வேள்விப் படலம் - 463
463.
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின.
கானகம் மறைத்தன. கால மாரிபோல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென.
வானகம் மறைத்தன. வளைந்த சேனையே.
உருத்து வீசின ஊன் நகுபடைக்கலம் - (அந்த அரக்கர்களால்)
உருத்து எறியப்பட்ட பகைவர் உடல் வன்மையை எளிதாக மதித்து
உள்ளே புகும் படைக்கருவிகள்; காலமாரி போல் கானகம் மறைத்தன
- பருவ கால மழையைப் போல் காட்டையே மூடிவிட்டன; மீன் நகு
திரைக்கடல் - மீன்களைக் கொண்ட அலைகடல்; விசும்பு போர்த்த
என - மேலெழுந்து வானத்தை மறைத்தது போல; வளைந்த சேனை
வானகம் மறைத்தன - (வேள்விச் சாலையை) வளைத்துக் கொண்ட
அந்தச் சேனை வானவீதியையே மூடி நின்றது.
ஊன் நகு படைக்கலம்: உடம்பை இகழும் படைக்கலங்கள் என்றது
எவரது உடலும் அதற்குப் பொருட்டல்ல என்பதை உணர்த்தும்.
நகுதல்: இகழ்ந்து நகைத்தல்.. உருத்து: சினம் கொண்டு (கோபித்து).
வீசின: வீசினவான படைக்கலம் - வினையாலணையும் பெயர்.
கானகம் என்பவைகளில் அமைந்த ‘’அகம்’’ அடைமொழி.. ‘மீன்நகு’
இதில் நகுதல்: ஒளிர்தலாம். திரைக்கடல்: அலைகளை உடைய கடல்.
இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. போர்த்தது+என
போர்த்தென என நின்ற தொகுத்தல் விகாரம்.
அரக்கர்கள் சினம் கொண்டு வீசிய படைக்கலங்கள் - பருவகால
மழை போல. அந்தக் காட்டையே மூடிவிட்டன. வேள்விச் சாலையை
முற்றுகையிட்டுச் சுற்றி வளைத்துக் கொண்ட அசுரசேனை அலைகளை
உடைய கடலே மேலெழுந்து - வானத்தை மூடிக் கொண்டது போலக்
காணப்பட்டது. 44
