது   நிணமும்.   ரத்தமும்   வேள்வித்   தீயில்
விழாதபடி.  இராமன்  முனிவரது இருக்கையை. அம்புகளாலேயே  ஒரு
கூடாரமாக்கினான் என்பது கருத்து.                           48