வேள்விப் படலம் - 454

bookmark

திரிவிக்கிரமன் உலகளந்தமை

454.

‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி. அப்புறம்
சென்று பாவிற்றிலை. சிறிது பார் எனா;
ஒன்ற. வானகம் எலாம் ஒடுக்கி. உம்பரை
வென்ற கால் மீண்டது. வெளி பெறாமையே.
 
நின்ற கால்  - நிலத்தில் ஊன்றி நின்ற கால்; மண் எலாம் நிரப்பி
-  நிலத்தின்  பரப்பை  யெல்லாம்  மூடி; பார் சிறிது எனா - இப்பூமி
சிறிய  அளவுடைய  தென்று;  அப்புறம்   சென்று  பாவிற்றிலை  -
அப்புறம்  போய்ப்   பாவவில்லை; உம்பரை வென்ற  கால் - வானம்
சிறிதாகுமாறு மேலே  நீண்டு  உயர்ந்து  வென்ற  காலானது;  வானகம்
எலாம் ஒன்ற ஒடுக்கி  -  வானத்தை  எல்லாம்  ஒருமிக்கச் சிறிதாகும்
படி  தனக்குள்  ஒடுக்கி;   வெளி   பெறாமையால்   மீண்டது   -
மேலும்   இடம் கிடைக்காமையால் மீண்டது.   

நின்ற:   ஊன்றிய.  நிரப்புதல்:  மூடுதல். பாவிற்றிலை: பாவவில்லை
‘’பார்   சிறிதெனா  அப்புறம்  சென்று  பாவிற்றிலை’’  என்றது.  பூமி
விரிந்தால்.  அதுவும் விரியும்  என்னும்  கருத்தை உள்ளடக்கி் நின்றது.
உம்பர்:  வானம். ஒடுக்கி: உள்ளடக்கி. வெளி: இடம். ஒன்ற: ஒரு  சேர.
எனா: (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்).                 35