வேள்விப் படலம் - 468

bookmark

சித்தாச்சிரம முனிவர் இராமபிரானிடம்
அடைக்கலம் புகுதல்

468.

நஞ்சு அட எழுதலும் நடுங்கி. நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்.
வஞ்சனை அரக்கரை வெருவி. மா தவர்.
‘அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்’ என்றார்.
 
நஞ்சு  அட  எழுதலும்-  (பாற்கடலைக்  கடைந்த  போது)  நஞ்சு
தம்மை  அழிப்பதற்கு  எழுந்து  வர; நடுங்கி. நாள்மதிச் செஞ்சடைக்
கடவுளை அடையும்  தேவர்  போல்  -  நடுக்கம்  கொண்டு பிறைச்
சந்திரனை   அணிந்துள்ள    சிவந்த   சடைமுடியினான  சிவபிரானை
அடைக்கலம்   அடைந்த  தேவர்களைப் போல்; வெஞ்சின அரக்கரை
வெருவி  -   கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்சி; மாதவர் -
வேள்விச்   சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம்; அஞ்சன வண்ண -
மை  போன்ற   நிறத்தை உடைய இராம பிரானே!; யாம் நின் அபயம்
என்றனர் - நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.

அட:  அழிக்க.  அடல்:   தொழிற்பெயர்.    நாள்மதி:   ஒருகலைச்
சந்திரன்.   செம்மை+சடை:     செஞ்சடை.   வெருவுதல்:   அஞ்சுதல்.
அஞ்சனம்:  மை.  வண்ணம்:   நிறம்.  பாற்கடலில் நஞ்சுஎழ.  அஞ்சிய
வேதர்கள்   சிவபெருமானை    அடைக்கலம்   அடைந்தது    போல.
அரக்கர்களுக்கு  அஞ்சிய  முனிவர்கள்  இராமபிரானை   அடைக்கலம்
அடைந்தனர் என்பது கருத்து.                                49