வேள்விப் படலம் - 452

bookmark

மாவலி வாமனனுக்கு மூன்றடி மண் தருதல்

452.

முடிய இம் மொழி எலாம்
   மொழிந்து. மந்திரி.
‘’கொடியன்’’ என்று உரைத்த சொல்
   ஒன்றும் கொண்டிலன்;
‘’அடி ஒரு மூன்றும். நீ.
   அளந்து கொள்க’’ என.
நெடியவன் குறிய கை
   நீரில் நீட்டினான்.
 
இம்மொழி  யெலாம் முடிய மொழிந்து -  இத்தகைய   நீதிகளை
எல்லாம்   முற்றும்  எடுத்துச்  சொல்லி;  மந்திரி  கொடியன்  என்று
உரைத்த    சொல்   -   அமைச்சனும்.   புரோகிதனுமான  சுக்கிரன்
வாமனனைக்     கொடியன்   என்று   கூறிய   சொற்களை;  ஒன்றும்
கொண்டிலன்  -  ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி; நீ அடி ஒரு
மூன்றும்  -  (வாமனனைப்  பார்த்து)   நீ   என்னைக்  கேட்ட அந்த
மூன்றடி அளவுள்ள நிலத்தை; அளந்து கொள்க என - உனது காலால்
அளந்து  கொள்க  என்று சொல்ல; நெடியவன் குறிய கை - திருமால்
தனது குறுங்கைகளை; நீரில் நீட்டினான் - மாபலி வார்த்த தான நீரில்
நீட்டினான்.

முடிய:  முடிவு  பெற.  ‘மொழி’   என்பது   சொல்வாகு  பெயராய்
நீதிமொழிகளை     உணர்த்தி    நின்றது.    சுக்கிரன்   ஆசிரியனும்
அமைச்சனுமாம்.   ‘ஒன்றும்’   இங்குச்  சிறிதும்  என்று பொருள் தந்து
நின்றது.   ‘ஒரு’   சிறுமை  குறித்த சொல்லாகும். நெடியவன்: திருமால்.
இங்குக்  குறளுருவான  வாமன வடிவத்திலேய - பின் எடுக்கப் போகும்
பேருருவம்    அடங்கியிருக்கிறது   என்பதை  உணர்த்த  ‘’நெடியவன்
குறியகை’’ என்றார் என்க.                                   33