வேள்விப் படலம் - 438

bookmark

தேவர்முறையீடும் திருமால் அருளுதலும்

438.

‘ஆயது அறிந்தனர் வானவர். அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
‘’தீயவன் வெந் தொழில் தீர்’’ என நின்றார்;
நாயகனும். அது செய்ய நயந்தான்.
 
வானவர்  ஆயது அறிந்தனர்  -  தேவர்கள்  மாவலியின் அந்தச்
செய்தியைத் தெரிந்தனர்; அந்நாள் மாயனை வந்து வணங்கி நின்றார்
-   அப்போது   திருமாலை   வந்து  வணங்கி  நின்றனர்;   தீயவன்
வெந்தொழில் தீர் என  இரந்தார்  -  கொடியவனான  மாவலியினது
கொடுந்  தொழிலைத்  தீர்ப்பாய் எனக் கெஞ்சிக் கேட்டனர்; நாயகனும்
அது  செய்ய நயந்தான் - தலைவனாகிய திருமாலும் அக்காரியத்தைச்
செய்ய ஒருப்பட்டான்.

ஆய+அது:     ஆயது; அகரம் தொக்கது. அறிந்தனர்:  முற்றெச்சம்.
மாயன்:  மாயச்  செயல்களில்  வல்லவன். இரத்தல்: குறை   வேண்டல்.
வெந்தொழில்:  கொடுந்தொழில்  (பண்புத்  தொகை). நாயகன்:  உலகத்
தலைவன். நயத்தல்: சொல்லத் தொடங்குதல்

மாவலியின்   அச்செயலறிந்த வானவர் திருமாலிடம் வந்து வணங்கி.
இத்தீயவனது கொடுந் தொழிலைத்  தீர்க்க வேண்ட மாயவனும் அதைச்
செய்ய ஒருப்பட்டான் என்க.                                 19