வேள்விப் படலம் - 443

bookmark

மாவலி வழங்கலும் வெள்ளி தடுத்தலும்

443.

‘சிந்தை உவந்து எதிர். ‘’என் செய?’’ என்றான்;
அந்தணன். ‘’மூஅடி மண் அருள். உண்டேல்;
வெந் நிறலாய்! இது வேண்டும்’’ எனாமுன்.
‘’தந்தனென்’’ என்றனன்; வெள்ளி. தடுத்தான்;
 
சிந்தை   உவந்து  - (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து;
என்  செய என்றான் -  மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும்
என்று  கேட்டான்;   அந்தணன்  - அதைக் கேட்ட வாமனனாக வந்த
திருமால்;  வெந்திறலாய்  -  கொடிய  வலிமை  வாய்ந்த  மாவலியே;
உண்டேல்  மூவடிமண் அருள் இது வேண்டும் - உள்ளதாயின் என்
காலால்   மூன்றடி  மண்  தருவாயாக  இதுவே வேண்டும்; எனா முன்
தந்தனென்   என்றான்  -  என்று  சொல்லுதற்கு  முன்பே  (மாவலி)
தந்தேன்  என்றான்; வெள்ளிதடுத்தான் - அப்போது அசுர குருவாகிய
சுக்கிரன் த்ராதே என்று தடுத்தான்.

சிந்தை:  மனம்.  உவந்து: மிக மகிழ்ந்து. உண்டேல்: உள்ளதாயின்
(என்றது  உற்சாகத்தின் பொருட்டு). வெந்திறல்: வெம்மையாகிய திறல்
(பண்புத்தொகை)  எனா:  செயா  என்ற  வாய்பாட்டு  வினையெச்சம்.
எனாமுன்:  என்று  கூறி  முடிப்பதற்கு முன்பே. தந்தனென்: தந்தேன்
விரைவு  பற்றி  வந்த  இறந்த  கால வினைமுற்று. தருவேன் என்பது
பொருள்.  வழு  அமைதி.  சுக்கிரன்  என்ற  வடமொழிப்  பெயரின்
தமிழாக்கம் வெள்ளி.                                      24