வேள்விப் படலம் - 437

bookmark

மாவலி வேள்வி முற்றித் தானம் வழங்கக் கருதுதல்

437.

‘செய்தபின். வானவரும் செயல்ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்தம்பால்.
வையமும் யாவும் வழங்க. வலித்தான்;
 
செய்த   பின்  -  மாவலி  அவ்வாறு  விண்ணையும் மண்ணையும்
வவ்வுதல்  செய்த  பிறகு;  வானமும்  செயல் ஆற்றா - தேவர்களும்
செய்ய  இயலாத;   நெய்தவழ்  வேள்வியை  -  நெய்மிகுந்து  அவி
வழங்கும்  வேள்வியை;  முற்றிட  நின்றான்  -  செய்து  நிறைவேற்ற
நிலைத்தவனாகி;  ஐயம்  இல்  சிந்தையர்  -  ஐயமில்லாத  உள்ளம்
உடையவராகிய;  அந்தணர்   தம்பால்   -   அந்தணர்களிடத்திலே;
வையமும்   யாவும்  -  பூமியையும்  மற்றெல்லாவற்றையும்;  வழங்க
வலித்தான் - வழங்கத் துணிந்தான்.

செயல்:   செய்தல்  (?தொழிற்பெயர்).  ஆற்றா: முடியாத. ‘நெய்தவழ்
வேள்வி’   என்று   குறிப்பால்  ‘ஊன்’   விலக்கியது  குறிக்கப்பட்டது.
நின்றான்: முற்றெச்சம் (நின்றானாகி).  வலித்தான்:  துணிவு கொண்டான்.
தேவர்களும் செய்ய முடியாத வேள்வியைச்  செய்து  முடிக்க  நினைத்து
-   அந்த   வேள்விக்   காலத்தே   வையமும்  யாவும்  -   ஐயமில்
சிந்தையரான அந்தணருக்கு வழங்கத் துணிந்தான் என்பது கருத்து.   18