வேள்விப் படலம் - 440
வாமனன் மாவலியிடம் செல்லுதல்
440.
‘முப்புரிநூலினன். முஞ்சியன். விஞ்சை
கற்பது ஓர் நாவன். அனல் படு கையன்.
அற்புதன். - அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு - சென்றான்.
அற்புதன்- ஆச்சரிய மாயையில் வல்லவனாகிய திருமால்; முப்புரி
நூலினன் - மூன்றாகத் திரிக்கப்பட்ட பூணூலை அணிந்தவனாகியும்;
முஞ்சியன் - முஞ்சி என்னும் புல்லாலாகிய அரைநாணை
உடையவனாகியும்; விஞ்சை கற்பது ஓர் நாவன் - வேதவித்தையைச்
சொல்லுகின்ற நாவைக் கொண்டவனாகவும்; அனல்படு கையன் -
அனல் தோன்றும் கையை உடையவனாவும்; அற்புதரே அறியும் -
அற்புத ஞானம் வாய்ந்த மேலோர்களே அறிந்து கொள்ளத் தகுந்த
தான; தன் சிற்பதம் ஒப்பது ஓர் - தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய
ஒரு; மெய்க்கொடு சென்றான் - வடிவத்தை எடுத்துக் கொண்டு
மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.
முப்புரி நூல்: பூணூல். புரிதல்: திரித்தல். முஞ்சி: ஒரு வகைப்புல்.
பிரமச்சாரிகள் அணிய வேண்டிய அரை நாண் என்பர். ‘அனல்
படுகையன்’ பிரமசரிய நோன்புக்குரிய சமிதாதானம் என்னும்
வேள்வியைச் செய்யும் பழக்கத்தால் தோன்றிய அவ்வனல் தோன்றும்
கையை உடையவன் என்பது பொருள். ‘கொடு’ கொண்டு என்பதன்
இடைக்குறை. விஞ்சை கற்பதொர் நா: வேத மந்திரங்களாகிய
வித்தையை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாவாகும். 21
