வேள்விப் படலம் - 444
வெள்ளி கூறிய தடையுரை
444.
‘’கண்ட திறந்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும். மேல்நாள்.
உண்டவன்ஆம்; இது உணர்ந்துகொள்’’ என்றான்.
ஐய! இது கண்ட திறத்திது கைதவம்- தலைவனாகிய மாவலியே!
ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம் கபடமானது;
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல் - (இதனை) மேகம்
போன்ற நிறமுடைய குறள் வடிவம் என நினைக்காதே; அண்டமும்
முற்றும் அகண்டமும் - இந்தப் பூமியையும் அதனைச் சூழ்ந்துள்ள
பேரண்டங்களையும்; மேல் நாள் உண்டவன் ஆம் - முன் ஒரு
காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்; இது உணர்ந்து கொள்
என்றான் - இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.
திறம்: உணர்ச்சித் திறம். கைதவம்: பொய்மை. கொண்டல்: மேகம்.
குறள்: குறுகிய வடிவம். கொள்ளேல்: கொள்ளாதே. எதிர்மறை ஏவல்
வினைமுற்று. முற்றுதல்: சூழ்தல். அல்லது வளைதல். கண்டறிந்து:
ஆராய்ந்து உணர்ந்த போது. அண்டம்: உலகம். அகண்டம்:
பேரண்டம்.
அசுர குருவாகிய சுக்கிரன். மாவலியை நோக்கி. ஐய!
ஆராய்ந்துணர்ந்தல் இந்த வடிவம் வஞ்சகம்; பொய்மையானது.
கொண்டல் நிறத்துக் குறள் வடிவம் என்று எண்ணாதே. அண்டமும்
அகண்டமும் உண்டவனான திருமாலே என்பதைத் தெரிந்துகொள்
என்றான் என்பது கருத்து. 25
